முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (3)


Image result for மனுஷ்யபுத்திரன்

இந்த நகரத்தில்
நம் வழிகள்
ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன

நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்


நாம் அமர்ந்திருந்து எழுந்து வந்துவிட்ட
நிலங்களின் மீது
நிலவொளி இந்நேரம்
பெரும்தனிமையில் படர்ந்திருக்கும்

திரும்பும் வழியில்
நான் என் பொறுப்புகளை நினைத்துக் கொள்கிறேன்
நீ நிச்சயமற்ற உன் நாளையை நினைத்துக் கொள்கிறாய்
நம் வாழ்விடங்களுக்கு
அவரவர் வழியில் மீளும் துயரங்களெங்கும்
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது

மனுஷ்ய புத்திரனின் இக்கவிதையில் இசையொழுங்கு இயல்பாக உள்ளது; வானம்பாடிகளுக்கும் தேவதேவன், மனுஷ்யபுத்திரன்களுக்குமான வேறுபாடு இதுஅதாவது வலிந்து திணிக்கப்படாத இசைத்தன்மை.
 உதாரணத்திற்கு, இக்கவிதையில் இரண்டாவது பத்தியில் சொற்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வருகின்றன (மோனைநமக்கிடையே, நம், நீங்குதலின், நமக்கு, நாம்); அதற்கு அடுத்த பத்தியில் மோனை சில முறை தான் வருகிறது (நாம், நிலங்களின், நிலவொளி). இந்த ஒழுங்கின்மையை நான் கவனிக்க வேண்டியது அவசியம்.
 மனுஷ்யபுத்திரனுக்கு ஓசை லயம் வேண்டும்; ஆனால் அது கவிதை முழுக்க ஒரே சீரான தாள லயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது ஓசை நயத்துக்காக சொற்கோர்வை இல்லை; வெற்று ஓசையின் அழகுக்காக சொல்லின் இசைத்தன்மையை அவர் கிலுக்கிப் பார்ப்பதில்லை. அர்த்தத்தை கட்டியெழுப்ப மாட்டுமே சொற்களின் இசை நயத்தை அவர் பயன்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அவர்ஓசையை சில இடங்களில் இங்கு சீராக கொண்டு வருகிறார். அது என்ன?
இக்கவிதையின் முக்கிய சொல்நாம்” – இருவர் இணைந்து நாம் ஆனாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவழிகளிலாய் பிரிந்து செல்லப் போகிறார்கள். அவர்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டும் போதும் உள்ளுக்குள் தத்தமது உலகத்துக்குள் மீள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்கிறார்கள். இது தான் இக்கவிதையில் மென்கசப்பை, கழிவிரக்க தொனியை, நகைமுரணைஒட்டுமொத்தமாய் ஒரு அவல தொனியை - தோற்றுவிக்கிறது. மனுஷ்யபுத்திரன் இந்த நகைமுரணை கவிதையின் ஒலி ஒழுக்கு மூலம் உணர்த்த முயல்கிறார். அதற்காக அவர் என்ன செய்கிறார்?
நான், நாம், நீ, நம், நமக்குஆகிய சொற்கள் 11 தடவைகள் இச்சிறு கவிதையில் வருகின்றன. இந்த சுட்டுப்பெயர்கள் (pronouns) இல்லாது கூட இக்கவிதையை அவர் எழுதியிருக்க முடியும்.
உதாரணமாய்,
நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்

என்பதை
இடையே மூடும் கதவுகள்
வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின்
நடுவில் மின்சார ரயில்
இல்லாமலாகும் அந்தியின் இருள்

இப்படியும் எழுதலாம். (எண்பதுகளில் இந்த பாணியே பிரசித்தமாய் இருந்ததுஉதாரணமாய் எஸ். வைத்தீஸ்வரனின் கவிதைகள்.) இரண்டு பத்திகளுக்கும் என்ன வித்தியாசம்? முதல் வடிவில் உறவு கொள்ளும் தரப்புகளின் இடம் முக்கியமாய் அழுத்தம் கொள்கிறது. இரண்டாவதில், அவர்கள் இடையிலான இன்மை வலியுறுத்தப்படுகிறது. முதல் வடிவம் உணர்ச்சிகரமாய், ஓசை நயம் கொண்டு, உரையாடல்தன்மையுடன்அதனாலே மனிதக்குரலாய், சதைப்பற்றுடன் - உள்ளது. இரண்டாவதோ அரூபமாய் (ஒரு சர்ரியலிய ஓவியம் போல்) உள்ளது.
ஆக, அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே மனுஷ்யபுத்திரன் இங்கு சுட்டுப்பெயர்களை மீள மீள பயன்படுத்துகிறார். ஏன்?
நாம், “நமது, “நமக்கானது என திரும்ப திரும்ப அவர் உச்சாடனம் செய்யும் போது கவிதையில் வரும் காதலர் இருவரும் இணைந்தே ஈருடல் ஓருயிராய் இருப்பதான ஒரு பிரமை நமக்கு ஏற்படுகிறது. ஆனால் கவிதைக்குள் அவர் அவர்கள் பிரியப்போகிறார்கள்; பிரிவதற்கு முன்பான அந்த நிமிடங்களிலும் மனதளவில் வெகுவாய் விலகிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பேசுகிறார். ஒன்றை உணர்த்தி விட்டு, முற்றிலும் முரணான ஒன்றை சொல்கிறார். இதுவே கவிதையின் அதிர்ச்சி மற்றும் நகைமுரண். இதில் இருந்து தான் அந்த அவல உணர்வு தோன்றுகிறது.
இது போதாதென்று கூடுதலாய் (ஏற்கனவே குறிப்பிட்டது போல) “நாம்என்பதன் ஒலிமயக்கத்தை ஏற்படுத்தஒலியில் துவங்கும் சொற்களை 11 முறை பயன்படுத்துகிறார்.
 ஒவ்வொரு தினமும்என எழுதலாம்; ஆனால் அவர்ஒவ்வொரு நாளும்என்கிறார்.
பிரிதலுக்கு இடையேஇன்னும் இயல்பாய் இருந்திருக்கும்; ஆனால் அவர்நீங்குதலின் நடுவில்என எழுதுகிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...