முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞரா கருணாநிதியா?


மின்னம்பலத்தில் வெளியாகி உள்ள எனது கட்டுரை “கலைஞரா கருணாநிதியா?” (https://www.minnambalam.com/k/2018/08/22/40) சமஸ் பட்டப்பெயரை அரசியலில் பயன்படுத்துவது குறித்து எழுதின குறிப்பின் மீதான எனது எதிர்வினை. பட்டப்பெயர்கள் பயன்படுத்துவதையும் ஜனநாயகத்தையும் எதிர்மைகளாய் நாம் காணக் கூடாது என இதில் பேசி இருக்கிறேன். இக்கட்டுரைக்கு பாராட்டுக்கள் வந்தவிதமாய் உள்ளன. கீழே சில கடிதங்கள்:

பத்திரிக்கையாளர் திரு.சமஸ் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது.நன்றி வணக்கம் -
   
                   தோழமையுடன்
                 மசி.சுதேசி
அன்புள்ள மசி. சுதேசி
உங்கள் பாராட்டுக்கு நன்றி
ஆர். அபிலாஷ்
அன்பிற்கினிய அபிலாஷ் சந்திரன்,
தங்களுடைய கட்டுரையை மின்னம்பலத்தில் படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்.
* திரு. சமஸ், தனது உண்மையான பெயரான ஸ்டாலின் என்றே, அழைத்தால் மகிழ்வாரா...அல்லது சமஸ் என அழைத்தால் ஏற்பாரா?
* உறவுப் பெயர்கள் கூட, ஒருவரை மரியாதை நிமித்தமாக அழைக்க ஏற்படுத்தப்பட்டதே. அப்படி இருக்கையில், அவருடைய அப்பாவை சந்திரசேகர் என்றும், தாயை மலர் என்றும் அழைப்பாரா சமஸ். அதேபோல், மற்றவர்களும் அப்படி அழைத்தால் மிகவும் மகிழ்வாரா? என்பதை எல்லாம் சமஸ் சிந்தித்தாரா...என்று சொன்னால் சரியாக இருக்கும்.
* இதனை பொறுத்தவரை, அவர் கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து வந்தவர் என்பதால், இயல்பாக இருக்கக் கூடிய குழப்பம் இதிலும் இருப்பதாகவே எண்ணுகிறேன். கம்யூனிசத்தை மண்ணுக்கு ஏற்ப பொருத்திப்பார்க்காமல் தோற்பது போலவே, பெயர் என்பது வெறுமனே அழைப்பதற்காக... என்று வாதிடுவதாகவே எண்ணுகிறேன்.
தங்கள் தரப்பு வாதத்தை மிகச் சிறப்பாக எடுத்து வைத்திருந்தீர்கள் என்பதில் அய்யமில்லை.
நன்றி!
அன்புடன்
செழியன்.மா.
பத்திரிகையாளர்
அன்புள்ள மா. செழியன்
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
அதேவேளை நான் உங்கள் கேள்விகளுடன் முழுக்க உடன்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒருவர் பொதுவெளியில் தன்னை எப்படி முன்வைக்கிறாரோ அப்படியே அவரை அழைப்பதே நியாயம் என சமஸ் சொல்கிறார். அவர் தான் சமஸ் என அறியப்பட விரும்பினால் நாமும் அவரை அவ்வாறே அழைத்தல் வேண்டும். தாயை பெயர் சொல்லி அழைக்கலாம் என்றும் சமஸ் கோரவில்லை. இந்த வழமைகளை, மரபான முறைகளை அவர் மறுக்கவில்லை.
அரசியல் களத்தில் மட்டுமே பட்டப்பெயர்கள் மக்களிடம் இருந்து தலைவர்களை முழுக்க வேறுபடுத்தி, அவர்களை அரியணையில் அமர வைத்து, நம்மை மன்னர் ஆட்சிக் காலத்தை பின்னோட்டி செல்கின்றன என்பதே சமஸின் குற்றச்சாட்டு. ஜனநாயகத்தில் அனைவரும் சமம். ஆக, ஏன் ஒரு தலைவரை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது?
என் வாதம் இவ்வாறு நேரடியாய் புரிந்து கொள்ளக் கூடாது, பெயர் மட்டுமே ஜனநாயகத்தை உருவாக்கவோ அழிக்கவோ செய்யாது என்பதே. என் ஊரில் தொட்டில் குழந்தையின் ஆண் குறியை கிள்ளி விட்டு “செல்லத் தாயளி” என்பார்கள். அது வசை அல்ல. “உன்னையெல்லாம் போடணும்டா” என நண்பர்களிடையே பேச்சு அடிபடுவதைக் கண்டிருக்கிறேன். இந்த மிகைகளைப் போன்றே “கலைஞர்”, “அம்மா” மாதிரியான பட்டப்பெயர் பயன்பாடு இருக்கிறது என்பதே என் பார்வை.
கலைஞர் குறித்த சிறப்பு நீயா நானாவில் இமையம் பேசும் போது மனம் உடைந்து பேச முடியாமல் அழுததைத் கண்டேன். அந்த அழுகையை விட உன்னதமான மொழி உண்டா? ஒரு எழுத்தாளனாய் அவர் இன்னும் கராறாய் பகுத்தறிவு நோக்குடன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளை முன்வைத்திருக்க முடியும். ஆனால் ஒரு கண்ணீர்த் துளியின் கொதிப்புடன் தன் ஆழ்மன உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியதற்கு இணையாக தன் சொற்களைக் கொண்டு, தர்க்கத்தைக் கொண்டு பேசியிருக்க முடியுமா? முடியாது.
நாம் அவ்வப்போது பகுத்தறிவை கைவிட வேண்டும் என்பதே நான் சமஸிடம் சொல்ல விரும்புவது! (அதற்காய் கலைஞருக்கான அஞ்சலிக் கூட்டத்தில் அவரும் போய் அழ வேண்டும் என நான் கோரவில்லை.) மக்களை புரிந்து கொள்ளும் போது, மக்களிடம் உரையாடும் போது பகுத்தறிவே நமது முக்கிய தடை.
நன்றி
ஆர். அபிலாஷ்

கருத்துகள்

ஸ்ரீராம். இவ்வாறு கூறியுள்ளார்…
முப்பது வருடங்களுக்கு முன்னர் பொது இடமொன்றில் அவர் பெயரைச் சொல்லி நான் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒரு "தொண்டர்" என் பிடரியில் தட்டி பட்டப்பெயரைச் சொல்லிப் பேசச் சொன்னார். திடீர் குறுக்கீட்டினால் என்ன என்று நான் புரிந்து கொள்வதற்குள் இரண்டாம் முறையும் பிடரியில் ஒரு "தட்டு" வாங்கினேன்! அது ஒரு அதிகாலை நேரம்!