முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (2)


Image result for bigg boss sendrayan
பிக்பாஸின் அடுத்த பருவத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள் ஒரு பாடத்தை நன்றாய் கற்றிருப்பார்கள்: இங்கு ஜெயிக்க சதா ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி ஷோவுக்கு ஒரு பொழுதுபோக்கு சாத்தியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதே நேரம், யாரையும் அதிகம் துன்புறுத்தவோ புண்படுத்தவோ செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டுக்குள் யாருடனும் இசைவாக இருப்பது நிலைப்புக்கு உதவாது. ரேட்டிங் ஏற உதவினால் மட்டுமே நீங்கள் நீடிக்க இயலும்.


கார்ப்பரேட்டில் இன்றுள்ள சூழலும் இதுவே: அனைவருக்கும் இணக்கமான, நட்பார்ந்தவர்களிடம் அனைவருமே அன்பாக இருப்பார்கள். ஆனால் அது ஒரு போட்டிக் களம் என்பதை உணர்ந்து, தன்னை தக்க வைத்துக் கொள்ள, யாரையும் காலை வாரி விட துணிந்து செயல்பட வேண்டும். போட்டியுணர்வே இணக்க சுபாவத்தை விட முக்கியம். ரம்யா வெளியேற்றப்பட வைஷ்ணவியும் மும்தாஜும் காப்பாற்றப்படுவது இதனால் தான்.
நான் முன்பு ஒரு நிறுவனத்தில் ஒரு பைலட் புரோஜெக்டில் வேலை செய்தேன். மூன்று மாதங்களில் புரோஜக்ட் சொதப்ப, எங்களை ஒவ்வொருவராக வீட்டுக்கு அனுப்பினார்கள். வெளியேற்றத்தின் போதான நேர்முகத்தின் போது புரோஜெக்டை காப்பாற்ற இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என கேட்டார்கள். எனக்கு அது என் இறுதி நாள் எனத் தெரியாது. நான் என் சக ஊழியர் ஒருவரை பாராட்டிப் பேசினேன்: அவருக்கு அத்துறையில் சில நல்ல தொடர்புகள் உண்டென்றும், அதைக் கொண்டு நிச்சயம் புரோஜெக்டின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் சொன்னேன். என் நோக்கம் உண்மையில் எப்படியாவது புரோஜக்டை இறுதி சுவாசம் அளித்து தேற்ற வேண்டும் என்பது. மனித வள மேலாளர் மிகுந்த கரிசனத்தோடு என்னை கவனித்துக் கேட்டார். என் கருத்துக்களை பாராட்டி கைகுலுக்கினார். ஒரு மாதத்தில் என்னை வெளியேறக் கேட்டு அடுத்த நாள் மின்னஞ்சல் வந்தது. என் நண்பர் மட்டும் கூடுதலாய் மூன்று மாதங்கள் தங்கினார். நல்ல நண்பனாய் இருக்க முயன்றதாய் நான் தோற்றேன். என் நண்பரோ அடுத்த நாள் நடந்த அவரது நேர்முகத்தின் போது தன் நண்பனான என்னைப் பற்றி மேலாய் பேச வேண்டும் என்றெல்லாம் பிரயத்தனப்படவில்லை. மாறாக, நான் அவரைப் பற்றி உயர்வாக சொன்னதை வைத்து அவர் தன் பிம்பத்தை கூடுதலாய் ஊதிப் பெருக்கி மேதாவித்தனமாய் பேசி தப்பித்தார்.
பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன் எல்லாம் என் நண்பரைப் போன்று ஷோவில் தம் இடத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதிலே ஆவேசமாய் இருப்பவர்கள்; அதற்காய் அற்ப சண்டைகளில் ஈடுபட, தன்னிரக்கம் தொனிக்க பேச தயங்காதவர்கள்.
ஷோவில் இன்றைய அத்தியாயத்தில் (23 ஜூலை) செண்டிராயன் தனக்கு ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை என்றும், அதனால் தத்தெடுக்கப் போவதாயும் பேசியது பச்சை நாடகத்தனம் மற்றும் அயோக்கியத்தனம். இதனால் தன் மனைவியின் மனம் புண்பட்டிருக்கும் என்பதைப் பற்றி அவர் கவலை கொண்டாரா? எப்படியாவது தன்னிரக்கத்தை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிம்பத்தை பெருக்கவே அவர் விரும்புகிறார். (அவர் நிச்சயம் தத்தெடுப்பார் என எனக்குத் தோன்றவில்லை.) ரம்யா சொல்வது போல் அந்த வீட்டில் ரொம்ப அப்பாவியாய் நாடகம் போடும் வேஷதாரி செண்டிராயன் தான்.
நாம் வாழும் கார்ப்பரேட் உலகம் பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன்களின் உலகம்! இங்கு நாம் அனைவரிடம் நட்பார்ந்து, சமூகமாக்கல் செய்து இணக்கமாய் இருக்க வேண்டும் என ஆரம்பத்தில் கோருவார்கள்; நாமும் அப்படி இருந்தால் நம்மை அனைவரும் பாராட்டுவார்கள்; ஆனால் ஒருநாள் “உங்க வேலைத்திறன் போதாதுங்க” என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்; ஒரு அணியில் பிறரை விட உங்களை மேதாவி என்றும், அதிக திறமையானவர் என்றும் நீங்கள் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அணியில் அதிகம் நேசிக்கப்படாதவராய் இருந்தாலும் நீங்கள் உங்களைப் பற்றி உருவாக்கும் போட்டி பிம்பத்தினாலே நீண்ட காலம் நீடித்து பதவி உயர்வும் பெறுவீர்கள். பிக்பாஸும் இதே பண்பாட்டைத் தான் பிரதிபலிக்கிறது.


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யோ பாவம் நீங்கள். பிக்பாஸையெல்லாம் கர்ம சிரத்தையுடன் பார்த்து நுட்பமாக விமர்சனம் எழுத தலைப்பட்டீர்கள். நேரமும் ஆற்றலும் வீண்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னிக்கவும் நான் அப்படி நினைக்கவில்லை. மனித நடவடிக்கைகள், மனித மனத்தின் நுணுக்கங்களை ஆகியவற்றை அறிய முயல்கிறேன் இங்கு. எதைப் பார்க்கிறோம் என்பதல்ல எப்படி பார்க்கிறோம் என்பதே முக்கியம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.