முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காஷ்மீரில் வளர்ச்சி எனும் கனவுக்கோட்டை


சிறப்புத் தகுதி ரத்துடன் காஷ்மீரில் தொழில்மயமாக்கம், அதனாலான வளர்ச்சி, மிகப்பெரிய பொருளாதார எழுச்சி நிகழப் போகிறது என கோட்டை கட்டுபவர்களிடம் நாம் கேட்க வேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி அத்தகைய வளர்ச்சிப் போக்குகள் ஏன் இந்தியாவின் பிற மாநிலங்களில் மோடியின் ஆட்சியின் கீழ் நிகழவில்லை என்பது.

 கடந்த சில ஆண்டுகளில் நமது பொருளாதாரம் மிகப்பெரிய சரிவையே சந்தித்துள்ளது; விலைவாசி கடுமையாய் உயர்ந்துள்ளது; படித்த இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் தம் தகுதிக்கு குறைவான வேலைகளில் சேர்கிறார்கள்; மேலும் பலர் வேலை கிடைக்கவில்லை என்பதாலே முதுகலை படிப்பில் சேர்கிறார்கள். வணிகம், விவசாயம் ஆகிய துறைகளில் மக்கள் தற்கொலையின் விளிம்புக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். சி.சி.டி சித்தார்த்தாவின் அதிர்ச்சியூட்டிய தற்கொலையை சுலபத்தில் மறந்து விட்டுகாஷ்மீர் மட்டும் சிங்கப்பூர் ஆகி விடும் என நம்மால் எப்படி நம்ப முடியும்
இந்தியாவின் வேறு பகுதிகளில் நிகழ்த்தாத மந்திர விதையை மோடி காஷ்மீரில் மட்டும் நிகழ்த்தி விடுவாரா? காஷ்மீரில் இந்தியாவின் வணிக நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடியை முதலீடு பண்ணப் போகிறார்கள், என்று பண்ணுவார்கள் என்பதற்கான திட்டமோ புள்ளிவிபரமோ இந்த அரசாங்கத்திடம் உண்டா? இந்த வணிக காந்தங்கள் ஏன் சென்னைக்கோ பெங்களூருக்கோ செல்லாமல், எந்த அடிப்படை வசதிகளோ படித்த தகுதியான ஏகப்பட்ட இளைஞர் படையோ இல்லாத காஷ்மீருக்கு செல்ல வேண்டும்? அப்படியே மோடி காஷ்மீரில் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து அதை மேம்படுத்த போகிறார் என்றால் அதை ஏன் பிற மாநிலங்களுக்கு அவர் இது வரை பண்ணவில்லை? இல்லை, அடுத்த தேர்தல் வரை வளர்ச்சி எனும் வடையை அவர் வாயிலே சுட்டுக் கொண்டிருப்பாரா? “காஷ்மீர் மக்களுக்கான பிரதிமந்திரி வேலை வளர்ச்சி திட்டம்என ஒன்றை பிரம்மாண்டமாக அறிவித்து விட்டு அப்படி நைசாக அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வேலை பார்க்க போய் விடுவாரா?

ஒரு அரசின் எதிர்கால செயல்பாட்டை நாம் அதன் இதுவரையிலானசாதனைகளைவைத்து தான் அனுமானிக்க முடியும். காஷ்மீரை இந்த அரசு இனி சொர்க்கபுரியாக்கும் என கூறுபவர்கள் இதுவரையில்அகண்ட பாரதத்துக்கானமோடி அரசின் பொருளாதார திட்டங்களின் / திட்டமின்மையின் படுதோல்வியை கவனிக்கவில்லை என்றே பொருள்.

முன்னாள் இந்திய தூதர் நிருபமா ராவ் (ஹார்வெர்ட்டில் எல்லாம் போய் படித்தவர்) போன்றவர்களே இப்படியான கற்பனைக் கோட்டையை கட்டுவதைப் பார்க்கும் போது (https://timesofindia.indiatimes.com/blogs/toi-edit-page/paradise-lost-or-regained-kashmir-must-be-drawn-away-from-the-precipice-with-humane-and-judicious-calibration/) இவர்கள் எல்லாம் இந்தியாவில் தான் வாழ்கிறார்களா இல்லை நீரோவின் உடன்பிறப்புகளா எனும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தியாவின் படித்த வர்க்கம் இன்னும் எத்தனைக் காலம் இப்படியான கற்பித பஞ்சுமெத்தைகளில் மல்லாக படுத்தபடி சபாஷ் என மோட்டுவளையை நோக்கி கைதட்டப் போகிறது? மொத்தமாய் தெருவுக்கு வந்த பிறகா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.