முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்பு நீங்கள் இப்படி விசாரிக்கவில்லை


 “உங்க படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்குமா?” அல்லது “கிடைப்பதில்லையா?” இக்கேள்வியை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறார்கள். நான் இருக்கும் இடம் ஒரு காரணம். இங்கு யார் தமிழில் படிக்கிறார்கள்? ஒருவிதத்தில் இப்படி ஓரிடத்தில் அந்நியமாய் வாழ்வது எனக்கு பிடித்திருக்கிறது. இங்கு இப்படி இருப்பதில் ஒரு அந்தரங்க உணர்வு உள்ளது. பரண் மீது சொகுசாக அமர்ந்து மீசையை நக்கும் பூனையைப் போல.

ஆனால் இக்கேள்விகள் நான் சென்னையில் இல்லை என்பதையும் நினைவுபடுத்தி விடுகின்றன. அங்கு ஒருவர் கூட இப்படிக் கேட்டதில்லை. அங்கு தமிழில் படிக்காத ஒருவருடன் கூட நான் உரையாட நேர்ந்ததில்லை என்பதை யோசிக்கவே வியப்பு தோன்றுகிறது.
நான் முன்பு பணி செய்த அலுவலகத்தில் “நீங்க எழுத்தாளரா?” என விசாரித்து யாராவது என் கணினி அருகே வந்து நிற்பார்கள்.
“எப்படித் தெரியும்? யார் சொன்னாங்க? எங்காவது படிச்சீங்களா?”
“நேத்து டிவியில சேனல் மாத்தும் போது உங்க முகம் பார்த்தேன். கொஞ்ச நேரம் கவனிச்சா “எழுத்தாளர்னு” போட்டிருந்தது.”
அதன் பிறகு “நீங்க என்ன எழுதியிருக்கீங்க” என்று கேட்கவா வேண்டாமா என நாணிக் கோணி விட்டு ஒரு அசட்டுப் புன்னகையை பதிலுக்கு தந்து விட்டு கிளம்பி விடுவார்.
ஒருவர் என்னை “நீங்க கவிஞரா?” என்று என்னிடம் வந்து விசாரித்தார். நான் “இல்லீங்க” என்றேன். ஆனாலும் எப்போது பார்த்தாலும் “வாங்க கவிஞரே” என்பார் வாஞ்சையாக. நானும் தலையாட்டி விட்டு ஏற்றுக் கொள்வேன்.
என்னைக் கண்டதுமே தூய தமிழில் பேசுபவர்கள், என்னிடம் கவிதை நோட்டு கொண்டு நீட்டுகிறவர்கள், குறுநாவல் எழுதி வந்து படித்து கருத்து கேட்பவர்கள் என பலரும் என்னை குறுக்கிட்டதுண்டு.
இங்கு “எழுத்தாளர்” என்ற சொல்லை கேட்டே நாளாகிறது. இங்கு என்னிடம் விசாரிப்பதெல்லாம் “உங்களை யாரும் மொழிபெயர்ப்பதில்லையா?” என்பதையே. (என்னை அப்படியே மொழிபெயர்த்தாலும் அவர்கள் படிக்கப் போவதில்லை என்பது வேறு விசயம்.) சென்னையின் அந்த விளியை, விசாரிப்புகளை, அன்பொழுகும் தமிழ்த்தன்மையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
 திரும்ப திரும்ப காலையும் மாலையும் அதே இடத்தில் அதே ஆட்களை பார்த்து சங்கடமாய் புன்னகைக்க நேரும் அந்த இலக்கிய கூட்டங்கள், டீக்கடை அரட்டைகள், ரெண்டு நிமிடம் பேசுவதற்காக நான்கு மணி நேரம் சேலவழித்து கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் என்னைத் தேடி வரும் இலக்கிய நண்பர்கள், மணிக்கணக்காய் போய் அமர்ந்து உரையாட மனுஷ்யபுத்திரனின் அலுவலக வீடு, அந்த புழுக்கம், எரித்துக் கொல்லும் வெயில், அரசியல் சுவரொட்டிகள், கூவி அலறும் ஸ்பீக்கர் பக்தி, கூழூத்தி சாலையை மறிக்கும் கோயில்கள், ஆயிரமாயிரம் நினைவுகள்.
ஒருநாள் திரும்ப ஓடி வந்து விடுவேன் என நினைக்கிறேன் என் இரண்டாம் வீட்டுக்கு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.