Skip to main content

பா.ஜ.கவின் பிளவுபடுத்தி ஆளும் காலனிய சூழ்ச்சி

பா.ஜ.க இவ்வளவு விரைவில் ஒ.பி.எஸ்ஸை கைவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவருக்கும் மத்திய அரசுக்குமான உறவில் ஏதோ ஒரு பிசகு நேர்ந்திருக்கிறது. ஒ.பி.எஸ்ஸின் புகழ் ஒரு பக்கம் உயரும் போது பா.ஜ.கவினர் தீபாவை முறுக்கேற்றி முன்னுக்கு கொண்டு வர துவங்கினர். அப்போதே பா.ஜ.கவின் பிளவு படுத்தி ஆளும் காலனிய உத்தியை கவனித்தேன். ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் அவரை தெருவில் விடுவார்கள் என நான் நினைக்கவில்லை.

மத்திய அரசு நினைத்தால் சசிகலா குழுவினரின் அடித்தளத்தை பெயர்க்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் பா.ஜ.கவின் தேவை அத்தரப்பை அழிப்பது அல்ல. கட்டுப்படுத்துவது. அதாவது பூனையையும் சீண்டி விட வேண்டும்; எலியையும் பாதுகாக்க வேண்டும். சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியதுடன் பா.ஜ.கவின் முதல் தேவை ஓரளவு நிறைவேறி விட்டது. பூனைக்கு அது மணி கட்டி விட்டது.
 தனக்கு எதிராக தீர்ப்பு வருமென சசிகலாவுக்கு நிச்சயம் முன்பே தெரிந்திருக்கும். அதனால் தான் அவர் அவசரமாய் ஒ.பி.எஸ்ஸை பதவியில் இருந்து இறக்கினார். எம்.எல்.ஏக்களை தன் ஆணைக்கு பணிய வைத்தார். தன்னால் நிச்சயம் முதல்வர் ஆக முடியாது என அவர் அறிவார். ஜெயிலில் இருக்கப் போகிற அவர் ஏன் அவசரமாய் ஆட்சியை கைப்பற்ற முயல வேண்டும்? இங்கு தான் சூட்சுமம் உள்ளது. அதிகாரத்தில் இருப்பது சசிகலாவை பொறுத்த மட்டில் அவரது பெரும் சொத்துக்களை காப்பாற்றவும், வழக்கில் இருந்து ஏதாவது ஒரு வழியில் தப்பிக்கவும் அவசியம். சசிகலா கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் தங்கி இருந்து வியூகங்கள் வகுக்கும் போது தம்பிதுரை போன்றோர் தில்லியில் மத்திய அரசின் அதிகார மையத்தை நெருங்க முயன்று கொண்டிருந்தனர். சீராய்வு மனு தாக்கல் செய்தனர். ஜெயிலுக்கு போகும் முன்பு அவர் எம்.எல்.ஏக்களிடம் “நான் மூன்று மாதங்களில் திரும்புவேன்” என சொல்லி விட்டு சென்றார். இதன் பொருள் என்ன? அவருக்கு இந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? மத்திய அரசுடனான பேரம் படிந்து விட்டது என்பதில் இருந்து தான் இந்த தன்னம்பிக்கை வருகிறது. அதனால் தான் எடப்பாடியார் முதல்வரானதும் மோடி அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்கிறார். வெங்கய்யா நாயுடு தன் ஆசிகளை அளித்து “மத்திய அரசுடன் இணக்கமாக இருங்கள்” என ஆலோசனை தெரிவிக்கிறார். இதெல்லாம் ஒன்றை காட்டுகிறது. இங்கு அரங்கேறிய எதுவும் பா.ஜ.கவின் கையை மீறி நடந்ததல்ல. எது நடக்க வேண்டுமே அதுவே நடந்தது!
மோடியும், வெங்கய்யா நாயுடுவும் சசிகலா குழுவினருடன் கைகுலுக்குகிறார்கள் என்றால் ஹெச்.ராஜா ஒ.பி.எஸ்ஸுக்கு அரைமணி நேரம் ஆறுதல் கூறுகிறார். இன்னொரு பக்கம் குருமூர்த்தி போன்றோர் தீபாவுக்கு ஊக்கமளிக்கிறார்கள். பா.ஜ.கவின் திட்டமே இவ்வாறு அதிமுகவை பல்வேறு குழுக்களாய் பிளந்து அதிகார சமநிலையின்மையை உருவாக்குவது தான். ஜெயிலில் உள்ள சசிகலா மோடியின் பெருவிரலின் கீழ் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய இடைஞ்சல்களை மோடி அளித்தும் அவர் ஒரு சொல் கூட மோடியை பழிக்கவில்லை. பதிலுக்கு திமுக தமக்கு எதிராய் சதி செய்வதாய் பழித்தார். இது என்ன அபத்தம்? உண்மையான வில்லன்களை விட்டு விட்டு ஏன் வேடிக்கை பார்ப்பவரை நோக்கி அவர் சாட வேண்டும்? ஏனென்றால் அவருக்கு மோடியின் தயவு அவசியம். (இன்னொரு பக்கம் ஒ.பி.எஸ்ஸை ஆதரிக்க வேண்டி உள்ள திமுகவும் பா.ஜ.கவை சாடுவதை தவிர்க்கிறது. இப்படி தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளுமே அம்மணமாய் ஊர்வலம் போகும் ராஜாவை பார்த்து மௌனிக்கிறார்கள்.)

 இவ்வளவு எம்.எல்.ஏக்களை சசிகலா கூவத்தூரில் குவித்தது ஆட்சியை கைப்பற்றும் வெறியில் மட்டும் அல்ல. அவரது முக்கிய நோக்கம் தன்னை காப்பாற்றுவது. அதற்கு பேரம் பேச அவருக்கு அதிகாரம் வேண்டும். அதற்கு இந்த எம்.எல்.ஏக்கள் வேண்டும். ஒருவேளை அவர் ஆரம்பத்திலேயே கட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல் ஒதுங்கி இருந்தால் இந்த வழக்கில் அவரை முழுக்க நசுக்கி இருப்பார்கள். இப்போது நிலைமை வேறு. மத்திய அரசு கொடுத்த கடுமையான அழுத்தத்திற்கும் மசியாமல் அவர் ஒ.பி.எஸ்ஸை கவிழ்த்து விட்டார். அக்னி பரீட்சையில் தேறி விட்டார். அதனால் தான் ஆளுநர் இப்போது அவர் தேர்வு செய்த நபரை முதல்வராக பதவி பிரமாணம் செய்வித்திருக்கிறார். இவ்வளவு காலம் பொறுத்த ஆளுநர் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்கலாமே? எம்.எல்.ஏக்களின் ஒற்றுமையை உடைத்திருக்கலாமே? ஆனால் ஆளுநரின் திடீர் முடிவு பா.ஜ.கவுக்கும் சசிகலாவுக்குமான ஏதோ ஒரு பேரம் முடிவுக்கு வந்து விட்டதை காட்டுகிறது. ஒ.பி.எஸ் இனி தேவையில்லை எனும் பா.ஜ.கவின் முடிவையும் காட்டுகிறது.
இந்த ஆட்டத்தில் சசிகலா அடைந்த பலன் என்ன என்பது சில மாதங்களில் தெரிந்து விடும். பா.ஜ.க அடைந்த பலன்? தொடர்ந்து தலைமையை பலவீனப்படுத்துவதன் மூலம் அதிமுகவின் உண்மையான பாஸ் தான் மட்டுமே என மோடி உணர்த்தி இருக்கிறார். இனி ஒவ்வொரு சிறு அசைவையும் அவர்கள் தில்லியில் கேட்டுத் தான் நடத்த முடியும். இந்த பிடியை வலுப்படுத்த அடுத்து அவர்கள் எடப்பாடியாருக்கும் பல்வேறு நெருக்கடிகளை, போட்டி முனைகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் பா.ஜ.க ஒரு குறிப்பிட்ட அதிகார வட்டத்தை ஆதரித்து இன்னொன்றை கைவிடும். அதன் மூலம் அதிமுகவை தொடர்ந்து ஒரு சமநிலையற்ற தடுமாற்றத்தில் வைத்திருக்கும். உண்மையிலேயே அதிமுகவை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் நமக்கு இன்னும் பல பிரேக்கிங் நியூஸ்கள் வர இருக்கின்றன.

எல்லாம் அவன் செயல்!

Comments

syedabthayar721 said…
அருமையான அலசல் . தாய் இல்லா பிள்ளை கதையாகி விட்டது அதிமுக நிலைமை !!!

M. செய்யது
Dubai

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...