முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஜாதாவும் சாருவும் – துள்ளுவதே இளமை


Image result for கணையாழி கடைசி பக்கங்கள்

அன்புள்ள அண்ணன்,
     நேற்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்கள் வாங்கினேன். டி என் பி சி எஸ் பரீட்சைக்கு டியூட்டி போட்டிருந்தார்கள். மனக்கசப்போடுதான் சென்றேன். ஞாயிற்றுக் கிழமை அதுவுமா இப்படி சாகடிக்கிறாங்களேன்னு நொந்து கொண்டேன். நானூறு ரூபாய் டியுட்டி பார்த்ததிற்கு கொடுத்தார்கள். வாக்கிக் கொண்டு எதாவது புத்தகம் வாங்கலாம் என்ரு பனுவல் புத்தகக் கடைக்குச் சென்றேன். முழுக்க அலசியும் ஒரு புத்தகம் கூட வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. கடைசியாக சுஜாதாவின் புத்தகம். சுஜாதாவின் நாவல்களை வாங்க தற்போதைக்கு மனம் இல்லை.இதுபோன்ற விசயங்களில் நான் கட்டுரைகளையே காசு கொடுத்து வாங்குவது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கணையாழி கண்ணில் பட்டது. இந்த புத்தகத்தின் விசேஷம் என்னவெனில் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணம் செய்த போது ஒரு வாலிபர் வெண்ணிற இரவுகள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். இன்னும் நினைவில் இருக்கிறது. கருப்புக்கலர் சட்டை. அவர்தான் சுஜாதா புளியமரத்தின் கதையைப் பற்றி தன் கட்டுரையில் எழுதியிருப்பதாகச் சொன்னார். அன்றிலிருந்து அந்தப் புத்தகத்தை என்றைக்காவது வாங்க வேண்டும் என்று முடுவு செய்திருந்தேன். நேற்றைக்கு வாங்கி விட்டேன்.


    கல்லூரிக்கு போகும் போதே இரண்டு கட்டுரைகளை வாசித்துவிட்டேன். முன்னுரையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது மிகவும் இரசிக்க வைத்தது. “என் இந்த எழுத்துக்களை பதிப்பில் கொண்டுவர மனுஷ புத்திரன் பிறக்க வேண்டியிருந்தது. அதாவது அவர் பிறப்பதற்கு முன்னமே நான் எழுதிக் கொண்டிருந்தேன்”. அவ்வளவு வயதாகியும் நம் மத்தியில் அவர் ஒரு மார்டன் எழுத்தாளர் என்றுதான் பார்க்க முடிகிறது. அவரது எழுத்துக்களுக்கு வயதாகவே இல்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விசயம். எழுத்தை வாசித்து சுஜாதாவைப் பற்றி யோசித்தால் அவர் ஒரு வாலிபர் போன்ற நினைவைத்தான் அவர் எழுத்துக்கள் ஏற்படுத்துகின்றன. 

  எனினும் எனக்கு அவருடைய நாவல்களை வாசிப்பதற்கான வயது கடந்து விட்டது. இதையே ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதாவின் நாவல்களை பற்றி யாராவது படிக்க வைத்திருந்தால் அனைத்தையும் வாசித்திருந்திருப்பேன். நாட்கள் கடந்துவிட்டன. இப்போதைக்கு அவர் கட்டுரையே மிகச் சிறந்த புத்தகமாக என் வாசிப்புக்கு எடுத்துக் கொள்கிறேன். 
இன்றைக்கு புளியமரத்தின் கதையைப் பற்றிய கட்டுரையை வாசிக்கப் போகிறேன். 

நன்றி 
இரா. அருள் 

அன்புள்ள அருள்
இதைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. சுஜாதா ஒரு அற்புதமான உரையாடல்காரர். நீங்கள் குறிப்பிட்ட இளமை சாருவின் எழுத்திலும் ஓரளவு உண்டு. அது வாழ்க்கையை உற்சாகமாக எதிர்கொள்வதில், சுமைகள் இன்றி கொண்டாடுவதில் இருக்கிறது. அவர்களது எழுத்தில் இந்த முனைப்பு வெளிப்படுகிறது. எனக்கு சுஜாதாவின் எழுத்தைப் படிக்கையில் கண்ணாடிக் குடுவையில் ஒரு மீன் குஞ்சு நீந்துவதை பார்ப்பது போலிருக்கும். மொழியை புத்துணர்வுடன் வைத்திருப்பது எப்படி என சுஜாதாவிடம் இருந்து நாம் தாராளமாக கற்கலாம். அப்புறம், சற்றும் எதிர்பாராத கோணத்தில் இருந்து ஒரு விசயத்தை எதிர்கொள்வது, சில ஆழமான விசயங்களை, போகிற போக்கில் கடந்து போகும் பெண்ணின் துப்பட்டா போல், தொட்டுப் போவது, எதையும் குறைவாய் கச்சிதமாய் ஆனால் அழுத்தமாய் சொல்வது சுஜாதாவின் தனிச்சிறப்புகள். கட்டுரைகளில் சில விசயங்களை இன்னும் விரிவாய் அவர் விவாதித்திருக்கலாமே எனத் தோன்றும். ஆனால் அது அவர் இயல்பு அல்ல. 
அன்புடன்
ஆர். அபிலாஷ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...