Skip to main content

ராகுல் திராவிட் – ஸ்டைல் ஸ்டைல் தான்! (கிரிக்கெட்டோகிரபி 2)


164 டெஸ்ட் ஆட்டங்களில் 13, 288 ரன்கள். 36 சதங்கள். 63 அரை சதங்கள். ஆட்ட சராசரி 52.31. இந்த நம்ப முடியாத சாதனை மட்டுமே திராவிடா என்று கேட்டால் இல்லை. 96இல் துவங்கி 2012 வரை எண்ணற்ற முறை வெளிநாட்டு மண்ணில் அசுர வேக பவுலர்களிடம் இருந்தும் முரளிதரண், வார்ன் போன்ற ஸ்பின்னர்களிடம் இருந்தும் இந்திய பேட்டிங் வரிசையின் பிற வீரர்களை பாதுகாத்திருக்கிறார். ஒருவேளை திராவிட் இல்லாவிட்டால் ல்ஷ்மணால் கொல்கொத்தாவில் தனது சாதனை இன்னிங்ஸான 281 அடித்திருக்க முடியாது. திராவிட் எனும் சாரதி இல்லாமல் மேற்கிந்திய தீவுகளிலும் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திலும் சச்சின் அசாத்தியமாய் பவுலர்களை துவம்சம் செய்திருக்க முடியாது.

அசருதீன், சச்சின். கங்குலி, லஷ்மண் ஆகியோரின் பின்னணியில் அவர் ஒரு நிழலைப் போல, ஒரு துணை நடிகனைப் போல் பதினாறு ஆண்டுகள் அற்புதமாய், நிதானமாய், தொடர்ச்சியான தரத்துடன் ஆடினார். இயல்பாகவே திராவிடை நாம் கொஞ்சம் திறமை குறைந்த, நன்றாய் தடுத்தாடுகிற, எல்லையில் போர் புரிகிற ராணுவ வீரரை போன்று மதிப்பிட்டோம். கொல்கத்தாவில் லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 அடித்த டெஸ்ட் ஆட்டத்தில் திராவின் அபார சதம் சற்றே மங்கிப் போனது. அவருக்கு எப்போதுமே இது நடந்தது. ஆனால் தடுப்பாட்டமும் நிதானமும் மட்டுமே அல்ல ராகுல் திராவிட். அவர் ஒரு அபாரமான ஸ்டைலிஸ்ட். வந்த புதிதில் சச்சினை விட அதிகமான பெண் விசிறிகள் அவருக்கு இருந்தனர்.
பேட்டிங் எனும் தியானம்
ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் மிகவும் கூலாக ஆடுவதில் திராவிட் சச்சினை விடவும் மேல். தான் சந்திக்கும் ஒவ்வொரு ஓவருக்குள்ளும் அவர் முழுமையான தியான நிலையில் மனதை குவித்தார். தடுத்தாடும் ஒவ்வொரு பந்திலும் தன் மனதை குவித்தார். அதில் ஆழ்ந்து தன்னை இழந்தார். ஜென் தத்துவத்தில் இதனை mindfulness என்பார்கள். இதனை கிரிக்கெட் பேட்டிங்கில் அற்புதமாய் செயல்படுத்தியவர் திராவிட் மட்டுமே.
ஸ்டைலும் டெக்னிக்கும்
திராவிட் ஒரு பிரமாதமான ஸ்டைலிஸ்டும் கூட. திராவிட் பந்தை ஆடும் முன்பு அவரது மட்டை, முழங்கை, இடது கால் மற்றும் தலை எவ்வளவு நேர் கோட்டில் வருகிறது எனப் பாருங்கள். ஒரு கோட்டை வரைந்தால் துல்லியமாய் பிசிறின்றி நேராய் வரும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் தான் திராவிடை பவுல்ட் ஆக்குவதோ ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைப்பதோ மிகவும் சிரமம். தலை-முழங்கை-மட்டை-இடதுகால் அவ்வளவு நேராய் இருக்கும் போது பந்தின் லைனை கணிப்பது சுலபமாகிறது. கிரிக்கெட் பக்கவாட்டில் ஆடப்படுகிற ஆட்டம். பேட்ஸ்மேன் பக்கவாட்டில் நின்று பவுலர் பக்கவாட்டில் வீசும் பந்தை ஆடுகிறான். ஆனால் மனிதனின் பார்வை பக்கவாட்டில் சரியாய் வேலை செய்யாது. நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் தலையை திருப்பாமல் வலது பக்கம் அசைகிற பொருளை கவித்துப் பாருங்கள். எவ்வளவு சிரமம் எனப் புரியும். சுவரில் நடக்கும் போது பக்கவாட்டில் பார்த்தால் பேலன்ஸ் இழந்து தவறி விடுவீர்கள். கிரிக்கெட்டில் பல பேட்ஸ்மேன்கள் அவுட்ஸ்விங்கர் பந்துகளுக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆவது இப்படி உடம்புக்கு வெளியே பார்வைக்கு மறுபக்கம் போகிற பந்தை சரியாய் கணிக்க முடியாததானால் தான். திராவிட் ஆடும் போது அவரது தலை முதல் கால் வரை ஒரே நேர்கொட்டில் வருவது தான் கட்டுறுதியான தடுப்பாட்டத்துக்கு காரணம். திராவிடை என்னால் தொடர்ந்து இருமுறைக்கு மேல்பீட்செய்ய முடிந்ததில்லை என ஆஸ்திரேலியாவின் சிறந்த வேகவீச்சாளர்களில் ஒருவரான கிலெஸ்பி கூறுகிறார். ஸ்வீவ் வாஹ் கூறுகிறார்: “திராவிட் ஆட வந்து 15 நிமிடங்களுக்குள் அவுட் ஆக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் அவரை அவுட் ஆக்குவதை மறந்து விட்டு மற்ற வீரர்களை அவுட் ஆக்க வேண்டும்
பேக் லிப்ட் (back lift) மற்றும் பேட் புளோ (bat flow)
பேக் லிப்ட் என்பது ஒருவர் பந்தை எதிர்கொள்ளும் முன் பேட்டை எந்தளவுக்கு மேலே தூக்கி வைத்திருக்கிறார் என்பது. அங்கிருந்து பேட்டை கீழே கொண்டு வருகிற அரைவட்ட அசைவு பேட் புளோ. இரண்டுமே எவ்வளவு அதிகமாய் இருக்குமோ அந்தளவு பேட்ஸ்மேன் பந்தை அட்டகாசமாய் டைமிங் செய்யவும் வலுவாய் அடிக்கவும் முடியும். கேரி சோபர்ஸ், லாரா, சச்சின், காம்பிளி, சயித் அன்வர், கெவின் பீட்டர்ஸன், யுவ்ராஜ் சிங், ரெய்னா, ஷிக்கர் தவன் என பலரையும் உதாரணம் காட்டலாம். பொதுவாக நன்றாய் தடுத்தாடுகிறவர்கள் குறைவான பேக் லிப்ட் மற்றும் பேட் புளோ கொண்டிருப்பார்கள். ஆனால் திராவிட் மாறாக ஆர்ப்பாட்டமான பேக் லிப்ட் கொண்டவர். “நான் ஆணையிட்டால்பாடலில் எம்.ஜி.ஆர் சாட்டையை வலது கோடியில் இருந்து சுழற்றி நம்பியாரை விளாசுவது போலத் தான் திராவின் தன் பேட்டை சுழற்றி கீழே கொண்டுவது இருக்கும். இப்படியான பேக் லிப்ட் இருந்தால் பந்தை சந்திக்க சற்று தாமதமாகும். ஆனால் திராவிட் இந்த டெக்னிக்கை கொண்டே சிறப்பாய் தடுத்தாடினார் என்பதே ஒரு பெரும் சாதனை.
பின்னங்கால் ஆட்டம்
திராவிட் வெளிநாடுகளில் அபாரமாய் ஆடியதற்கு அவர் இயல்பில் நன்றாய் பின்னங்காலில் ஆடக் கூடியவர் என்பது முக்கிய காரணம். ஆனால் பந்து ஸ்விங் ஆகும் போது பின்னங்கால் ஆட்டம் மட்டும் இருந்தால் அவுட் ஆக வேண்டியது தான். அதனாலே அவர் ஒவ்வொரு முறை பந்து வீசப்படும் போதும் வேண்டுமென்றே முன்னங்காலுக்கு சென்று சந்திக்க தலைப்பட்டார். ஆனால் பந்து ஷார்ட் லெங்தில் விழுந்தால் முன்னங்காலுக்கு வந்து பிறகு பின்னங்காலுக்கு ஆடுவார். இந்த back and forth அசைவு பார்க்க அம்மா குருவிக்காய் குஞ்சுகள் கூட்டிலிருந்து எட்டி எட்டிப் பார்த்து தலையை உள்ளிழுப்பது போல இருக்கும். ஏற்கனவே நான் குறிப்பிட்ட பேக் லிப்டோடு இந்த காலாட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவதாய் அவர் ஸ்டம்புகளை பாதுகாக்கவும் நகர்வார். பந்து பிட்ச் ஆகும் முன் திராவிட் ஒரு நர்த்தனமே ஆடி முடித்திருப்பார். இப்படி தயாராக அவருக்கு மற்ற பேட்ஸ்மென்களை விட கூடுதலாய் ஒரு நொடி ஆகும். அதனால் தான் சச்சின், லஷ்மண், கங்குலி போல் அவரால் ஒவ்வொரு பந்தையும் வெண்ணெய் போல் டைமிங் செய்ய முடிந்ததில்லை.
சிறந்த டெக்னிஷியன்
திராவிடின் டெக்னிக் குறைகொண்டது தான். அவரது பேட் முன் பந்தை சந்திக்கும் முன் (விராத் கோலியைப் போல்) முதல் ஸ்லிப்பை நோக்கி இருக்கும். ஆனால் இந்த குறையையும் மீறி அவர் உலகின் சிறந்த டெக்னிஷியனாக உயர்ந்தது மற்றொரு பிரம்மாண்ட சாதனை.
துவக்கம்
பலரும் கருதுவது போல் திராவிட் கன்னடியர் அல்ல. அவர் (ரஜினியைப் போல) கர்நாடகத்தில் வளர்ந்த மராட்டியர். அவரது அப்பா ஒரு ஜாம் கம்பெனியில் வேலை செய்தார். அதனாலே சின்ன வயதில் அவரது ஜாமி என வட்டப்பெயர் இருந்தது. கராறான மத்திய வர்க்க குடும்ப வளர்ப்பு. அப்போது தனது வீட்டைச் சுற்றி நிறைய காலி இடம் இருந்தது, மாலையில் அங்கு குழந்தைகள் கூடி அங்கு கிரிக்கெட் ஆடுவார்கள் என்றும், அவ்வாறு ஆடியே தனக்கு கிரிக்கெட் மீது பெரும் காதல் ஏற்பட்டது என்றும் திராவிட் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். பள்ளி அளவில் ஆடி நிறைய ரன்கள் அடித்த பின் அவருக்கு under-15, under 19 என சிறுவர்களுக்கான மாநில அணிகளில் வாய்ப்பு கிடைக்கிறது. சின்ன வயதில் திராவிட் கவாஸ்கர் மற்றும் குண்டப்பா விஷ்வநாத்தின் விசிறி. பிற்காலத்தில் அவரது கட் மற்றும் கவர் டிரைவ் ஷாட்களில் விஷ்வநாத்தின் தாக்கம் பளிச்சென தெரிய வந்தது. விரைவில் திராவிட்டுக்கு ரஞ்சி அணியில் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய மற்றொரு ஊக்கமான சச்சின் தான் அதற்கு காரணம் என்கிறார் திராவிட். சச்சின் 16 வயதில் இந்திய அணிக்காய் ஆட மாநில அணிகளில் இருபது வயதுக்குள் ஆட திராவிட் போன்றோருக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. சிறுவயதில் சச்சினை போல் தன்னாலும் ஆட முடியும் என நம்பிக்கை பிறந்தது.
1996இல் இங்கிலாந்துக்கு பயணமான இந்திய அணியில் திராவிட் இடம்பெற்றார். இரண்டாவது டெஸ்டில் லார்ட்ஸ் மைதானத்தில் மூத்த வீரர் மஞ்சிரேக்கர் காயம் காரணமாய் விலக திராவிட் 95 அடித்தார். அதன் பிறகு திராவிட் எனும் ரன் எந்திரம் 16 வருடங்கள் இந்தியாவுக்காக டன் கணக்கில் ரன்களை உற்பத்தி செய்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மே. தீவுகள், பாகிஸ்தான் என திராவிட் சோபிக்காத நாடுகளே இல்லை. அவர் எப்போதுமே பந்தை சற்றே தாமதித்து அடிக்கக் கூடியவர் என்பதால் எப்போதுமே ஸ்விங் ஆகும் இங்கிலாந்தின் ஆடுதளங்கள் அவருக்கு பெரும் அறுவடைக் களமாகியது.
ஒருநாள் ஆட்டம் திராவிட்டுக்கு பழக சற்று காலம் பிடித்தாலும் 12 சதங்கள் 83 அரைசதங்கள் அடித்து முக்கியமான வீரராய் தன் தடத்தை அங்கும் பதித்தார். அவரது தலைமையின் கீழ் இந்தியா மே. தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தானில் தொடர்கள் வென்றது. 14 ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ந்து இரண்டாவதாய் மட்டையாடி வென்ற சாதனையையும் படைத்தது. .பி.எல்லிலும் அவர் சிறந்த கேப்டன் எனும் பெருமையை பெற்றார்.

பெட்டி செய்தி
திராவிடின் சிறந்த டெஸ்ட் சதங்கள்
2001இல் கொல்கொத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அவர் அடித்த 180 இந்தியா தோல்வியில் இருந்து மீண்டு அசாத்திய வெற்றி பெற உதவியது
2002இல் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராய் அடித்த 148 மிக சிரமான ஆடுதளத்தில் இந்தியா வெல்ல காரணமாகியது
2003இல் அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் 233 மற்றும் 72 நாட் அவுட் 20 அடித்து வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றளித்தார். கேப்டன் கங்குலிதிராவிட் கடவுளை போல் ஆடினார்என வர்ணித்தார்.
2004இல் பாகிஸ்தானில் ராவில்பண்டி மைதானத்தில் அவர் எதிராய் அடித்த 270 வரலாற்றில் முதன்முதலாய் இந்தியா பாகிஸ்தானில் டெஸ்ட் தொடர் வெல்ல காரணமாகியது.
2006இல் கிங்ஸ்டன் மைதானத்தின் நான்காவது டெஸ்டில் மிகவும் சிரமான ஆடுதளத்தில் அவர் அடித்த 81 மற்றும் 68 இந்தியா 35 வருடங்களுக்கு பிறகு மே. தீவுகளில் டெஸ்டு தொடரை வெல்ல உதவின.

Comments

Senthil Prabu said…
Woww!! அற்புதம்!!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...