முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனது நண்பன் எனது நண்பன் அல்ல



தெரிதா தனது The Politics of Friendship (நட்பின் அரசியல்) என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில்  கிரேக்க ஞானி அரிஸ்டாட்டிலின் ஒரு மேற்கோளைப் பற்றி வெகுசுவாரஸ்யமாக பேசுகிறார்: அரிஸ்டாட்டில் தன் நண்பர்களிடத்து இவ்வாறு ஒருமுறை சொல்லுகிறார்: “ நண்பர்களே, நண்பர்கள் என யாருமே இல்லை”. இந்த மேற்கோளின் சுயமுரண் வெளிப்படையானது - நண்பர்களே இல்லையென்றால் அரிஸ்டாட்டில் இங்குநண்பர்களேஎன அழைத்து பகிர்ந்து கொள்ளும் அந்த நபர்கள் எல்லாம் யார்? அரிஸ்டாட்டில் என்னதான் சொல்ல வருகிறார்? தெரிதா இவ்வாறு விளக்குகிறார் - நட்பு என்பது யாரெல்லாம் நமது நண்பர் அல்ல என நாம் வகுத்துக் கொண்ட பின்னர் தோன்றுகிறது. நீ எனது நண்பன், ஏனெனில் அவன் எனது விரோதி, அவன் எனது விரோதி எனில் அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு நண்பன், அவன் எனக்கு நண்பன் எனில் என் விரோதிக்கு அவனும் விரோதி, அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு விரோதி, ஏனெனில் அவன் என் நண்பனுக்கு நண்பன் அல்ல, இன்னும் ஒருவன் எனக்கு நண்பனோ விரோதியோ அல்ல, அவனை இரண்டு வகைமைக்குள்ளும் அடைக்க முடியவில்லை, அவன்துரோகியாகஇருக்க வேண்டும், அவனுக்கு எதிர் இருக்கையில் இருப்பவன் அவனுக்கு விரோதி என அறிவேன், ஆனால் அதற்காக அவன் எனக்கு நண்பன் ஆக முடியாது, ஏனெனில் ஒரு துரோகியின் விரோதியும் விரோதியின் விரோதியும் ஒன்றல்லன்.


 நீங்கள் கேட்கலாம், நமது நண்பர்களை எல்லாம் இவ்வாறான இருமைக்குள்ளா வகுத்து கொண்டிருக்கிறோம் என. “நண்பன்எனும் கோரல் எப்போதும் இருமையை வலியுறுத்துகிறது, ஆனால் நட்பனுபவத்தில் இருமை இருப்பதில்லை. (அதற்கு பின்னால் வருகிறேன்.) நட்பு மிக அந்தரங்கமான உறவு - நீங்கள் உங்களுக்கு பரிச்சயமானவர்களின் வட்டத்தில் இருக்கும் போது ஒருவரை மட்டும் கட்டி அணைத்துஇவன் என் நண்பன்எனச் சொல்வது பரவலான சங்கடத்தை ஏற்படுத்தும்; மற்றவர்கள் தாம் புறக்கணிப்படுவதாய் ஒரு கணம் உணர்வர். ஆகையால் நாம் இப்படி அடையாள்பபடுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்த அப்போது முயல்வோம். நமது நட்பு இவ்விடத்தில் அதுவரை நாம் நினைத்திருந்ததைப் போலசாதாரணமானதுஅல்ல, அது அசாதாரணமானது என உள்ளுணர்வில் அறிந்து கொள்வோம். பரிச்சயக்காரர்களின் அசௌகர்யத்தின் மௌனத்தில் தான் அந்த மனத்திறப்பு நமக்குக் கிட்டும். ஒருவர் தனது நட்பை பிரகடனம் செய்யும் போதெல்லாம் அது ஒரு அந்தரங்க ஒளிவட்டத்தைப் பெற்று விடுவது இதனாலே - இப்படியான பிரகடன நிலையை நட்பின் சமூகமாக்கம் எனலாம். ஆனால் பிரகடனம் செய்யத் தேவையிராமல் நண்பர்கள் பரஸ்பரம் சந்தித்து மனங்கள் ஒன்றுடன் ஒன்றுசெம்புலப்பெயல் நீர்போல் கலக்கையில் அங்கு சங்கடங்கள், அந்தரங்கம், அது குறித்த பிரக்ஞை ஏதும் இராது. நட்பனுபவம் என அதை நாம் வரையறுத்துக் கொள்வோம்.  

நட்பனுவத்தில் நண்பன் என்பவன் நண்பன் அல்லாமல் ஆகிறான் என்கிறார் தெரிதா (அதுவே அரிஸ்டாட்டிலின்  மேற்கோளின் பொருள்). அப்போது நண்பன்-விரோதி எனும் இருமை பனிப்புகை போல மறைந்து விடுகிறது. அதனால் தான் அரிஸ்டாட்டில் நண்பர்களே நண்பர்கள் யாருமில்லை என்கிறார், நண்பர்களே நண்பர்கள் அனைவரும் எதிரிகள் என அவர் சொல்லவில்லை. இந்த நுணுக்கமான வித்தியாசம் முக்கியமானது. ஒருவன் நமது விரோதி அல்லாமல் ஆகும் போதே நண்பன் ஆகிறான், ஆனால் அவன் நண்பன் ஆன பின் அவன் நமது நண்பனும் அல்லாமல் ஆகிறான், அவன் நாமாகவே ஆகிறான், நாம் அவனாகவே ஆகிறோம். இதை நட்பின் பூரண நிலை எனலாம். (நட்பின் சம்போகம்!)

அரிஸ்டாட்டில் நண்பர்களை பொதுவாக மூன்றாக பிரித்துக் கொள்கிறார் - 1) ஒரு நோக்கத்தின், ஒரு பொதுவான தேவையின் பொருட்டு சேர்ந்திருக்கும் நண்பர்கள் (ஒரே துறையில் பணியாற்றுபவர்கள், சக படைப்பாளிகள், ஒரே கட்சிக்காரர்கள், ஒரே லட்சியம் கொண்டவர்கள்); 2) பரஸ்பரம் அளிக்கும் இன்பத்தின் பொருட்டு நட்பாகிறவர்கள் (சுவாரஸ்யமாகப் பேசுகிறவர்கள், பணம் செலவழிக்கிறவர்கள், இனிமையான சுபாவம் கொண்டவர்கள், வசீகரமான ஆளுமை கொண்டவர்கள்) - இலக்கியத்தில் நாம் காணும் குரு-சிஷ்ய நண்பர்களையும் இவ்வகைமையில் சேர்க்கலாம் என நினைக்கிறேன். 3) நண்பனின் நலனில் மகிழ்ச்சியியும் நிறைவும் காண்கிறவர்கள் - இவர்கள் தான் வள்ளுவர் சொல்லும்உடுக்கை இழந்தவன் கைவகையினர். தான் எப்படி இருக்க முடியாதோ, எப்படி இருக்க விரும்பவில்லையோ அப்படி தன் நண்பன் இருப்பதால் அதை ஊக்கப்படுத்துவார்கள்; நண்பனின் மகிழ்ச்சியும் எழுச்சியும் தன்னுடையது என நம்பத் தலைப்படுகிறவர்கள்; நண்பனும் இவர்களை அப்படியே காண்பதால் இவர்கள் ஈருடல் ஓருயிராக வாழ்வார்கள் - ஒருவனுக்கு இரு வாழ்க்கைகள் என கற்பனை பண்ணிப் பாருங்கள். இது பாரமாக அல்ல தனி மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே கவனிக்கத்தக்கது. இந்த நிலை படைப்பாக்கத்துக்கு இணையானது - நண்பனுக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சனை வருகிறது, கடும் துன்பத்தில் விழுகிறான், நீங்கள் அவனுக்காக வருந்துகிறீர்கள், ஆனால் அந்த வருத்தம் நீங்கள் உங்களுக்காக வருந்துவதைப் போன்றதல்ல. இந்த வருத்தத்தில் ஒரு மனவிடுதலை இருக்கிறது. நீங்கள் களைத்துப் போகிறீர்கள், மனம் புண்படுகிறீர்கள், கண்ணீர் சிந்துகிறீர்கள், ஆனால் அதன் முடிவில் உங்களை ஒரு சிறிய பரவசம் வந்து ஆட்கொள்கிறது. நண்பனின் வெற்றியைக் கொண்டாடுவதும் இப்படியே. சொல்லப் போனால் நண்பனின் வாழ்வில் ஒரு துன்பம் நேர்கையில் நீங்கள் நண்பனை விட அதிகமாய் அல்லல்படுகிறீர்கள், அவன் வாழ்வில் ஒரு மகிழ்ச்சி வருகையில் அவனை விட அதிகமாய் அதைக் கொண்டாடுகிறீர்கள், இரண்டின் போது உங்களுடையது அல்லாத ஒன்றில் மனம் தோய்கிறீர்கள். அது ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம் அழுவதைப் போன்றது, சிரித்து ஆட்டம் போடுவதைப் போன்றது, ஆனால் உங்கள் உணர்ச்சிகள் நடிப்பல்ல. இந்த மூன்றாவது வகை நண்பர்களையே அரிஸ்டாட்டில் உன்னதமானவர்கள், ஆனால் இவர்கள் அரிதானவர்கள் என்றார்.

நன்றி: உயிர்மை.காம், அங்கே என்ன சத்தம் (6)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...