முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (2)


Image result for குட்டி ரேவதி
குட்டிரேவதியின் கவிதைகளில் பெண் இச்சையுடன் ஒருவித ஆண் நோக்கும் (male gaze) சட்டென தென்படும். அதாவது, அவர் பெண்ணியவாதி என்றாலும், தனக்கான வலுவான கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர் என்றாலும், அவரையும் மீறி கவிதையில் பல சங்கதிகள் வரும்அவர் நம்புவதற்கு நேர்மாறான சேதிகள் வரும். .தா., அவரது காதல் கவிதைகளில் வரும் ஆண் நோக்கு. ஒரே சமயம் ஒரு பெண்ணியவாதியும் பெண்ணியத்தை பொருட்படுத்தாத இச்சையில் தவிக்கும் ஒரு எளிய பெண்ணும் அவர் கவிதைக்குள் குரலெழுப்புவார்கள் (“முலைகள்தொகுப்பு). இப்படியாக (ஒரே சமயம் ஆண் ஆதிக்கத்தை மறுக்கும் அதற்கு இணங்கிப் போகும் முரண் போக்குகளை வெளிப்படுத்தும்) உடைந்த சிதறுண்ட பெண் மனத்தை நாம் மாலதி மைத்ரியின் கவிதைகளிலும் காணலாம். இந்த கட்டற்ற பாய்ச்சல் இவ்விரு கவிகளின் மொழியின் ஒரு தனிச்சிறப்பு. மாலதி மைத்ரி பின்நவீனத்துவத்தில் இருந்து இந்த சிதறுண்ட போக்கை பெற்றிருக்கலாம். தேவதேவனில் இருந்து இதை குட்டிரேவதி பெற்றிருக்கலாம் (அல்லது தன்னியல்பாகவும் தோன்றியிருக்கலாம்).

முக்கியமாய் இங்கு குறிப்பிட வேண்டிய சேதி இந்த பெண் கவிகள் மொழியை தர்க்க ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த எத்தனிக்கவில்லை என்பது. தாபத்திலும் சினத்திலும் ஆவேசத்திலும் நிலைகொள்ளாது தவிக்கும் உடலைப் போன்றே இவர்களின் மொழியும் நொதிக்கிறது.
ஆனால் ஆண் கவிகள் இதே நீர்மையை, தர்க்கத்தை கடந்த பாய்ச்சலை கவிதையில் அடைய இசைத்தன்மையை, மிகையான சொற்களை பயன்படுத்தினர். ஒரே நோக்கம், ஆனால் இருவேறு பாதைகள்.
 இவர்களுடன் குறிப்பிட வேண்டிய மற்றொருவர் என்.டி ராஜ்குமார்தமிழில் இசைப்பாடல் போக்கு கொண்ட நவீன கவிஞர்களில் அப்பட்டமானவர் இவர். நாட்டார் மக்கள் கலை வடிவங்களின் மொழியும் தாளலயமும் இவரது கவிதைகளில் நர்த்தனமிடும்.
இசைப்பாடல் மரபின் மற்றொரு நவீன கிளையாக இருப்பவர் மனுஷ்ய புத்திரன். அவரது சிறந்த கவிதைகள் அறிவார்த்தம் குறைவாகவும் உணர்ச்சித்தளும்பல் மிகுதியாகவும் இருக்கும். அதாவது, அவரிடம் தர்க்க கட்டமைப்பு கொண்ட இறுக்கமான கவிதைகளும், இப்படி முந்தானையை அடிக்கடி பத்திரப்படுத்தி இடுப்பில் சொருகாத அபாரமான கவிதைகளும் உண்டு. குறிப்பாக அவரது காதல் கவிதைகள். இசையொழுங்கு, சொற்களின் அமைப்பு, மீளமீள ஒலிக்கும் சொற்றொடர்கள், முன்பின் முரணான கூற்றுகள் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றி பெறும் கொதிப்பான கவிதைகள் இவை. இவற்றில் சில கவிதைகளில் பித்தின் உச்சத்திற்கு லகுவாய் போய் திரும்புவார் மனுஷ்யபுத்திரன்.
இதற்கு உதாரணமாய் மனுஷ்ய புத்திரனின் பல சிறப்பான கவிதைகளை சொல்லலாம். ஆனால் என்னை இந்த கட்டுரையை எழுதத் தூண்டிய கவிதையையே இங்கு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அக்கவிதையின் தலைப்புபிரியும் இடங்கள்” (”நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்தொகுப்பிலிருந்து).


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...