முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அத்திவரதரும் இந்துத்துவ அரசியல் கனவும்


அத்திவரதர் வைபவம், அது சம்மந்தமான பரபரப்பு பற்றி சரவணன் சந்திரன் எழுதிய பதிவைப் படித்தேன். அவர் அப்பதிவை அழகாக எழுதியிருந்தாலும் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. அப்பதிவு பல பாஜகவினர் மற்றும் நடுநிலை சங்கிகளின் மார்பில் பாலை வார்த்திருக்கும் என்பதாலே இங்கு மாற்றுக்கருத்தை கூற விழைகிறேன்.

 - “மதம் சார்ந்த, கலாச்சார பெருமைகள் சார்ந்த உரையாடல்கள் இனி மையத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்கவே முடியாது. அதற்குத் தோதான காலமும் திரண்டு வந்திருக்கிறது. எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதில்தான்  தமிழக அரசியலின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். மதச் சொல்லாடல்களைத் தவிர்த்து விட்டு, இனி தமிழக அரசியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்கிற நம்பிக்கையும் தகர்ந்திருக்கிறது. ஒருவகையில் மண்டல்-மந்திர் அரசியல் மறுபடியும் துளிர்விடுவதற்கான காலமிது. அதற்கான ஆரம்பப் புள்ளிகள் தெரியவும் துவங்கி விட்டன. மதம் சார்ந்த விஷயங்களில் குழப்பமில்லாத அரசியல் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமும் தமிழக கட்சிகளிடையே உருவாகியிருக்கிறது. பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கைகளில் கைவைக்கையில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டிய இக்கட்டும் எதிர்த்தரப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லா தரப்பும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய புள்ளியாக இதையே பார்க்கிறேன்.” என சரவணன் சந்திரன் அவர் சொல்வதன் பொருள் இந்துத்துவ பூமியாக தமிழகம் விரைவில் உருமாறுவதை நாம் தடுப்பது எளிதல்ல, இந்து மத நம்பிக்கைகளை ஒட்டி அரசியல் கட்சிகள் இனி தமது கருத்தாடல்களை மறுதகவமைப்பு பண்ண வேண்டும், பெரியாரிய மத கிண்டல்களை மக்கள் இனி பொறுக்க மாட்டார்கள் என்பதே. ஆனால் கடந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் பெற்றமிகப்பெரிய வெற்றியைபார்க்கையில் எனக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது.

தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி தான். கோயில்களின் நிலம் தான். ஆனால் அது நம்மை மத வேறியர்களாக, இந்து தேசியவாதிகளாக மாற்றுவதில்லை. அதற்கு சில அடிப்படையான காரணங்கள் உண்டு.
1) இந்து தேசியம் பக்தியில் வேரூன்றுவதில்லை - அது இந்து-இஸ்லாமிய வெறுப்பில், மத இருமையில், அந்த இருமையை பின்புலமாக கொண்டு உருக்கொள்ளும்இந்தியதேசியவாதத்தில் (மாநில, மொழி தேசியவாதத்தில் அல்ல) வேரூன்றி உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பு உருக்கொள்ளாதவரை இந்துத்துவ அரசியல் இங்கே முலையுண்டு வளர்ந்து தவழாது. கரு தோன்றியதுமே கலைந்து விடும்.
2) அடுத்து பாஜக இந்த இந்து-இஸ்லாமிய பிரிவினை கதையாடலை வைத்து ஒற்றை இந்தியா எனும் லட்சியத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் அதுவும் சுலபமாக இராது. தமிழகம் அடிப்படையில் தன்னை தனி நிலமாக, தனி தேசமாக கருதுவது. மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையில், இந்தியா எனும் கருத்தமைவை இங்கே திணிக்க முடியாதபடி ஒரு பிளவு நீண்ட காலமாக உருப்பெற்றுள்ளது. இந்தியா என்றால் வடக்கே என மக்கள் ஆழமாக நம்புவார்கள். ஆக நீங்கள் இந்து மதத்தை இங்குள்ள ஆலய வழிபாட்டு முனைப்பைக் கண்டு கடைபரப்பலாம். ஆனால் அந்த கடையில் நீங்கள் இந்திய தேசியவாதத்தை விற்றால் போண்டியாகி விடும். இந்து மத பக்தியும் இந்திய தேச பக்தியும் இருவேறு சரக்குகள் - தமிழ் நிலத்தில் இரண்டையும் கலந்தால்தாமரைஇலை நீர் போல தனித்து நிற்கும்.  


அத்திவரதரைப் பார்க்க மக்கள் ஆயிரக்கணாக்கில் திரண்டு வருவார்கள்; பிரதமரும் வருவார். ஆனால் அதே அத்திரவரதரைக் கொண்டு தேர்தலில் ஒருவேளை நிறுத்தினால் ஓட்டளிக்க யாரும் வர மாட்டார்கள். அது வேற வாய்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Then Why the hell all Yr DMK guys were going to Prey Athivaradhar?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...