முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவை ஏன் பா.ஜ.க முன்னிறுத்துகிறது?

Image result for பன்னீர்செல்வம் + தீபா
சில நண்பர்கள் இது பா.ஜ.கவின் பார்ப்பனிய சதி என்கிறார்கள். ஆனால் எனக்கு பா.ஜ.கவின் நோக்கம் வேறு என படுகிறது. அதிமுகவில் தீபாவுக்கான இடத்தை பா.ஜ.க ஆரம்பத்திலேயே சின்னதாய் கோடிட்டு உருவாக்கி விட்டார்கள். அவரை தயாராக்கி இப்போது சரியான சந்தர்பத்தில் கொணர்ந்திருக்கிறார்கள். முக்கியமான காரணம் கடந்த சில நாட்களில் ஒ.பி.எஸ் பெற்றுள்ள பரவலான மக்கள் ஆதரவு. அவரை எதிர்க்கிறவர்கள் கிட்டத்தட்ட யாரும் இல்லை எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட ஒ.பி.எஸ் பக்கம் என்கிறார்கள் (இதை ஸ்டாலின் மறுத்தாலும் கூட). இப்போது சசிகலா ஜெயிலுக்கு போவது உறுதியாகி விட்ட பின், வரும் நாட்களில் கணிசமான எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு தாவுவார்கள் எனில் அதிமுகவின் ஒரே “சிங்கம்” ஒ.பி.எஸ் தான்.
 ஒரு பக்கம் மக்கள் ஆதரவு, மறுபக்கம் கட்சி மீதான முழு அதிகாரம். முன்பில்லாத அளவு அதிகாரமும் மக்கள் ஆதரவும் கொண்ட வேறொரு மனிதர் ஆகி விடுவார் ஒ.பி.எஸ். அவரை இது போல் ஒரு வருடம் ஆளவிட்டால் “அடிமைப்பெண்” எம்.ஜி.ஆர் நிமிர்ந்து நேராக நடக்க கற்றுக் கொண்ட கதையாகி விடும். அதை பா.ஜ.க விரும்பாது. எப்போதும் ஒ.பி.எஸ் தலைக்கு மேல் கத்தி தொங்க வேண்டும். அவர் பலவீனமானவர் எனும் உணர்வில் இருந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவரை ஆட்டி வைக்கவும் அதிமுகவை தன் கைக்குள் வைத்திருக்கவும் பா.ஜ.கவால் முடியும். அதனால் ஒ.பி.எஸ்ஸுக்கு தீபா மூலமாக ஒரு சேதியை விடுக்கிறார்கள். ”எங்களால் உன்னைப் போல் மற்றொரு பொம்மையை உருவாக்கி ஆட்சியை கையகப்படுத்த முடியும்.” ஆனால் ஒ.பி.எஸ் சமர்த்தோ சமர்த்து. உடனே தீபாவுக்கு இணக்கம் தெரிவிக்கிறார். அவர் வீட்டில் வைத்து தீபாவுக்கு ஆரத்தி எடுக்கிறார். நான் எப்போதும் உங்கள் அடிமை தான் என பா.ஜ.கவுக்கு உரக்க மறுசெய்தி விடுக்கிறார்.
வரும் நாட்களில் இது போல் பல பொறிகளை, கண்ணி வெடிகளை, ஒ.பி.எஸ் நடக்கும் வழிகளில் எங்கும் பா.ஜ.க வைத்துக் கொண்டே இருக்கும். அவரும் தனக்கு அடிபடாதது போல் நடித்துக் கொண்டே இருப்பார்.

பா.ஜ.க இதன் மூலம் அதிமுகவை செங்கல் செங்கல்லாக பெயர்த்து அடிக்க ஆரம்பித்திருக்கிறது. 1972இல் ஆரம்பித்து திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கிறது அதிமுக. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுத்து அவரை திமுகவில் இருந்து துரத்த கலைஞர் முயன்று தோற்றார். விளைவாக அதிமுக தோன்றியது. எம்.ஜி.ஆர் எனும் புயலில் அவர் பஞ்சாக பறந்து போனார். அடுத்து எம்.ஜி.ஆர் மரணத்துக்கு பிறகேனும் தனக்கு நியாயமான ஆட்சி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என அவர் நம்பி இருக்கலாம். அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு ஒரு வலுவான வாரிசு அமையக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு முடிந்த வரை இடைஞ்சல்கள் கொடுத்தார். சட்டமன்றத்தில் ஜெயா முதலில் நுழைந்த போது அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு எதேச்சையாய் நடந்தது அல்ல. ஆனால் என்ன தான் விரட்டியும் ஜெயா நின்று போராடி வென்றார். கலைஞரின் அரசியல் வாழ்வில் இரண்டாவது இருண்ட காலம் துவங்கியது. ஜெயலலிதாவை அதற்கு தேர்தலில் அவர் முறியடித்த பின் அத்தோடு நில்லாமல் ஊழல் வழக்குகளில் அவரை சிறையில் தள்ளினார். அங்கே கைதிகள் யாரும் பயன்படுத்தாத சிதிலமான சிறையில் தன்னை அடைத்து வைத்து அச்சுறுத்த பார்த்ததாக ஜெயலலிதா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். ஆரம்ப நாட்களில் தினமும் கலைஞர் ஜெயிலருக்கு போன் செய்து ஜெயலலிதா அழுகிறாரா என விசாரிப்பாராம். ஜெயலலிதாவை ஒரு பக்கம் அச்சுறுத்தியும் ஊழல் வழக்குகள் மூலம் அல்லல்படுத்தியும் அரசியலில் இருந்து துரத்த அவர் விரும்பி இருக்கலாம். முக்கியமான விசயம் ஜெயலலிதா மூலம் மீண்டும் அதிமுக எழுந்து வந்து தனக்கு துர்கனவாய் தொடரக் கூடாது என பயந்தார். அந்த வேளையில் ஜெயலலிதா மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்தாலும் கலைஞர் தன் எதிர்கால அரசியல் வாழ்க்கையின் முக்கிய தடையாக ஜெயலலிதாவையே கண்டார். ஆனால் வழக்குகள், சிறை எதுவும் ஜெயலலிதாவை பின்வாங்க செய்யவில்லை. ஜெயலலிதா எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் மக்கள் அவரை மீளமீள தேர்ந்தெடுத்தனர். கலைஞர் மீது என்றுமே இந்தளவு பரிவை மக்கள் காட்டியதில்லை. ஜெயலலிதா தனது பண பலம் மற்றும் நிர்வாகத்திறன் மூலம் அதிமுகவை உறுதியான உள்கட்டமைப்பு கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்தார். ஜெயலலிதா இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருந்தால் கலைஞரின் அரசியல் வாழ்வும் இருளாகவே முடிந்திருக்கும். எம்.ஜி.ஆரை விட, ஜெயலலிதாவை விட ஆளும் தகுதியும் அனுபவமும் மிக்கவர் கலைஞர் தான். அதிமுக எனும் கட்சி தோன்றாமல் இருந்திருந்தால் கலைஞருக்கு போட்டியாக இங்கு மற்றொரு தலைவர் வந்திருக்க முடியாது. அவரே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆண்டிருப்பார். ஆனால் இப்போது முதன்முறையாக தன் கனவு நனவாவதை - அதிமுக இல்லாத ஒரு தமிழகம் உருவாகிறதை - தன் கண்முன் காண்கிறார்.
மக்கள் ஆதரவு என்பது பருவநிலை போன்றது. மாறிக் கொண்டே இருக்கும். மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் அதிமுகவை கட்டுப்படுத்தி அதற்கு தெளிவான பாதை அமைத்துக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் சசிகலா மட்டும் தான். அதிமுக மாதிரியான கட்சி அவரை மாதிரியான ஆளிடம் மட்டுமே அடங்கும் காளை. அவர் கையில் கட்சி ஒரு வருடம் இருந்தால் இயல்பாகவே மக்கள் ஆதரவை பல்வேறு நலத்திட்டங்கள், டிராமா மூலம் உருவாக்கி இருப்பார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சசிகலா துடைத்தெறியப்பட்டு விட்டார். இதை இரண்டு விதமாக பார்க்கலாம். தமிழகத்துக்கு நிச்சயம் நல்லது. அதிமுகவுக்கு பாதகமானது. இனி அதிமுக தொடர்ந்து உட்கட்சி பூசல்கள் கொண்ட வலுவான தலைமை அற்ற கட்சியாக நீடிக்கும். அதன் மூலம் மக்கள் ஆதரவை முழுக்க இழக்கும். குறிப்பாக ஒ.பி.எஸ் எந்த விதத்தில் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவராக மலர பா.ஜ.க அனுமதிக்காது. பா.ஜ.க தீபா உள்ளிட்ட வேறு பல போட்டி முனைகளை அதிமுகவுக்குள் ஏற்படுத்தி வளர்த்து விட்டபடி இருக்கும். ஒ.பி.எஸ் ஒரு உயரத்துக்கு மேல் வளர்வதாக தெரிந்தால் இப்போது சசிகலா பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அவருக்கு எதிராக பா.ஜ.க கலகத்தை ஏற்படுத்தும். வருமான வரி ரெய்டுகள் நடத்தும். ஒ.பி.எஸ்ஸை ஒரு மரத்தை போல் சாய்க்கும். அதாவது கலைஞரால் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக செய்ய முடியாத ஒன்றை இப்போது பா.ஜ.க கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.
இப்படி திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரே நோக்கம், இலக்கு, கொள்கை – அதிமுகவை நிர்மூலமாக்குவது.
அதிமுகவின் செல்வாக்கு, உள்கட்டமைப்பு மற்றும் தொண்டர்களை பயன்படுத்தி பா.ஜ.க இங்கு குறிப்பிடும்படியான இடங்களை அடுத்த தேர்தலில் வெல்லுமா என்பது இப்போதைக்கு விடையில்லாத கேள்வி. ஆனால் இப்போதைக்கு பா.ஜ.கவினர் தாம் திமுகவின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாய் எதிர்காலத்தில் சட்டமன்றத்தில் இடம் பெறுவோம் கனவு காணலாம்.

இதன் மூலம் திமுகவுக்கு கிடைக்கும் பலன் பலமடங்கு பெரிது. அடுத்த சில பத்தாண்டுகளில் திமுகவுக்கு போட்டியே இருக்காது. 

கருத்துகள்

ஏகாந்தன் ! இவ்வாறு கூறியுள்ளார்…
அதிமுக-வை சிதைப்பதில் திமுக-வும் பாஜக-வும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. வளர்ந்துவரும் சூழலை அவை எப்படித் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் என்பது பொருத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.

அடுத்த சில பத்தாண்டுகளுக்கு திமுக-விற்கு போட்டியே இருக்காது என்கிறீர்கள். அரசியல், குறிப்பாக தமிழக அரசியல் இப்படிச் சின்னச் சின்னக் யூகக் கட்டங்களுக்குள் கச்சிதமாக வந்து உட்காருகிற சங்கதி அல்ல.

-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...