முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர்-மாணவர் உறவில் நெருக்கம் தேவையா? (2)

Image result for robot teacher
இது தான் எதிர்காலமா?  

1

ஆசிரியர்-மாணவர் உறவு அலுவலகத்தின் நான்கு சுவர்களைக் கடந்து செல்வது அவசியம். அப்போதே படைப்பூக்கமான செயல்பாடுகள் சாத்தியமாகும். உதாரணமாய், நான் கடந்த வருடம் என் மாணவர்களுடன் சேர்ந்து லக்கான் குறித்த ஒரு நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தேன். அதற்காய் அந்த மாணவர்களுக்கு கூடுதலாய் 20 மணிநேரங்கள் வகுப்பெடுத்தேன். வெளியேயும் அவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டேன். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி ஊக்கப்படுத்தி பாராட்டி திருத்தி எழுத செய்தேன். இதனாலே மொத்த நூலையும் எங்களால் ஆழமாகவும் விரைவாகவும் எழுதி முடித்திட முடிந்தது. அலுவலகத்தில் பத்து நிமிடம் சந்தித்து professionalஆக உரையாடினால் இப்படியான வேலைகளை யாரும் செய்ய முடியாது.

இப்போது நான் சினிமா மொழி குறித்து ஆய்வு செய்யும் சில முதுகலை மாணவர்களின் நெறியாளராக உள்ளேன். அம்மாணவர்களுக்கு எழுதும் தயக்கம் அதிகம். ஆதலால் அவர்களை மாதத்தில் சில நாட்கள் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆய்வு செய்யும் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கிறேன். அதன் பிறகு வளாகத்துள் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பிரேம் பிரேமாக விவாதிக்கிறோம். அது முடிந்ததும் அவர்கள் சொன்னதை அப்படியே எழுதித் தர செய்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுத செய்கிறேன். இது ஒருவித spoon feeding தான். ஆனால் வேறு வழியில்லை. ஒவ்வொரு நாளும் நான் வீடு திரும்ப 8 மணி ஆகிறது. களைப்பாக கடுப்பாக உணர்வேன். மற்ற ஆசிரியர்கள் போல நான் ஏன் சீக்கிரமாகவேவீடு போகலாமே, இந்த சந்திப்புகளை 10 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்வது தானே எளிது, professional என நினைப்பேன். ஆனால் இந்த சந்தர்பங்களில் அந்த மாணவர்கள் மேல் நான் உணரும் அன்பு தான் என்னை மிகுதியாய் வேலை செய்ய வைக்கிறது. இப்படியான அன்பு தோன்ற ஆசிரியர்-மாணவர் இடையே நல்லுறவு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை தோன்ற வேண்டும். விட்டேத்தியான எந்திர உறவில் இது சாத்தியமாகாது.

இது போல் ஸ்பூன் பீடிங் செய்யத் தேவையில்லாத மாணவ உறவுகளும் உண்டு. அங்கு நாம் மாணவர்களை சமமாய் நடத்துகிறோம். தற்சமயம் ஒரு மாணவரோடு சேர்ந்து ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். ஹைடெக்கர் பற்றி. அவர் ஐந்து அத்தியாயம், நான் ஐந்து. நாங்கள் நிறைய நேரம் நூலகத்தில் செலவிடுகிறோம். வெளியே சந்தித்து பேசுகிறோம். புத்தகங்களை சேர்ந்து சத்தமாய் வாசித்து விவாதிக்கிறோம். பரஸ்பரம் எழுதியதை படித்து சர்ச்சிக்கிறோம். அவரது தாக்கத்தாலே நான் கடந்த வருடம் சில நல்ல கட்டுரைகளை தமிழில் எழுதி இருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் தன் தனிப்பட்ட சிக்கல்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். எழுத்திலும் சிந்தனையிலும் கடந்த ஒரு வருடத்தில் அவர் கண்ட அபார வளர்ச்சியை நான் கண்கூடாய் பார்த்திருக்கிறேன்.  என்னைப் பொறுத்த வரையில் ஆசிரியர்-மாணவர் உறவு என்பது இந்த வழிகாட்டுதலும் (mentoring) சேர்த்ததே. அது mentoring மட்டும் கூட அல்ல. அது பரஸ்பரம் ஊக்கப்படுத்துவதும் வளர உதவுவதுமாகும். சு.ராவுக்கும் அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்குமான, பாலுமகேந்திராவுக்கும் அவரது உதவி இயக்குநர்களுக்குமான உறவுக்கு நிகராக ஒரு நல்ல ஆசிரியருக்கும்-மாணவருக்குமான உறவு இருக்க வேண்டும்.

இப்படி அமையும் போது அது ஆழமான தனிப்பட்ட உறவாகவும் அது மலரலாம். அது வகுப்பறையின் வளர்ச்சிப் போக்குகளை பாதிக்காத வரையில் பிரச்சனையில்லை.
 ஆனால் ஆசிரியர்-மாணவர் தனிப்பட்ட உறவுகள் சில நேரம் எல்லை மீறி செல்வதும் உண்டு. அது எந்த உறவிலும் உள்ள ஆபத்தே. இந்த ஆபத்தை கருதி அந்த உறவையே காயடிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் இன்று கோருவது ஒரு பரிதாபம்.

இதற்கு மாற்றாக, மாணவர் எதிர்வினைப் பகிர்வு (feedback) முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே எங்கள் பல்கலையில அது உள்ளது. நிறைய அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நெறியாளர்களும் ஆசிரியர்களும் மாணாக்கரை சுரண்டுவது சில நேரம் நடக்கிறது தான். இதைக் களைவதற்கு மாணவர் எதிர்வினை ஜன்னல் ஒன்றை திறந்தாலே போதுமானதாக இருக்கும். மாணவர் எதிர்வினைக்கு ஏற்ப விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு ஒன்றையும் நியமிக்க வேண்டும்.

கடும் விதிமுறைகள், கராறான 24*7கண்காணிப்பின் வழி தோன்றும் எந்த உறவும் பிளாஸ்டிக்காக பயனற்றதாகவோ போகும். Metooவை பயந்து நாளைய ஆசிரியர்கள் எந்திரர்களாக மாறக் கூடாது என்பதே என் பிரார்த்தனை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.