முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (2)


 Image result for divorce
இன்று நான் காணும் கணிசமான மணமுறிவுகள் இப்படி தெளிவற்ற காரணங்களால் தான் நிகழ்கின்றன.
 ஒன்று, இன்று முன்னளவுக்கு யாரும் மண உறவுகளை நம்பி இல்லை. தனியாக வாழ்வது இன்று பெரும் சவால் அல்ல. அடுத்து முக்கியமாய், இன்று பலரையும் சொல்லொண்ணா துக்கம், சோர்வு, அவநம்பிக்கை, கசப்பு ஆட்கொள்கிறது. இதன் காரணம் என்னவென துல்லியமாய் தெரியாத நிலையில் ஒவ்வொரு எளிய இலக்குகளையாய் பலி கொடுக்கிறார்கள்.

பேஸ்புக்கை டீ அக்டிவேட் செய்வார்கள், வாட் ஆப்பை, மெஸஞ்சரை போனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வார்கள், சிலர் இந்த நடவடிக்கைகளை அடுத்து ஒரு சிறிய திருப்தியை உணர்வார்கள்; ஆனால் இதுவும் தற்காலிகமே. வருத்தமும் சோர்வும் மீண்டும் அவர்களை ஆட்கொள்ளும். இப்போது அவர்கள் நட்புறவுகளை துண்டிப்பார்கள். அடுத்து, வேலையில் இருந்து அடிக்கடி லீவ் எடுப்பார்கள். சிலர் நேர்மறையாக, புகைப்படக் கலை, இசை, ஓவியம் என எதிலாவது புதிதாக ஈடுபடுவார்கள். இதற்கு நடுவில் சிக்கி விபத்தாவது திருமண வாழ்வு.
பேஸ்புக் நண்பர்கள், வாட்ஸ் ஆப் அரட்டைகள், மற்றும் நடைமுறை வாழ்வு நண்பர்களை விட்டு விலகிய பின்னரும் மனம் நிம்மதி கொள்ளவில்லை எனில் நிச்சயம் பிரச்சனை கணவன் / மனைவிடத்து தான் என நம்புவார்கள்.
திருமணத்தில் ஆண்களுக்கு பொதுவாய் அழுத்தம் குறைவு. ஆகையால் அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு தாமதமாய் திரும்புவார்கள். மனைவியுடன் உரையாடுவதை குறைத்துக் கொள்வார்கள். செக்ஸில் ஈடுபாடு இழப்பார்கள். ஒருவேளை புதிய பெண்ணுடல்களை நாடினால் செக்ஸில் கூடுதல் திருப்தி கிடைத்து அதனால் வாழ்வில் மகிழ்ச்சி மீளும் என நம்புவார்கள். பெண்களும் இப்படி முயற்சிக்கலாம், என்றாலும் அவர்கள் அதிகமாய் உறவை முறிப்பதிலேயே முனைப்பு கொள்கிறார்கள் என்பது என் கணிப்பு; ஏனெனில் குடும்ப வாழ்வில் பெண்களுக்கு நெருக்கடி அதிகம்.
சமீப காலங்களில் இந்தியாவில் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. தில்லியில் தினமும் நூறு விவாகரத்து வழக்குகளாவது தொடுக்கப்படுகின்றன என்கிறார்கள். 2003இல் இருந்து 2011 வரை கொல்கொத்தாவில் விவாகரத்தில் 350% அதிகரித்துள்ளன. 2010-14க்கு இடையிலான காலத்தில் மும்பையில் விவாகரத்துகள் இரட்டிப்பாயுள்ளன. இதற்கு பல நியாயமான காரணங்கள் உண்டு தாம். ஒரு நியாயமற்ற காரணம் நான் மேலே சுட்டிக் காட்டி உள்ளது.
இனிவரும் காலங்களில் நம் வாழ்வில் விளக்க இயலாத அதிருப்தியும் நிம்மதியின்மையும் கசப்பும் அதிகமாகப் போகிறது. இதைப் போக்க நாம் கீழ்வரும் அபத்த தீர்வுகளையே அதிகம் கையாளப் போகிறோம்.
(1)  பேஸ்புக் டீஆக்டிவேஷன்
(2)  வாட்ஸ் ஆப்பை விட்டு நீங்குதல்
(3)  ஒவ்வொரு சமூக உறவாடலாக கைவிடுதல்
(4)  பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் மூழ்குதல்
(5)  உளவியல் ஆலோசகரை அணுகுதல்
(6)  விவாகரத்துக்கு விண்ணப்பித்தல்

மேலும், இனிமேல் ஆண் பெண் உறவுகளில் எந்த நிலையான தன்மையும் இராது. தனிநபர்கள் உள்ளுக்குள் திருப்தியாக இருந்தால் ஒழிய திருமண / காதல் உறவுகள் இனி தப்பிக்காது. அதாவது, இனிமேல் உறவின் நன்மை மட்டுமே அதைக் காப்பாற்றாது.
இதற்கு சரியான தீர்வு?
நமது மனச்சோர்வுக்கு அடிப்படை காரணத்தை நமக்குள்ளே தான் தேட வேண்டும், அடுத்தவரிடம் அல்ல எனும் தெளிவு இருந்தாலே பாதி விவாகரத்துகளை தவிர்க்கலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...