முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Plop: Notes on Heidegger நூல் வெளியீடு - சில குறிப்புகள் (2)


முதல் நாள் வாசிப்பின் போது நான் நேஹாவிடம் ஒரு பொய் சொன்னேன், “இந்த குழுவில் இருப்போர் ஒரு விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு வாசிப்பு முடிந்ததும் அன்றைக்கு வாசித்ததைப் பற்றி அடுத்த நாள் ஒரு சிறிய குறிப்பு எழுதிக் காட்ட வேண்டும்.” நேஹா அதை நிஜமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் எழுதிக் கொண்டு வந்தார். அதை சற்று விரிவுபடுத்தி தரக் கேட்டேன். அப்படித் தான் நேஹா இந்த நூலுக்காக எழுதிய முன்னுரை தோற்றம் கொண்டது. அவர் அதன் பிறகு மிகுந்த ஆர்வத்துடன் அந்த சொற்ப காலத்தில் மூன்று அத்தியாயங்கள் எழுதினார்.


இந்த புத்தகத்தில் கலை, பெண் மனம், புகைப்படக் கலைஞனின் அறம், அரசியல், பெண்ணியம், கல்வி என பல தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன என்றாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமாக தோன்றுவன இரண்டு அத்தியாயங்கள்

ஒன்று புல்வாமா தாக்குதலை ஒட்டி மரணம் பற்றி நானும் ஆயுஷும் எழுதின அத்தியாயங்கள். புல்வாமாவை அடுத்த ஒரு வாரத்தில் நாடெங்கும் அதே பேச்சு தான். தொலைக்காட்சிகள் தொடர்ந்து ராணுவ வீரகளின் உடல்களை, ஒப்பாரி வைக்கும் உறவுகளை, பழிவாங்கும் சூளுரைகளை காட்டி வந்தன. இந்த ஒளிபரப்பை தனது அப்பா வெறி பிடித்தாற் போல டிவியில் பார்ப்பதாகவும் அது தனக்கு எரிச்சலூட்டுவதாகவும் ஆயுஷ் சொன்னான். நாடே அப்படித் தான் பார்க்கிறது, அது ஒரு கூட்டு இரங்கல் நிகழ்வு என நான் சொன்னேன். அப்போது நாங்கள் இதைப் பற்றி மேலும் ஆராய வேண்டும் என முடிவெடுத்தோம். ஹைடெக்கர் மரணம் பற்றி எழுதுள்ளதை அடுத்த நாட்களில் தொடர்ந்து வாசித்தோம். வீட்டுக்குப் போய் குறிப்புகள் எடுத்து புல்வாமாவில் தொடங்கி மரணம் நம் ஒவ்வொருவருக்கும் எப்படியான அர்த்தத்தை அளிக்கிறது, ஏன் மனிதர்களுக்கு மரணம் இவ்வளவு ஆர்வத்தை கிளப்புகிறது, மரணத்தைப் பற்றி சிந்திப்பதால், மரணத்தின் வாயிலில் போய் நின்று எட்டிப் பார்க்கையில் நாம் அடையும் பயன்கள் என்ன என தத்துவார்த்தமாக இரு அத்தியாயங்கள் எழுதினேன்.

மற்றொரு நாள் சந்திப்பின் போது ஜோஷ்வா எனும் தலித் ஆய்வாளரான நண்பர் ஒருவர் எங்களுடன் வாசிப்பில் கலந்து கொண்டார். தத்துவம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு மனிதனின் சுயம் என்பதை தனிமனித பார்வையில் இருந்து மட்டுமே காண்பது சரியா, ஒரு தலித்தின் சுயம் / இருப்பு சமூக உறவாடல்களால் கீழ்மையாக கட்டமைக்கப்படும் போது ஹைடெக்கரின் தத்துவத்துக்கு அந்த பின்புலத்தில் என்ன மதிப்பு இருக்க முடியும், இந்த உலகில் நாம்இருப்பதுமட்டும் நமது அசலான இருத்தல், அங்கு கருத்துக்கள், நம்பிக்கைகள் போன்ற சங்கதிகளுக்கு மதிப்பில்லை, அவை போலியானவை என நீங்கள் எப்படி கூற முடியும், சாதியை நாம் சில கருத்துக்கள், நம்பிக்கைகள் வழித்தானே உற்பத்தி பண்ணி மனிதனை ஒடுக்குகிறோம் என அவர் வினா எழுப்பினார். இக்கேள்விகள் எங்களை அடுத்து வந்த நாட்களில் மிகவும் தொந்தரவு பண்ணின.

 ஆக அடுத்தடுத்த கூட்டங்களில் நாங்கள் சாதி குறித்து அதிகமாக விவாதித்தோம். அம்பேத்கரை வாசிக்க என்றே சில வாரங்களை ஒதுக்கினோம். அடுத்து அம்பேத்கரில் இருந்து ஹைடெக்கருக்கு மீண்டோம். ஆளுக்கு ஒரு அத்தியாயம் இதைக் குறித்து எடுத்துக் கொண்டோம். நான் என் அத்தியாயத்தில் இளையராஜா தனது தலித் அடையாளத்தை மறுப்பதன் நியாயம் என்னவாக இருக்க முடியும், சாதி என்பது அடையாளமா அல்லது இருப்பா, சாதி நம் மனதிலும் சமூக உறவாடல்களிலும் இருக்கிறதென்றால், அது நம் இருப்பாக நிச்சயமாக இருக்கிறதா, அரசியலும் இருப்பும் ஒன்றா ஆகிய கேள்விகளை எழுப்பினேன். ஹைடெக்கர் வழியாக பார்க்கையில் சாதியை கடந்த வாழ்வு ஒன்று சாத்தியமாகிறது, ஆனால் அது அதேநேரம் மிகவும் சிக்கலான ஒரு இருப்பு என்பதே என் கண்டடைதல். ஆயுஷும் இதே தரப்பை வேறொரு கோணத்தில் கையாண்டு எழுதி இருக்கிறான்.
நாங்கள் எடுத்துக் கொண்ட புத்தகப் பயணம் நிறைவுற்று விட்டது.

இனி எங்கள் முன் இருக்கும் சவால் இந்த புத்தகம் தரும் அழுத்தத்தை அடுத்த புத்தகத்தின் உருவாக்கத்தை பாதிக்காமல் தப்பித்துப் போவது, அதே களங்கமின்மையுடன் பயமற்ற உற்சாகத்துடன்  தொடர்ந்து விவாதிப்பது மற்றும் எழுதுவது. தத்துவத்தை, அது என்ன தான் தீவிரமான கேள்விகளை எழுப்பினாலும், ஒரு ஜாலியான விளையாட்டாக மட்டுமே எடுத்துக் கொள்வது என ஆயுஷ் மற்றும் நேஹாவிடம் இன்று நிகழ்ச்சி முடிந்து டீக்கடையில் அமர்ந்திருக்கையில் சொன்னேன். ஏனென்றால் தீவிரமாகஇருக்கலாம்அப்படி தீவிரமாக இருப்பதாய் சிந்தனையை தலையில் ஏற்றிக் கொண்டு திரியக் கூடாது, அது போலியானது என்றே ஹைடெக்கரும், இப்போது எங்களுடன் இருந்திருந்தால், சொல்லியிருப்பார். நாங்கள் அடுத்தடுத்த தத்துவ ஞானிகளுக்கு நகர்ந்தாலும் ஹைடெக்கர் அளித்த இந்த ஒளியை மட்டும் தொடர்ந்து கையில் ஏந்தி அணையாமல் இறுதி கொண்டு செல்ல வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...