முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2ஜி வழக்கு தீர்ப்பும் பேரறிவாளனும்


2ஜி அலைக்கற்றை தீர்ப்பு சம்மந்தமான இரு விதமான முகநூல் பதிவுகளைப் படித்தேன். ஒருவகை - இது கார்ப்பரேட் அரசியல் மோதல்களில் நம் கண்ணுக்குத் தெரியும் சிறு முடிக்கற்றை மட்டுமே. அவர்களுக்குள் அடித்துக் கொண்டு சமரசமாகி விட்டார்கள். பரஸ்பரம் மிரட்ட இந்த வழக்கை பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வழக்கில் குற்றம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் ஒன்று ராஜாவும் கனிமொழியும் அல்ல, அல்லது அவர்கள் மட்டும் அல்ல. பெருந்தலைகள் பலர் எந்த தொல்லையும் இன்றி ஜாலியாக தப்பித்து விட்டார்கள்.



இன்னொரு வகை - இந்த ஊழலே நடக்கலைங்க. ஏனென்றால் அதற்கு ஆதாரமே இல்லைங்க. ஏனென்றால்... இப்படிப் போகிறது அவர்களின் வாதம். தீர்ப்பின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் சிலவற்றை தெளிவாக ஊன்றிப் படித்து ராஜன் குறை எழுதிய பதிவும் இவ்வாதங்களில் ஒன்று. குற்றம் நடந்ததாய் ஒரு மாயை உருவானதே அன்றி, அது நடந்ததாய் எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால் இவ்வழக்கில் யாரையும் தண்டிக்க முடியாது. சொல்லப் போனால் நடந்த ஒரே குற்றம் குமாஸ்தாக்கள் 2ஜி சம்மந்தமான கோப்புகளை சரிவர தொகுத்து சேகரிக்காதது தான்.


ராஜன் குறையுடன் பல விசயங்களில் உடன்படும் என்னால் இவ்விசயத்தில் முடியவில்லை.
ஆதாரம் இல்லாமல் தண்டிக்க முடியாது என்றால் ராஜீவ் காந்தி வழக்கில் ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக பேரறிவாளனை ஏன் இன்னும் சிறையில் வைத்திருக்கிறார்கள்? ராஜீவைக் கொல்ல சதியாலோசனை நடந்தது, இன்னின்னார் இங்கிங்கே வைத்து நடத்தினார்கள் என்பதற்கான தெளிவான தீர்க்கமான ஆதாரங்களை சி.பி.ஐ முன்வைக்கவில்லை. அவ்வழக்கில் காங்கிரசின் பெருந்தலைகளுக்கு இருந்த பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படவில்லை. சதியாலோசனை நிரூபிக்கப்படாத போது, ஆலோசனையை நடத்தினர்கள் பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் என நிரூபிக்கப்படாத போது சதியாலோசனையே இல்லை என ஆகி விடாதா? அப்படி எனில் நிரூபிக்கப்படாத சதியாலோசனையை நிறைவேற்ற பேட்டரி வாங்கிக் கொடுத்த குற்றத்துக்காக எப்படி பேரறிவாளனை தண்டிக்க முடியும்? சதியாலோசனைக்கான ஆதாரம் இல்லை எனில் அதுவே ஒரு மாயை என கூற முடியாதா? அப்படி எனில் பேட்டரி மட்டும் எப்படி ஒரு ஆதாரம் ஆகும்?


இதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? ஆதாரங்களை தேவையான போது உருவாக்குவதும், மறைப்பதும், ஆதாரம் இல்லையென்றாலும் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கக் கூடியதே நம் நீதித்துறை என்றல்லவா?
உண்மையில் மன்னார்குடிக் கும்பலை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர்கள் விசாரணை அதிகாரிகளும் நீதித்துறையினரும்.


ஆகையால், நண்பர்களே இவ்விசயத்தில் குற்றமே நடக்கவில்லை எனும் தேங்காய் மூடி கச்சேரிக்கு நான் செவிசாய்க்க மாட்டேன். நான் முதல் தரப்பினருடனே உடன்படுகிறேன். 2ஜி எனும் பரப்பிரம்மத்தின் கால் நகங்களை மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். காணாதது நம் கற்பனையை மீறியது, ஆனாலும் அது அதே சமயம் நம் அனைவராலும் புரிந்து கொள்ளுமளவு எளிதானது. சட்டம், ஆதாரம் என யோசிப்பவர்கள் பிரம்மத்தின் கால் நகத்தைக் கண்டு வியந்து கொண்டிருக்க வேண்டியது தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...