Skip to main content

சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்

தருண் விஜய் சர்ச்சையை ஒட்டி சில நண்பர்கள் எழுதியிருந்த விசயம் நாம் எப்படி கறுப்புத் தோல் மீது தாழ்வுணர்வு கொண்டுள்ளோம், அதனாலே சிவப்பான பெண்களை அதிகம் விரும்புகிறோம் என்பது. நாம் எப்போதாவது கறுப்பான பெண்களை பொருட்படுத்தி காதலித்திருக்கிறோமா? கறுப்பான நாயகிகளுக்கு கவனம் கொடுத்திருக்கிறோமா? ஆண்களே தமது கறுப்பு நிறம் குறித்து லஜ்ஜை கொண்டதில்லையா?
ஆனால் நமது பாலியல் தேர்வை நாம் இப்படி எளிமையாக சுருக்க முடியாது என நினைக்கிறேன். பாலியல் தேர்வு இன்னும் சிக்கலானது. கறுப்பை எடுத்துக் கொள்வோம். கறுப்பு ஒரு குறைபட்ட நிலையை சுட்டுகிறது என நம்புகிறோம். சரி. அதனாலே நாம் கறுப்பான பெண்களை விரும்பவில்லை. அதுவும் சரி. இது சரி என்றால் மற்றொரு கேள்வி வருகிறது. ஏன் மேல்சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களை விரும்புகிறார்கள்? ஏன் அவ்வளவு போராடி, பெற்றோரை, உறவினரை பகைத்து, ரிஸ்க் எடுத்து “குறைபட்டவராய்” நாம் நம்பும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் ஒருவனை ஒரு பெண் காதலிக்கிறாள்? கறுப்பு பற்றி நாம் சொல்வது உண்மையெனில் ஒரு பெண் தன்னை விட மேலான சாதி (என நம்பப்படுகிற) ஆணைத் தானே தேர்வு செய்ய வேண்டும்?

 உதாரணத்துக்கு, சிவப்பான ஆண்கள் அதிகமுள்ள ஒரு சாதியை சேர்ந்த ஒரு பெண் ஏன் கறுப்பான மாற்றுசாதி ஆணை தேர்வு செய்ய வேண்டும்? நமது ”கறுப்பு தாழ்வானது” எனும் லாஜிக்படி அப்பெண் சிவப்பான சொந்த சாதி ஆணைத் தானே காதலிக்க வேண்டும்? எப்படி சொந்த சாதிக்குள் மணக்கிற பெண்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு சாதிக்கு வெளியே காதலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்? ராமதாஸ் போன்றோருக்கு புரியாத புதிரே இது தான்.
இன்ன உடல் தகுதி தான் பெண்களை ஈர்க்கிறது என குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. இரண்டு சாதியிலும் உயரமான ஆரோக்கியமான புத்திசாலியான ஆண்கள் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விசயம் தான் பாலியல் தேர்வை தீர்மானிக்கிறது. வித்தியாசம்! நாம் தினம் தினம் சந்திக்கிற மனிதர்களில் இருந்தே சற்றே மாறுபட்டவராய், அதேநேரம் நாம் வழக்கமாய் ஏற்கிற குணநலன்களுடன் அவர் இருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணங்களாய் மனிஷா கொய்ராலா மற்றும் ஏமி ஜேக்ஸனை சொல்லலாம். மனிஷா மங்கோலிய தோற்றம் கொண்ட நேப்பாளி என்றாலும் இந்திய முக இயல்புகளும் கலந்தவர். முழுமையான மங்கோலிய தோற்றம் கொண்ட ஒரு பெண்ணுக்கு இங்கு, அவர் என்னதான் பேரழகி என்றாலும், நட்சத்திரமாக வாய்ப்பு அமையாது. ஏமி ஜேக்ஸனும் அப்படியே இந்திய சாயல் கொண்ட வெள்ளைக்காரி. நாம் பார்த்து ரசிக்கும் நாயகிகள் நாம் வழக்கமாய் பார்க்கும் பெண்களில் இருந்து சற்றே மாறுபட்டவராய் அதேநேரம் முழுக்க மாறுபடாமல் இருக்க ஆசைப்படுகிறோம். கடந்த ஐம்பது வருடத்தில் தமிழ் சினிமாவிலும் இந்தி படவுலகிலும் கோலோச்சிய நாயகிகளை எடுத்துப் பாருங்கள். படவுலகம் கிட்டத்தட்ட பாராளுமன்றம் மாதிரி பெரும்பாலான மாநிலத்தோருக்கும் பிரதிநுத்துவம் அளித்துள்ளதை பார்க்கலாம். சிவப்பு மட்டுமே ஒரே அளவுகோல் என்றால் ஹெமாமாலினி எப்படி இங்கிருந்து அங்கே சென்று இந்தி ரசிகர்களை வென்றார்? வடக்கே இல்லாத சிவப்பான பெண்களா? தமிழில் என்றால் குண்டான பெண்கள், ஒல்லியானவர்கள், மாநிறமானவர்கள், ஆண் தன்மை கொண்ட பஞ்சாபிப் பெண்கள், மொழுமொழுவென்ற மலையாளிப் பெண்கள் என பலரும் கலந்து தான் தோன்றியிருக்கிறார்கள்.
கேரளாவில் கணிசமான பெண்கள் சிவப்பானவர்கள். ஆனால் சமீப காலங்களில் அங்கே வடக்கிந்திய நாயகிகள் அடிக்கடி தோன்றுகிறார்கள். சிவப்பு தான் அளவுகோல் என்றால் அதே மாதிரி பெண்கள் உள்ளூரிலே இருக்கிறார்களே? ஏன் வடக்கே இருந்து கொண்டு வர வேண்டும்?
சரி, கறுப்பான பெண்கள் என்றுமே அதிக அளவில் சினிமாவில் கோலோச்சியதில்லையே? இதற்கு காரணம் நம் தாழ்வுணர்வு அல்ல. கறுப்பு நம் பொது நிறம் என்பதே. நாம் எப்போதும் திரையில் வழக்கத்துக்கு மாறான இயல்புகளையே பார்க்க விரும்புகிறோம். கறுப்பானவர்கள் மீது நமக்குள்ள வெறுப்பு அவர்கள் அதிகமாய் நம்மைச் சுற்றி காணப்படுகிறார்கள் என்பதே. ஆனால் இது கறுப்பு மீதான ஒவ்வாமை மட்டுமல்ல. நம்மைச் சுற்றில் இருப்பவரிடம் தொடர்ந்து காணும் எல்லா இயல்புகள் மீதும் நமக்கு ஒவ்வாமை ஆழ்மனதில் உள்ளது. நாம் நம்மை கடந்து செல்ல ஏங்குறோம். நமது கலைகள், சினிமா, கற்பனை, அறிவு, இறுதியாய் நம் பாலியல் தேர்வு இவ்வாறு நம்மை மீறிச் செல்ல நமக்கு உதவுகின்றன. மேலும் மாற்று சாதிக்குள் / இனத்துக்குள் ஒருவரை துணையாக தேர்ந்தெடுத்தால் உங்கள் வம்சாவளி ஆரோக்கியமாய் அமையும் என அறிவியல் சொல்கிறது. ஆக சங்கர் தன் ரோபோவுக்கு எமி ஜேக்ஸனை தேர்வு செய்திருப்பது வெறுமனே சிவப்புத் தோல் விவகாரம் மட்டும் அல்ல J


Comments

நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். ஆனால், என்னவோ தாழ்ந்த சாதியினர் கருப்பானோர் என்பது போலவும், மேல் சாதியினர் வெளுப்பானோர் என்பது போலவும் எழுதி உள்ளீர்களே ! ஒன்று தங்களுக்கு நிறக்குருடு இருக்க வேண்டும், அல்லது பல சாதி மக்களோடு புழங்காதவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா சாதியினருக்குள்ளும் கருப்பு, வெளுப்பு, என பல நிறமுடையோர் உண்டு.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர். தாழ்வாக கருதப்படும் ஒன்று மீது ஈர்ப்பு வராது என்பது சரியானால் தாழ்த்தப்பட்டோர் மீது எப்படி மேல் சாதிப் பெண்களுக்கு ஈர்ப்பு வருகிறது என்றே நான் கேட்கிறேன். அதாவது பாலியல் தேர்வின் போது நம் மனம் முழுக்க வேறுவிதமாய் இயங்குகிறது. பொதுப்புத்தியில் உயர்வு தாழ்வு என கருதப்படும் மதிப்பீடுகள் பொருட்படுத்தப்படுவதில்லை. நான் குறிப்பிட்டது ஒரு உதாரணம் மட்டுமே.
தங்கள் அன்பான பதிலுக்கு நன்றிகள் சகோதரரே ! உண்மை தான் பாலியல் தேர்வில் எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பார்கள். அது உண்மை தான். எதிர் குணமுள்ள மரபணுக்களே ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கும் என்பது உயிரியல். இந்த குணம் நமது ஆழ்மனதுக்குள் இயற்கை அன்னையால் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நம்மிலிருந்து மாறுப்பட்ட நிறம் குணம் உருவமுடையோர் மீது ஈர்ப்பு நமக்கிருக்கின்றது. அதே சமயம் அந்த மாறுபட்ட நிறம் குணம் உருவமுடையோரிடத்து ஒத்த பண்புகளையும் மனம் எதிர்பார்க்கின்றது. இது சமூகம் விதித்துள்ள திருமணம், என்றில்லை பல காலமாக திருமணம் மீறிய உறவுகளால் கூட கலப்பு நம் இந்திய சமூகத்தில் ஏற்பட்டு வந்திருக்கின்றது. அதே சமயம் அரசியல், அதிகாரம் என்னும் மட்டத்தில் வெண்மை நிறமுடைய அல்லது வெண்மை நிறத்தோர் அதிகம் கொண்ட இனக்குழுக்கள் கருமை நிறத்தோர் அதிகம் கொண்ட இனக்குழுவை நிற அடிப்படையில் இன்றும் அடக்கி தான் வருகின்றது. இந்தியாவில் இருக்கும் பொருளாதார பின்தங்கிய இனக்குழுக்களை ஆழமாக கவனித்தால் அவர்கள் கருமை நிறத்தோர் அதிகம் கொண்டவர்களாகவும், அதிலும் நெக்ராயிடு உருவ சாயல் அதிகம் கொண்டோராகவும் இருக்கின்றனர். இது மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டியது. அதே சமயம் இந்தியா முழுவதுமே மாநிறம் கொண்டேரே எங்கும் விரவி வாழ்கின்றனர். கருமை நிறம் கொண்டோரும், இந்தியா முழுவதும் காணப்படுகின்றனர். தருண் விஜய் அவர்களது தென்னிந்தியர் மட்டுமே கருப்பு உருவம் அதிகம் கொண்டோர் என்ற கருத்து அவர் வட இந்தியாவையே அதிகம் சுற்றி பார்த்திருக்கவில்லை என்பதை காட்டுகின்றது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...