முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: சேரனுக்கு எதிரான மீராவின் பாலியல் குற்றச்சாட்டு (1)



பிக்பாஸ் டாஸ்க் ஒன்றில் விளையாட்டின் பகுதியாக ஓடிச் செல்லும் மீராவை சேரன் தடுத்து அவர் தோளைப் பற்றி தள்ளி விடுகிறார். விளையாட்டின் இந்த நியதியை ஏற்று மீராவும் சேரனுக்கு ஹை பை கொடுக்கிறார். ஆனால் இதையடுத்து வீட்டிலுள்ளோரிடம் மீரா பேசும் போது தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக புலம்புகிறார். சேரன் தன்னை இடுப்பைப் பிடித்து தள்ளி விட்டதாக அதனால் தான் காயப்பட்டதாக (வலி ஏற்பட்டதாக), அவரது தொடுகை தப்பாக பட்டதாக சொல்கிறார். பெண்களிடம் கண்ணியமாகவே நடந்து கொள்வேன் எனக் கோரும் சேரன் இப்படி தன்னிடம் பண்ணலாமா என்பதே அவரது கோரல். தனது கூற்று மீது மீராவுக்கு சற்று குழப்பம் இருந்திருக்க வேண்டும். தான் சரியாக வெளிப்படுத்தவில்லையோ எனத் தோன்றியிருக்கலாம். ஆகையால் அவர் பின்னர் சாண்டியிடம் நடந்த சம்பவத்தை நிகழ்த்தி காட்டினார்.
சாண்டி மீராவாக மீரா சேரனாகிறார். மீரா சாண்டியின் இடுப்புக்கு மேலாக மார்புக்கு சற்று கீழே பற்றி தள்ளி விட்டார். இங்கு கைபட்ட இடம் மாறுவதை கவனியுங்கள். ஆரம்பத்தில் அவர் இடுப்பில் கைபட்டதாக சொல்கிறார். பேசப் பேச இடுப்புக்கு சற்று மேலாக என அவர் சுட்டுகிறார். பின்னர் டிரையலின் போது கை மார்புக்கு அரை அங்குலம் பக்கமாக வந்து விடுகிறது. மெல்ல மெல்ல, காட்சிபூர்வமாக, மீரா தன் மாரில் சேரன் கைவைத்து விட்டதாக ஒரு மனப்பதிவை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறார்.
 ஆனால் இதை ஏன் அவர் நேரடியாக சொல்வதில்லை?
மீராவின் அடிப்படையான இயல்பு இது - அவருக்கு தன்னை பிறர் ஏற்பதில்லை, தான் சொல்வதை நம்ப மறுப்பார்கள் என ஒரு அவநம்பிக்கை உண்டு. இதனால் ஒரு பிரச்சனையைப் பற்றி அங்கலாய்க்கும் போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவார். தெளிவாக குறிப்பாக எதையும் சொல்ல மாட்டார். தயக்கத்தில் ஒன்றை கிட்டத்தட்ட சொல்லுவார்; இதையா சொல்ல வந்தீங்க எனக் கேட்டால் மேலும் குழப்புவார். தான் விசாரிக்கப்படுவதாய் உணர்ந்தால் அவர் கூடுதலாய் பதற்றமாவார் - சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவார்; அதுவரை தயக்கமாய் அரைகுறையாய் சொன்னதை இப்படி அழுத்தமாக சொல்வார். இதுவே மீரா சாட்சியம் கூறும் பாணி.
வீட்டில் அவர் பொதுவில் குற்றச்சாட்டை வைக்க சேரன் கலங்கிப் போகிறார். தான் எந்த சந்தர்பத்திலும் ஒரு பெண்ணை தப்பாக தொட்டதில்லை, தான் அப்படி செய்ததாய் யாராவது நினைத்தால் மன்னியுங்கள் என கையெடுத்து ஒவ்வொரு பெண் பங்கேற்பாளரிடமாக கூப்பி அழுகிறார். பார்வையாளர்களின் நெஞ்சை பதற வைத்த காட்சி இது. இப்படி பெயர் கெட்டுவிட்ட நிலையில் இரண்டு பெண்களின் தகப்பனாக தன்னால் இனி எப்படி குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும் என அப்பாவித்தனமாக கேட்கிறார். “சேரன் இப்படி ஒரு குழந்தையா?” என பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் ஒருநொடி குழம்பி இருப்பார்கள்
ஆனால் மீரா தன் தரப்பில் உறுதியாக இருக்கிறார். “என்னை சேரன் தப்பாக தொட்டு விட்டார்என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
 தான் அப்படி உணர்ந்தேன் என்பதே அவரது தரப்பு. “உணர்வுஎன்பது இங்கே முக்கியம். ஒரு தொடுகை தவறாக உணரப்பட்டால் நாம் அப்படி உணர்கிறவர்களின் பக்கமே நிற்போம். இதுவே இயற்கை. ஆக மீரா இந்த சொல்லை யுக்தியாக பயன்படுத்துகிறார். கொஞ்சம் நிதானமானதும் அவர் தன்னை சேரன் இடுப்பைப் பற்றி / இடுப்புக்கு மேலாக தொட்டு இழுத்து விட்டதனால் தான்காயப்பட்டதாகதிரும்பவும் சொல்ல ஆரம்பித்தார். இப்போது காயத்தின் பொருள் மாறி விட்டது. ஒரு பாலியல் குற்றச்சாட்டில்அவர் என்னை உற்றுப் பார்த்தார்என ஒரு பெண் சொன்னாலே அது பலமடங்கு நம் கற்பனையில் பெருகி ஒரு பிரம்மாண்ட குற்றமாக தெரியும். சம்மந்தப்பட்டவர்நான் ஒரு நொடி அவர் முகத்தைத் தான் பார்த்தேன்என்று சொன்னாலும் அது எடுபடாது. பெண் என்பவள் அனுதினமும் ஆண்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுபவள் எனும் பிம்பம் உலகம் முழுக்க கடந்த அரைநூற்றாண்டாய் வலுப்பட்டு விட்ட ஒன்று. அதனால் தான் பல பெண்கள் இந்த பிம்பத்தை தமக்கு சாதகமாய் வைத்து விளையாடும் சூழல் ஏற்பட்டு விட்டது
ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவே இத்தகைய குற்றச்சாட்டை ஒருமுறை வைத்தார் என்பது நினைவிருக்கும். இல்லை என சென்னா ரெட்டியால் மறுத்து ஆதாரத்தை காட்ட முடிந்திருக்காது. ஏனென்றால் ஆதாரம் பொருண்மையாக இருக்காது, அது உணர்வடிப்படையில் இருக்கும். அதாவது பாதிக்கப்பட்டவரின் உணர்வுகளின் அடிப்படையில். ஆக, நீங்கள் குற்றம் சாட்டும் பெண்ணை கேள்வியின்றி ஏற்கும் தவிர்க்க முடியாத ஒரு அநீதி நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மீராவிடம் மற்ற ஆண்கள் உங்களைப் பற்றி தள்ளி விடும் போது உங்களுக்கு அது பிரச்சனையாக இருக்கவில்லையா என கேட்கும் போது அவர் சொல்லும் பதில்அவர்கள் என் நண்பர்கள்என்பது. ஆனால் இந்த நண்பர்கள் நாளை எதிரியானால் அவர்களின் தொடுகை ஒருநொடியில் தவறான தொடுகை ஆகி விடுமே! பாலியல் குற்றச்சாட்டுகளை மனப்பதிவுகளின் அடிப்படையில் கேள்வியின்றி ஏற்பதன் ஆபத்து இது.

இந்த குழப்படிகளுக்கு முடிவு கட்டும் விதமாக நேற்றுகுறும்படம்போட்டுக் காட்டப்பட்டது. அதில் சேரன் மீராவின் வயிற்றித் தொட்டு தள்ளி விடுவது தெரிகிறது. அதுவும் தெளிவாக அல்ல, கலங்கலாக. ஏனென்றால் பிக்பாஸ் வேண்டுமென்றோ அல்லாமலோ பின்னிருந்து எடுக்கப்பட்ட காணொளியை மட்டுமே காண்பிக்கிறார். இதில் சேரனின் கை மீராவின் வயிற்றில் படுகிறதா இல்லையா என்பதே தெளிவில்லை. ஒருவேளை இந்த சர்ச்சையில் மீராவின் தரப்பை பலவீனப்படுத்த முன்னிருந்து எடுக்கப்பட்ட தெளிவான காணொளியை பிக்பாஸ் மறைத்திருக்கலாம். எப்படியோ, இந்த குழப்பம் எனும் கலங்கல் நீரில் சேரன் எனும் மீன் தப்பி விட்டது. நான் இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சேரன் மீராவை தள்ளி விடும் முன்பு ஒரு பெண் பங்கேற்பாளரை கையைப் பற்றி இழுத்து விடுவதை காண்கிறோம். ஆனால் மீரா விசயத்தில் ஏன் அவர் ஏன் (தன்னிச்சையாக) அதை செய்யவில்லை? இந்த விசயத்தில் உண்மை என்னவென சேரனின் இதயம் மட்டுமே அறியும் என்றாலும், ஒருவேளை இன்னும் தெளிவான காணொளி இருந்திருந்தால் சுலபத்தில் அவர் தப்பித்திருக்க முடியாது. (ஒருவேளை இந்தபாவத்துக்குபரிகாரமாகவோ என்னவோ இளம்வயதில் பேருந்தில் பெண்களை உரசுவதற்காக செல்வதுண்டு என போகிற போக்கில் பேசியதற்காக சரவணனை வீட்டு விட்டு வெளியேற்றி விட்டார் பிக்பாஸ்)
 குறும்படம் காண்பித்த பிறகு, கமல் பெண் பங்கேற்பாளர்களிடம் கருத்தைக் கேட்டறிகிறார். அவர்கள் ஒருமித்து சேரன் மீது தவறே இல்லை என்கிறார்கள். ஆனால் மீரா தன் தரப்பில் உறுதியாக இருக்கிறார். இடுப்பை  (அல்லதுஇடுப்புக்கு சற்று மேலாக மார்பை”) சேரன் தொட்டு தன்னை துன்புறுத்தியாக அவர் சொல்லி விட்டு உண்மை ஒருநாள் வெளியே வரும் என்கிறார். காணொளியில் தெரிந்ததை விட கூடுதலாக என்ன உண்மை வெளியே வர முடியும் என யாருக்குமே புரியவில்லை. சரி மீரா பொய் சொல்கிறாரா? நான் அப்படி நினைக்கவில்லை. மீராவுக்கு ஏற்பட்ட இந்தமனக்குழப்பத்தைநாம் இன்னும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

  நம் உடம்பில் நம் கண்ணுக்கு நேரடியாக, தெளிவாக, புலப்படும் உறுப்புகள் கைகள் மற்றும் கால்கள். வேறு உறுப்புகளை நீங்கள்உணர்கிறீர்கள்ஆனால் முழுமையாகபார்ப்பதில்லை”. உதாரணமாய், என் பின்னிருந்து நீங்கள் இடுப்பில் கை வைக்கிறீர்கள். அதை நான் பார்ப்பதில்லை, ஆனால் ஸ்பரிசத்தை உணர்கிறேன். பின்னர் இந்த ஸ்பரிசத்தை ஒரு காட்சியாக கற்பிக்கிறேன். அடுத்து ஸ்பரிச உணர்வையும் கற்பனைக் காட்சியையும் இணைக்கிறேன். தொடுகை இப்படித் தான் என் நினைவில் ஒரு பதிவாகிறது
இதை நீங்கள் மேலும் நன்றாக புரிந்து கொள்ள உங்களை பின்னிருந்து யாராவது நெருங்கும் போது அதை உங்கள் உடம்பால் உணர்வதை நினைவில் மீட்டுப் பாருங்கள். நீங்கள் அப்போது ஒன்றைப் பார்க்காமலேபார்க்கிறீர்கள்”; அந்த உணர்கை பார்ப்பதை விட தீவிரமாக இருக்கும். ஒரு பெண்ணின் உடம்பில் ஆணின் கை படும் போது அது இப்படித் தான் மனப்பதிவாகிறது. ஒரு பெண்ணின் இடுப்பில் நீங்கள் கைவைத்து பின் எடுக்கிறீர்கள்; எடுக்கும் போது லேசாக கை கீழ் மார்பில் பட்டதோ என என அப்பெண்ணுக்கு ஐயம் ஏற்படுகிறது. ஆம், பட்டிருக்கலாம் என நினைக்கும் போது அவள் அதை பார்ப்பதில்லை, கற்பனையின் உருவாக்கி தன் ஸ்பரிசத்துடன் இணைத்து அதை ஒரு புதிய பிம்பமாக தனக்குள் எழுப்பி கொள்கிறாள். இதன் பிறகு யார் வந்து சொன்னாலும் அவளால் அதை மறுக்க முடியாது; ஏனென்றால் அது அவளது உணர்வு சம்மந்தப்பட்டது, அவளது உணர்வை அவள் காட்சிப்புலத்தை விட அதிகமாக நம்புவாள். ஏனென்றால் காட்சி அவளுடையது அல்ல, உணர்வு அவளுடையது.

மீரா விசயத்தில் தோளில் பட்ட கை இடுப்புக்கும், அதற்கு சற்று மேலாகவும் பட்டதாக பயணித்து வந்து அவரது நினைவில் பதிந்தது ஒரு மிகை தான். ஆனால் ஒருவர் அப்படி நம்பி விடுவதற்கு நிச்சயமாக சாத்தியம் உள்ளது. ஆகையால் தான் அவர் பொய் சொல்வதாய் நான் நினைக்கவில்லை. நம் உடம்பு குறித்த நமது பிம்பம் என்பது மனப்பதிவுகளாலும் ஸ்பரிசங்களாலும் ஆனதே. அது மிக மிக அந்தரங்கமாக நம்முடன் உள்ளது. உதாரணமாக, அறுவை சிகிச்சையால் கை வெட்டப்பட்டவர்கள் தொடர்ந்து கையுடன் தான் இருப்பதாய் நம்புவதை மருத்துவர் வி.எஸ் ராமசந்திரன் ஆய்வு செய்திருக்கிறார். அதற்கு phantom limb என அவர் பெயரிட்டுள்ளார்

மீரா ஏன் சேரன் விசயத்தில் மட்டும் அப்படி உணந்திருக்கிறார்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...