முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவை ஒரு பிரதியாக வாசித்தல்


நண்பர்களே,

சாருவை வாசிப்பதில் பல குழப்பங்கள், இடர்கள் நமக்கு உள்ளன. இவை அவர் நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்பதாலோ, ஒரு transgressive எழுத்தாளர் என்பதாலோ மட்டுமல்ல. மிக முக்கியமாக சாரு தன் காலத்து பின்நவீன எழுத்தாளர்களிடம் இருந்தே முழுக்க வேறுபட்டவராக தனித்துவமானராக இருக்கிறார். அவர் தன் படைப்புகளை தன்னிடம் இருந்து துண்டித்து படைப்பாளி-படைப்பு எனும் இருமையை ஏற்படுத்துவது இல்லை. 

இன்று ஒரு எழுத்தாளனுக்குள் மூவர் இருக்கிறார்கள் - தனிமனிதன் (அவன் சமூக மனிதனாகவும் இணைய உலகில், நுகர்வு உலகில் இருப்பதால் இரண்டையும் சேர்த்தே தனி-சமூக மனிதனாகப் பார்க்கிறேன்), எழுத்தாளன், படைப்புலகம். இந்த பிளவு இல்லாத சொற்பம் எழுத்தாளர்களே நம் மத்தியில் இருக்கிறார்கள். இதற்கு முன்னோடியாக உடனடியாய் நம் நினைவில் தோன்றும் படைப்பாளிகள் ஜி.நாகராஜனும், புக்காவஸ்கியும். அந்த அளவுக்கு படைப்பூக்கத்தில் ஏற்படும் தனிமனித உடைவில், நெகிழ்நிலையில் ஒரு தனிமனிதன் தன்னையும் ஆட்படுத்துவது சுலபம் அல்ல. சாருவுக்கு அது இயல்பாகவே வருகிறது. அவர் தன்னையே எழுதிக்கொள்கிறார், அவர் எழுதும் முகநூல் குறிப்புகள், சாட் ரூம் அரட்டைகள், அன்றாட உரையாடல்கள், சின்னச் சின்ன நிகழ்வுகள் என ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் சாரு தன்னை எழுதிக்கொள்கிறார், தன் உடலை ஒரு கணினி தட்டச்சுப் பலகையாக பயன்படுத்துகிறார், இப்படி எழுதுவதை இலக்கியத் தகுதியற்ற உளறல்கள், ஆனால் மாறாக இலக்கியம் என்பதோ பிரக்ஞையுடன் தெளிவுடன் திட்டமிடலுடன் படைக்க வேண்டிய ஒன்று என அவர் கருதுவதில்லை. ஆகையால் சாரு தன் நாவல்களில் ஒரு கதைக்களத்தை, பாத்திரங்களை திட்டமிட்டு அவற்றை ஒட்டி எழுதுவதில்லை. அவருடைய ஒரு நாவலைத் திறந்து அங்கு அவர் யாருக்கோ எழுதிய கடிதம், மின்னஞ்சல், ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதம் வரும் போது ஒரு வாசகன் குழப்பம் அடைகிறான். ஏன் இது ஒரு கதையோட்டத்தின் பகுதியாக நம்பும்படியாக வருவதில்லை எனக் கேட்டுக்கொள்கிறான்.
 இந்த கேள்வியின் மற்றொரு பொருள் இது:
 சாரு ஏன் தன்னை தன் எழுத்தில் இருந்து உடைத்து தனியே உற்பத்தி ஒரு பண்டமாக பண்ணித் தருவதில்லை?
 சாருவின் நூலை காசு கொடுத்து வாங்கினால் அவரே ஏன் நம் கையைப் பிடித்துக்கொண்டு நம் வாசிப்பறை வரை அச்சுபிசகாமல் வந்து விடுகிறார்?
 நான் சாருவை வாசிக்கிறேனா சாரு எழுதியதை வாசிக்கிறேனா?
 சாரு உண்மை, அவர் எழுதியது உண்மையைப் போன்ற பொய் என இல்லாமல் சாருவும் உண்மை அவர் எழுதியதும் உண்மை எனும் குழப்பம் ஏன் ஏற்படுகிறது?
 அவர் ஏன் ஒரு ‘கதைசொல்லியாக’ இருந்து என்னிடம் இருந்து சௌகர்யமான ஒரு தொலைவை ஏற்படுத்துவதில்லை? 
ஒரு கட்டுரை, ஒரு கடிதம், ஒரு மின்னஞ்சல், ஒரு சாட் ரூம் அரட்டை இதெல்லாமும் புனைவு தான் என்றால், இவை தொகுக்கப்பட்டு ஒரு நாவலாக முடியும் என்றால் இதுவரை நான் படித்த, இனி படிக்கப் போகிற ‘உருவாக்கப்பட்ட’ நாவல்களை என்ன செய்வது?

இவை புனைவாகும் என்றால் நான் எழுதும் கடிதங்கள், நிலைத்தகவல்கள், நான் குறித்து வைக்கும் to-do பட்டியல், நான் என் மனைவியிடம் காட்டும் காமம், நான் என் நண்பனிடம் கொட்டிய பாசம், நான் என் வேலையிடத்தில் எழுதிய அறிக்கைகள், மென்பொருள் நிரல், ஒரு கட்டிடத்தின் வரைபடமாக நான் வரைந்தது, நான் சவரம் செய்யும் போது சிதறிய மயிர்கள், நான் புணரும் போது சிந்திய விந்து, சைட் அடிக்கும் பெண்கள், நான் சீரியசாக காதலுடன் பார்க்கும் பெண்கள், நான் படிக்கும் அரசியல் செய்திகள், நான் அவற்றைப் படித்து அடையும் சமூகக் கோபம், என் சமூக நீதி, என் தனிப்பட்ட நீதி, என் தெளிவான நேர்கோட்டிலான சிந்தனை, என் வருத்தங்கள், என் கோபங்கள், என் இழப்புணர்வுகள் இத்தனையும் புனைவாகுமா? ஐயோ என்ன பண்ணுவது?

இது உண்மையில் திடுக்கிட வைக்கும் ஒரு கேள்வி. திட்டவட்டமான புனைவாக ‘தம்மை’ பாவிக்கும் புனைவுகள் நம்மை இந்த கேள்வியில் இருந்து பாதுகாக்கின்றன. சாருவின் முக்கியத்துவம் அவர் நம்மை நிர்வாணமாக்கி இந்த கேள்வியை சந்திக்க தயாரிக்கிறார் என்பது. இதுவே சாருவின் அரசியல். இதை எதிர்கொள்ள முடியாத போதே நாம் சாருவின் புனைவுகளைப் படிப்பது பற்றி பல விமர்சனங்களை வைத்து அவரை நிராகரிக்கிறோம். இன்னும் வசதியாக, அவர் புனைவெழுத்தாளர் அல்ல, ஒரு சுவாரஸ்யமான கட்டுரையாளர் மட்டுமே என முத்திரை குத்துகிறோம். 

அதே போல, நம் இலக்கிய மரபில் “சிந்தனை ஓட்டம்” எனும் ஒரு அம்சம் இல்லாத ஒரு எழுத்து சாருவுடையது. சாருவின் நாயகன் வாழும் தனிமனிதன், சிந்திக்கிற, அதனாலே வாழ்வில் இருந்து விலகி நிற்கிற ஒருவன் அல்ல. இதுவும் சாருவின் தனித்துவமான அரசியலே.

ஆகஸ்ட் 9 அன்று மாலை ஆறு மணிக்கு நான் பேசப் போகும் உரையில் இந்த விசயங்களையே சற்று விரிவாக அணுக உத்தேசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...