Skip to main content

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள்



.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் மாநிலத்தில் இருந்து வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடிப் போகும் தொழிலாளர்களுக்கு என ஒரு தனி கமிஷன் ஆரம்பித்திருப்பதாக ஒரு செய்தி படித்ததும் இந்த ஆள் ஒரு கின்னரன், அடுத்த மோடி மஸ்தான் இவர்தான் எனும் முந்தையை எண்ணம் உறுதிப்பட்டது.

 .பியின் மக்கள் தொகை இருபதரை கோடி. அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ இருபத்தாறு லட்சம். அந்த மாநிலத்தில் எந்தளவுக்கு வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் இருந்தால் இப்படி ஜனத்தொகையில் சுமார் பத்து சதவீதம் பேர் புலம்பெயரும் நிலை ஏற்படும் என யோசியுங்கள். கொரோனா நாடடங்கின் போது .பி.யின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். ஒரு பக்கம் அவர்களால் தமது புகுந்த வீடான புலம்பெயர்ந்த மாநிலங்களில் பட்டினியும் பாதுகாப்பின்மையையும் தாங்கி சமாளிக்க முடியவில்லை. அந்த மாநிலங்கள் வேலையில்லாத போது இவர்களை விலங்குகளை விட கீழாக நடத்திட பிறந்த வீடான .பியோ தம் வீட்டுக்குள் அவர்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஒருவழியாக அவர்கள் நடந்தும் வேறு வழிகளிலும் .பிக்கு செல்ல தயக்கத்துடன் ஆதித்யநாத் அவர்களை தன் எல்லைக்குள் அனுமதித்தார் (நடுவே காங்கிரஸின் போக்குவரத்து உதவியை ஏற்பதா வேண்டாமா என ஆயிரம் ஊசலாட்டம் வேறு). இந்த கணிசமான மக்கள் கொண்டு வரும் நோய்த்தொற்றையும் அவர்களைப் பராமரிக்கிற பொறுப்பையும் மட்டுமல்ல அவர்களை கோபத்தையும் என்ன செய்ய வேண்டுமென ஆதித்யநாத் யோசித்து தான் இந்த அறிக்கையை விட்டிருக்கிறார்:


 புலம்பெயர் தொழிலாளர் கமிஷன் மூலம் இந்த தொழிலாளர்களின் திறனடிப்படையில் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்போம், அடுத்து இவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை ஏற்பாடு செய்வோம் என்கிறார். எல்லாம் உதார் தான் - அவர் குறிப்பிடும் அந்த ஜெர்மனிய கம்பெனி சீனாவை விடுத்து .பிக்கு  வந்து காலணிகளை உற்பத்தி செய்து அனைவருக்கும் வேலை கொடுக்கும் என நான் நம்பவில்லை. காலணிகளை யார் வாங்குவார்கள்?
 கொரோனாவின் போது அடுத்த ஆறு மாதங்களில் கட்டாயமாக எந்த கட்டுமானப்பணிகளும் நடக்காது. உற்பத்தித் தொழில்கள் துவங்க ஒரு வருடமாவது எடுக்கும் - மத்திய அரசு துணிந்து நிவாரண உதவியை துரிதமாக அனைத்து தரப்புக்கும் வழங்கினால், பணத்தை புதிதாக அச்சடித்து சந்தையில் புழங்க விட்டால் ஓரளவுக்கு இந்த தளர்ச்சி சரியாகலாம். ஆனால் மோடி அதை செய்யாத பட்சத்தில் இந்திய பொருளாதாரம் பாகுபலி நாசரைப் போலத்தான் திரிய வேண்டும், சில வருடங்களுக்கு. ஆக, இதே 26 லட்சம் பேர் அடுத்த ஒரு வருடத்துக்குள் தாம் எந்த மாநிலத்தில் இருந்து மூட்டை முடிச்சுடன் ஓடி வந்தோமோ, எந்த மாநிலங்கள் தன் மக்களுக்கு இடவசதியோ மின்சார வசதியோ கூட கொடுக்காமல் ஏமாற்றி விட்டது என ஆதித்யநாத் சாடுகிறாரோ அங்கு தான் திரும்ப வாயையும் அதையும் பொத்திக்கொண்டு செல்ல வேண்டும். அப்போது இதே தொழிலாளர்கள் கடுப்பாக மாட்டார்களா? நமது சாமியார் முதல்வர் தம்மைக் கைவிட்டதாய் பல்லைக்கடிக்க மாட்டார்களா? அதற்குத் தான் இந்த புலம்பெயர் தொழிலாளர் பட்டியல் தயாரிப்பு. இனி எந்த மாநிலம் தமது தொழிலாளர்களைக் கோரினாலும் அவர்கள் தமது கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம், இன்ஷுரன்ஸ் தர வேண்டும் எனும் இந்த .பி முதல்வரின் அறிவிப்பு
நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா? நான் ஒரு சிறிய தொழிற்சாலை நடத்துகிறேன், அங்கோ அல்லது நான் செய்யும் விவசாயத்துக்கோ எனக்கு .பி தொழிலாளர்கள் வேண்டுமென்றால் ஒரு தரகர் மூலமாக வரவழைப்பேன் அல்லது அந்த தொழிலாளர்களே என்னிடம் வேலை கேட்டு வருவார்கள். இந்த விசயத்தில் மாநில அரசு தலையிடும் என்றோ மாவட்ட ஆட்சியாளர் கையெழுத்திட்டு கொடியசைத்து அனுப்பி வைப்பார் என்றோ எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இது மாநிலத்துக்கு அவசியமான ஒரு பிரச்சனை அல்ல. புலம்பெயர் தொழிலாளர்களை கேரளா போன்ற மாநிலங்களே மிகவும் நம்பியிருக்கின்றன; பிற மாநிலங்களைப் பொறுத்தமட்டில் தொழிலாளர்களே மாநிலங்களிடம் கையேந்தி வருகிறார்கள். நிலைமை இப்படியிருக்க வேலை கொடுக்கும் மாநிலங்கள் இன்ஷுரன்ஸ் கொடுப்பதெல்லாம் பகற்கனவுதான். .பி அனுப்ப மாட்டேன் என்றால் பிகாரில் இருந்து அழைத்து வருவார்கள். இது ஆதித்யநாத்துக்கும் தெரியும் - அவர் மோடியிடம் இருந்து தான் கற்ற திரைக்கதை உத்தியை இங்கே பயன்படுத்தி தன் பிம்பத்தை மேம்படுத்துகிறார்.

திரைக்கதையில் இதை save the cat என்பார்கள். ஒரு படத்தில் நாயகன் அலுவலகம் போகும் வழியில் ஒரு கண் தெரியாத பிச்சையெடுக்கும் சிறுமியை கருணையுடன் பார்த்து ஒரு ரூபாய் போட்டுவிட்டு சென்றால் பார்வையாளர்களுக்கு அவன் மீது உயர்ந்த அபிப்ராயம் ஏற்படும். இதற்கும் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது என்றாலும், அவன் அடுத்த காட்சியில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறான் என்றாலும் பார்வையாளர்களுக்கு அவன் நல்லவன் என்றே தோன்றும். ஆதித்யநாத்தும் இதையே தான் செய்கிறார்தொழிலாளிகளில் லட்சக்கணக்கில் புலம்பெயர்வதை ஆதித்யநாத் ஒரு சட்டவடிவிற்குள் கொண்டு வருகிறார். அதற்கென ஒரு அரசாங்க நடைமுறையை உருவாக்குகிறார். அத்தோடு அவர் இந்த தொழிலாளர்களை கைவிட்டு விடுவார். ஆனால் வெறுமனே அல்ல - “பிள்ளைகளே, நீங்கள் எங்கே அலைந்து திரிந்தாலும் உங்களைப் பற்றின தகவல்கள் என் வசம் உண்டு, நீங்கள் அரசாங்கத்தின் பிரதிநிகள்எனும் ஒரு பிரமையை உண்டுபண்ணுகிறார். “உங்களுக்கு என்ன நடந்தாலும், பெரியண்ணா நான் இருக்கிறேன், உங்களுடைய பெயர், வேலைத்திறன், முகவரி போன்ற தகவல்கள் எங்களிடம் உண்டு, உங்களுடைய முதலாளி குறித்த தகவல்களும் உண்டு, உங்களுடைய லகான் என் கையில், எதுவானாலும் உங்களுக்கு மாநில அரசு பொறுப்பேற்கும்எனத் தோற்றமளிக்க வைப்பார். இதனால் தொழிலாளர் வாழ்வில் எந்தவொரு நடைமுறை மாற்றமும் வராது என்றாலும், அனைத்து இந்திய பிரஜைகளையும் ஆதார் பதிவெண்ணையும் வங்கிக் கணக்கையும் தொடங்க வைத்து மோடி தன்னை ஒரு படிக்காத எளியோரின் ரட்சகனாக மாற்றியதைப் போன்றே தானும் இப்போது .பியில் அன்றாடங்காய்ச்சிகளிடத்து செய்ய நினைக்கிறார் நம் சாமியார். இது எளிய இந்திய மக்களின் தனித்துவமான மனநிலை - ஆதார் எண் கிடைத்த போது என் அம்மா அடைந்த பரவசம் நினைவுள்ளது; ஒவ்வொரு முறை ஏதாவது ஒரு ஆவணத்தை பதிவு செய்ய அவர் செல்லும் போது தான் ஏதோ சாதிப்பதாக, இந்த தேசத்தில் தானொரு மதிப்புமிக்க பிரஜையாகி விட்டதாக நினைக்கிறார். இந்த மனநிலையைத் தான் மோடி மஸ்தான் அறுவடை செய்கிறார். இதையே இப்போது அவரது சீடரான ஆதித்யநாத்தும் முன்னெடுக்கிறார்
.பியின் பொருளாதாரத்தை இவர்கள் சீரழித்ததால் தான் அங்கிருந்து 10% பேர் ஒவ்வொரு மாநிலமாக வேலைகேட்டு அலையும் நிலை ஏற்பட்டது. அதை சரிசெய்கிற முயற்சியை விடுத்துபுனித மாடுஅரசியலை, எல்லா பாஜக மேதைகளையும் போல, ஆதித்யநாத் முன்னெடுத்தார். இப்போது தான் கைவிட்ட அனாதைகளுக்கு வேலைகொடுத்த மாநிலங்களை கொரோனா சமயத்தில் தம் மக்களை கவனிக்கவில்லை எனக் கண்டிக்கிறார். எவ்வளவு சாமர்த்தியம்! தன்னுடைய தவறுகளை அடுத்தவர்கள் தோளில் சுமத்துவது, தன்னை நிர்வாக கோளாறுகளுக்கு அப்பாலான ஒரு புனிதபிக்பாஸாகமுன்வைப்பது, தொடர்ந்து பயனற்ற புதுப்புது திட்டங்களை அறிவித்து மக்களை கனவுவலையில் வீழ்த்துவது, உள்ளூரில் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து பெரும் உற்பத்தியாளர்கள் தன் மாநிலத்துக்கு வருவதாக கனவுக்கோட்டையை எழுப்புவது, கார்ப்பரேட்டுகள் தன் மண்ணில் கால் வைத்தாலே அது சொர்க்கபுரியாகி விடும் என நம்புவது, தன் வளர்ப்புநாயாக வாலாட்டும் மீடியா மூலம் அதை தம் மக்களை நம்ப வைப்பது என பிரதமராகும் முன்பு குஜராத்தில் மோடி செய்த அத்தனை ஜிகினா வேலைகளையும் ஆதித்யநாத் .பியில் இப்போது செய்து பார்க்கிறார். மோடி 2.0 ஆக விரைவில் தில்லியில் சிம்மாசனமேற தனக்கு அத்தனைக் தகுதிகளும் உள்ளதாகக் காட்டுகிறார்.
எனக்கு எழுகிற கேள்வியெல்லாம் ஒன்றுதான்: இந்த சாமியார்களுக்கு எப்படி ஊரை ஏமாற்றுகிற வித்தைகள் இவ்வளவு சுலபமாக வருகிறது? பிறவியிலேயே இவர்கள் அரசியல்வாதிகளா? (மோடியும் ஒரு சாமியார் தானே!)

இந்த முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு எனக்கு மூன்று தீர்வுகள் தோன்றுகின்றன. எந்த பாஜக தலைவரும் ஏற்க விரும்பாத தீர்வுகள்:
1) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என ஒவ்வொரு மாநிலத்திலும் (எந்த கட்சியையும் சாராத) ஒரு தொழிற்சங்கம் அமைப்பது. தொழிற்சங்கத்தில் இங்கு வரும் ஒவ்வொரு தொழிலாளியும் பதிவு செய்ய வேண்டும் என சட்டமியற்றுவது. தொழிற்சங்கம் மூலம் மாநில அரசிடம் ஆலோசித்து தொழிலாளிகளுக்கான அடிப்படை ஊதியம், வாழிட உரிமைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவற்றை தீர்மானிப்பது. அடுத்த விசயம் தான் முக்கியம்: எத்தனை தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலான வாக்குகளை, அவர்கள் அதிகமாக உள்ள தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் அவர்கள் சார்பில் இடும் உரிமையை தொழிற்சங்கத்துக்கே அளித்தல் - வெளிமாநில தொழிலாளிகளுக்கு இங்கு வாக்களிக்க அனுமதிப்பது ஆபத்தானது என்பதால் இந்த தற்காலிக ஏற்பாடு உதவும். அவர்கள் விரும்பினால் சொந்த மாநிலத்துக்கும் சென்று வாக்களிக்கலாம் என சட்டமியற்றுவது. இந்த இரட்டை வாக்களிப்பு முறை அவர்களுக்கு புலம்பெயர்ந்த மாநிலத்தில் ஒரு அதிகாரத்தை, நம்பிக்கையை அளிக்கும். அவர்களை யாரும் குப்பை போல நடத்த முடியாமல் ஆகும். அவர்களை முதலாளிகள் பன்றித்தொழுவத்தில் அடைத்து வைக்கிற நிலை ஏற்படாது.

2) சொந்த மாநிலத்திலேயே அவர்களுக்கு வேலைவசதிகளை செய்து கொடுத்து புலம்பெயர்வை தடுத்தல். அல்லது குறைந்த பட்சம் மைய அரசு இத்தகைய தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களின் வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான கல்வி செலவு, மருத்துவ செலவுக்காக வருடாவருடம் செலுத்துவது, அதை அவர்கள் மற்றொரு மாநிலத்தில் வேலை செய்தால் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் எனும் ஷரத்துடன்

3) புலம்பெயர் தொழிலாளிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் (ஆறு மாதங்கள்) வாழ்ந்தால் அந்த மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான இடங்கள் சட்டபூர்வமாகக் கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த தொழிலாளிகள் இரட்டை வாக்குரிமையைப் பெறலாம். இப்படி ஒரு மாற்றம் வந்தால் இந்த தொழிலாளிகளைக் கொண்டு ஒரு மாநில அரசு மத்தியில் கூடுதல் எம்.பி இடங்களைப் பெற்று, கூட்டணி அரசு அமைந்தால் அதிக அதிகாரத்தைப் பெற முடியும். ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளியையும் ஆளும் மாநில அரசு இரண்டு கை நீட்டி வரவேற்கும். நெருக்கடியின் போது அவர்கள் திரும்ப செல்லாமல் பார்த்துக்கொள்ளும். இங்கு வேலைக்கு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் பிரச்சனை என்றால் போய் நிற்க ஒரு எம்.பி இருப்பார். வேலையிடத்தில் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் அவர் பார்த்துக் கொள்வார். பாராளுமன்றத்தில் அவர் இத்தொழிலாளிகளின் பிரச்சனைகளின் பொருட்டு மட்டும் பேசுவார். ஒரு ஆட்டம் காணும் கூட்டணி அரசு மத்தியில் இருந்தாலும் இந்த ஒரு எம்.பி என்ன சொன்னாலும் அரசு கேட்கும். தொழிலாளிகள் எங்கு போனாலும் ரத்தினக் கம்பளம் விரிப்பார்கள். இப்போது போல அனாதைகளாக அல்ல.

(கூடுதலாக) 4) மெல்ல மெல்ல இத்தகைய தொழிற்சங்க எம்.பிக்களை ஒவ்வொரு தொழிலுக்கும் எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரலாம். ஒரு மாநிலத்தில் ஊடகக்காரர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கலாம் (அவர்கள் ஒரே தொகுதியில் இரண்டு முறை ஒரே கட்சிக்கோ இரண்டு கட்சிகளுக்கோ வாக்களிக்கலாம், ஆனால் அதில் ஒன்று தொழிற்சங்க எம்பிக்காக இருக்க வேண்டும், அல்லாவிடில் இரண்டு வாக்குகளும் ரத்தாகி விடும்.). அப்போது கொத்தாக தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டால் அது தேசிய பிரச்சனையாகும். கூடுதல் சம்பளம், வேலை நிரந்தரத்துக்கான கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் ஒலிக்க விடலாம். ஒரு தொழிலாளிக்காக பிரதமரே இறங்கி வருவார். ஜாதிக்காக, மதத்துக்காக ஓட்டு எனும் நிலையை தொழில் பாதுகாப்புக்காக, உரிமைகளுக்கான ஓட்டு என மாற்றலாம். இந்த தேசம் உழைப்பாளிகளுக்கான தேசமாகும்

Comments

Ravi said…
26 L in 20 Cr Population is not 10% it is ~1.5%

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...