Skip to main content

விஷ்ணுபுரம் கூட்டங்கள்: கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (1)



விஷ்ணுபுரம் விருதைப் பற்றின சிறுகட்டுரை ஒன்றில் (https://www.jeyamohan.in/111472#.W1q1adIzY2w) ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:
 விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல்  ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது.”
எனக்கு ஜெயமோகன் மீது மிகுந்த மதிப்புண்டு. விஷ்ணுபுரம் அமைப்பும் நம் இலக்கிய வெளிக்கு அளப்பரிய பங்காற்றுகிறது என்பதை ஏற்கிறேன். ஆனால் ஜெயமோகன் ஒழுங்குக்கு அளிக்கும் இந்த மிதமிஞ்சிய முக்கியத்துவத்துடன் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ஏன் என சொல்கிறேன்.

ஜெயமோகன் இதைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் – தமிழ் சிறுபத்திரிகை சூழலின் கட்டற்ற போக்கு உள்கசப்புகளுக்கும் தனிநபர் அழிவுக்கு காரணமாகி விட்டது என்கிறார். ஆனால் இதே கட்டற்ற வெளிக்குள் இருந்து தான் தொண்ணூறுகளின் பல அபாரமான சாதனைகளும் நிகழ்ந்தன.
விஷ்ணுபுரம் வட்டத்தின் இருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டவன் என்ற முறையில், அதில் பங்கேற்றவர்களுடன் உரையாடலில் இருப்பவன் என்ற முறையில் அங்கு போதுமான கருத்து மோதல்கள் இல்லை என்பதை நான் குறிப்பிட வேண்டும்.
 எங்கள் நோக்கம் கருத்துமோதல்கள் நிகழும் அதே சமயம் தனிநபர் காழ்ப்புகள் எழாத ஒரு வெளியை உருவாக்குவதே.” – இந்த நோக்கம் சிறப்பானது. ஆனால் நடப்பில் இது வேறுவிதமாய் இருக்கிறது. நான் கண்டவரை, அங்கு பங்கேற்கும் நண்பர்கள் என்னிடம் கூறியவரை, அங்கு தீவிரமான முரண்பாட்டு விவாதங்கள் நிகழ்வதில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு.
அங்குள்ளவர்கள் ஒரு படைப்பை, ஒரு பிரதியை, ஒரு சிறிய எல்லையை வகுத்துக் கொண்டு விவாதிக்கிறார்கள். ஒரு படைப்பை அதனளவில் ஒரு எளிய எல்லைக்குள் வைத்து புரிந்து கொண்டால் போதும் என நினைக்கிறார்கள். இந்த கதையின் பின்னணி என்ன, இது எந்தளவு முக்கியமானதாக இருக்கிறது என பேசுகிறார்கள். (“வாசக சாலை” கூட்டங்களிலும் இதுவே நிகழ்கிறது) ஒருவேளை இது இன்று புதிதாய் தோன்றி வரும் போக்காக இருக்கலாம். ஆனால் இது வாசிப்பின் அடிப்படை நோக்கிற்கு எதிரானது.
வாசிப்பது என்பது ஒன்றை புரிந்து கொள்வதல்ல. ஒன்றில் காலூன்றி மேலெழுந்து செல்வது. மரக்கிளையில் அமர்ந்துள்ள ஒரு பறவை சிறகடித்து பறந்து எழுந்து வானில் பறப்பது. அப்படி பறந்து எழுவதற்கு தத்துவம் உள்ளிட்ட ஏதாவது ஒரு சித்தாந்த பின்புலம் அவசியம். உ.தா., புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்” கதையை அதன் பின்னணி, அது ஏற்படுத்தும் அனுபவம், அது என் வாழ்வில் எனக்கு நினைவுபடுத்தும் விசயங்கள் தரையோடு தரையாக அதைப் படிக்கலாம். இன்னொரு வாசிப்பு அதைக் கொண்டு உளவியல், தத்துவம் ஆகிய துறைகளில் நிகழ்ந்துள்ள விவாதங்களைப் பேசலாம். நீங்கள் அக்கதையை பேசி லக்கானுக்கு சென்று, அவர் இச்சை பற்றி சொல்வதென்ன என விவாதித்து, அதைக் கொண்டு கௌதமரின் பிரச்சனை என்னவாக இருக்கும் என தொட்டுக் காட்டி, அங்கிருந்து பொதுவாக நமது மனித மனத்தின் சிக்கல் ஒன்றை விவாதிக்கலாம். இந்த விவாத பாணியில் நீங்கள் ஒரு கதையை அக்கதையை தாண்டிச் செல்ல பயன்படுத்துகிறீர்கள்.
இரு பிரதிகளை பக்கத்தில் பக்கத்தில் வைத்து வாசிக்கும் பாணி நான் பரிந்துரைப்பது. உ.தா., நீங்கள் “சாப விமோசனம்” கதையையும் பார்த்தின் A Lover’s Discourseஐயும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் படிக்க முடியும். (நான் இதை என் வகுப்புகளில் செய்கிறேன்.) அது ஒரு அபாரமான அனுபவமாய், மனத்தை விரியச் செய்யும், அறிவுக் கிளர்ச்சி தரும், அனுபவமாய் அமையும். விஷ்ணுபுரம் கூட்டங்களில் இல்லாமல் போவது இது தான்.
இதன் காரணம் எளிதானது: அங்கு ஒரு அடிப்படை விதி சித்தாந்தம், தத்துவம் ஆகியவற்றை வாசிப்புக்கு பயன்படுத்தல் ஆகாது என்பது. இது முள்கரண்டியால் மட்டுமே இட்லியை பிய்த்து சட்னியில் தொய்த்து நீங்கள் சாப்பிட வேண்டும் என வலியுறுத்துவது போல; அப்படி சாப்பிடும் போது அது மிஸ் ஆகி உங்கள் வெள்ளை சட்டையில் படக் கூடாது என்பது போல.
நான் குறிப்பிடும் விசயம் தீவிர உட்குழு விவாதங்களில் சிறப்பாக அமையும் ஒன்று. நான் பங்கேற்ற சிறுபத்திரிகை கூட்டங்களில் இது நடந்துள்ளது. தொண்ணூறுகளில் கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் இது நடந்துள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாய் இன்றைய இலக்கிய கூட்டங்கள் ஒன்று “இலக்கிய பேருரை” கூட்டங்கள் ஆகின்றன. கைத்தட்டல்கள் காதைப் பிளக்கும் கூட்டங்கள் இவை. பழைய பட்டிமன்ற கூட்டங்கள் இன்றில்லாததன் வெற்றிட்டத்தை இவை எடுத்துக் கொள்கின்றன. அடுத்து, எளிய இலக்கிய விளக்க கூட்டங்கள்.
“விஷ்ணுபுரம்” கூட்டங்கள் எந்த இடத்தை எடுத்துக் கொள்கின்றன, அங்கு உண்மையிலே தீவிர கருத்துமோதல்கள் (எந்த சித்தாந்த எடுத்தாள்கையும் இன்றி) நிகழ்கின்றனவா என்பதை அக்குழுவின் நண்பர்களே நிறுவ வேண்டும்.
நான் இந்த குறைக்கு ஜெயமோகனை முழுக்க பழிக்க மாட்டேன். ஏனெனில் ஊட்டி கருத்தரங்கில் தொண்ணூறில் கலந்து கொண்டவன் என்ற முறையில் அங்கு உண்மையிலேயே கருத்துமோதல்கள் நடந்தன என்பதை அறிவேன். ஜெயமோகனுக்கு நேர் எதிராய் யுவனும் தேவதேவனும் கவிதை பற்றின விவாதங்களில் உரையாடியதை நான் நினைவுகூர்கிறேன். விஷ்ணுபுரம் கூட்டங்களின் இன்றைய பிரச்சனை அங்கு “யுவன்கள்” இல்லை என்பது. சோறை மென்று தின்னும் போது பல்லில் கடிபடும் சிறுகற்கள் அங்கு இல்லை என்பது. அது நிச்சயம் ஜெயமோகனின் தவறு அல்ல.
ஒருவேளை இது இந்த காலத்தின் தேவையாக இருக்கலாம். அது என்ன?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...