முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளுவர் ஏன் ஒரு பௌத்தர்?






தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை” (குறள் 964; பால்: பொருட்பால்; அதிகாரம்: மானம்)


இது ஒரு எளிய குறள் - தலையில் இருக்கும் போது அழகாக கம்பீரமாகத் தோற்றம் தரும் மயிர். ஆனால் அது உதிர்ந்தால் எந்த மதிப்பும் இல்லை. இந்த தலைமயிருடன் வாழ்வின் உயர்நிலையை இணையாக்கும் வள்ளுவர், தாழ்வு நிலையை உதிர்ந்த மயிர் என்கிறார். இதன் பொருள் என்ன? “மதிப்பில்லாத ஒன்றுக்கு நீங்கள் தான் அதிக மதிப்பை அளித்து தலையில் வளர்த்து அலங்கரித்து பெருமை கொள்கிறீர்கள். ஆனால் அதன் மதிப்பும் பெருமையும் நிலையற்றது, பல விசயங்களை சார்ந்தது, அப்படியே தான் வாழ்க்கையில் அந்தஸ்து, சமூக மதிப்பு, சமூக அதிகாரம் எல்லாம். அதைப் பெறுவதற்கு நீ செய்யும் முயற்சிகள் வீணானவை. அதை இழந்ததை நினைத்து இரங்கி நீ கொள்ளும் கவலைகள் அபத்தமானவை. நீ மட்டுமாக அதை உண்டு பண்ணவில்லை, நீ மட்டுமாக அதை இழக்கவில்லை, அது உருவானதற்கான பல்வேறு காரணிகளில் ஒன்றே நீ, அக்காரணிகள் சாரமானவை அல்ல, உண்மையை புரிந்து கொண்டால் நீ துக்கத்தில் இருந்து விடுபடுவாய்.” 

இதை மொட்டையடித்த ஒரு பௌத்த பிக்கு சொல்வதாய் கற்பித்துப் பாருங்கள், தெளிவாக விளங்கி விடும்.

இதையே நம் குறள் உரையாசிரியர்கள் வீழ்ச்சியடைந்த ஒருவரது தாழ்வுற்ற நிலை அவலமானது, அதை உதிர்ந்த மயிரைப் போன்றது என வள்ளுவர் கூறுவதாய் கதைகட்டுகிறார்கள். அதில் எந்த தர்க்கப் பொருத்தமும் இல்லை - ஏன் அந்த அவலத்தைக் காட்டுவதற்காக ஒரு குறளை அவர் எழுத வேண்டும்


மானம் என்றால் சமூகப் பெருமை, மரியாதை, குலப்பெருமை எனப் புரிந்து கொள்வதானால் வேறு குறள்களில் வள்ளுவர் சொல்லும் கருத்துக்களுடன் அது பொருந்துவதில்லை எனக் காணலாம். குறள் 961இல் இன்றியமையாதது எனினும் அதனால் உங்கள் நிலை தாழும் எனில் செய்ய வேண்டாம் என்கிறார். 962இல் புகழ் கிடைக்கும் எனினும் அப்புகழுக்கு ஊறுவிளைவிக்கும் ஒன்றை, மனத்திடத்தை (பேராண்மையை) குலைக்கிற ஒண்ற செய்ய வேண்டாம் என்கிறார். அந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தனது சமூகத் தேவையை ஒட்டியே செயல்பட்டான் என வைப்போம். ஒருவன் தன்னை தன் சமூகத்தின் போக்குகள், நம்பிக்கைகள், முடிவுகளில் இருந்து மாறுபடுத்திப் பார்க்காத காலம் அது. அப்போது இன்றியமையாதது என்பது சமூகம் கோருகிற ஒன்றாகவே இருக்க முடியும். சமூக பிம்பத்தை தக்க வைக்க துக்கத்தில் போய் விழாதே என்பதே சரியான விளக்கமாக இருக்க வேண்டும். சமூகப்பெருமையை அழித்தால் உதிர்ந்த மயிரைப் போலாகி விடுவாய் என்பதல்ல.


 சமூகப்பொருளாதார கலாச்சாரத் தேவைகளுக்காக உன் நிலையை தாழ்த்திக்கொள்ளாதே என முதல் குறளில் சொல்லுபவர், அடுத்ததில் புகழுக்காக புகழையே இழக்காதே என்கிறார். புகழுக்காக எப்படி புகழை இழக்க முடியும்? முடியும் - புகழுக்கு வள்ளுவர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறார் எனில்பொருளாதார சமூக, அரசியல், பொருளாதார, மரபுசார் தேட்டலினால் தோன்றும் புகழ் ஒன்று, இவை நிலையற்றவை, சாரமற்றவை என உணரும் போது வரும் புகழ் அடுத்தது. முதல் புகழுக்காக இரண்டாவதை தொலைத்து மனத்திண்மையையும் கைவிடாதே என்கிறார் வள்ளுவர் என்பதே பொருத்தமாக இருக்கிறது


இந்த அதிகாரத்தில் வரும் ஒவ்வொரு குறளும் இந்த நோக்குடன் இணங்கியே வருகிறது.

பெருக்கத்து வேண்டும்...” என ஆரம்பிக்கும் குறள் 963 உயர்வின் போது பணிவும் தாழ்வின் போது உயர்வும் ஒரு மனிதனுக்கு வேண்டும் என்கிறது. உயர்வு சமூக அந்தஸ்தே, பொருள் வளர்ச்சியே எனில் இது எப்படி சரியாக வரும்? முந்தின குறளில் வரும் இரண்டாவது அர்த்தத்திலே இங்கும் உயர்வு, தாழ்வு எனும் நிலைகளைப் புரிந்து கொள்வது சரியாக இருக்கும்


965வது குறளில் இதே போன்ற இரட்டை அர்த்த விளையாட்டை (குன்று-குன்றுதல்) வள்ளுவர் செய்கிறார் - குன்றைப் போல் உயர்ந்து நிற்பவரும் தாழ்விலும் தாழ்வான ஒரு காரியத்தை செய்து குன்றிப் போகலாம் என்கிறார்மானம், சமூகப்புகழ், உயர்வு, நற்பெயர் இவையெல்லாம் மனிதனின் பிறவிக்குணம், ஆதாரக் குணம் (சாதியினால் கிடைப்பது) எனப் பார்ப்பவர்களால் இக்குறளை ஏற்க முடியாது. எந்த உயர்குணமும் தன்னளவில் உயர்ந்தது அல்ல, அது வேறு பல சந்தர்ப்பசூழ்நிலைகளால், காரணிகளால் உயர்நிலையை அடைகிறது, அப்படியே எப்போது வேண்டுமெனிலும் உயர்குணம் படைத்தவர் ஒரு இழிவான செயலை செய்யலாம் (“குன்றின் அனையாரும் குன்றுவர்”), செய்து தன்னை தாழ்த்திக்கொள்ளலாம் (“குன்றுவ குன்றி அனைய செயின்”) என்கிறார் வள்ளுவர்

இது கூட குலச்சிறப்பு, குடும்பப் பெருமை, உயர்குலத்தாரின் ஆதாரமான நிலையான மேல்நிலை போன்ற நம்பிக்கைகளை நொறுக்குகிற பார்வை தான். சந்தேகமே வேண்டாம். அந்த காலத்தில் தோன்றின வர்ணாசிரம பாகுபாடுகள் மீதான நுட்பமான ஒரு விமர்சனம் இதனுள் உள்ளது. ஒரு அந்தணன் ஒரு நொடி பிசகினால் ஒரு கொடுஞ்செயலை செய்யக்கூடும், எதுவும் நிலையானதோ சாரமானதோ அல்ல, ஆகையால் படிநிலைகள் அபத்தமானவை என வள்ளுவர் குறிப்புணர்த்துகிறார்.


ஒட்டார்பின் சென்றொருவன்என ஆரம்பிக்கும் குறள் 967 கூட சமூக உறவாடலால் தான், பிறரது செயலுடன் ஒட்டுறவாடுவதால் தான், ஒருவர் கெட்டுப் போகிறார் என சொல்கிறது - அதாவது ஒருவன் பிறப்பிலேயே கெட்டுப் போவதில்லை, இழிவடைவதில்லை, அவனது தற்போதைய இழிநிலை கூட தற்காலிகமானதே என்கிறார் வள்ளுவர். (ஒட்டாமையின் தத்துவப் பரிமாணத்தையும் நான் மறுக்கவில்ல.)


என்னை சற்று குழப்பியது கடைசிக் குறள்:

 “இளிவரின் வாழாத மானம் உடையார் 

ஒளிதொழுது ஏத்தும் உலகு


பெரும்பாலான உரையாசிரியர்கள்இளிவரின்என்பதை இளிவரல், இகழ்ச்சி எனும் பொருள்கொண்டு இக்குறளை இகழ்ச்சியற்ற மானம் பொருந்திய நிலையை கொண்டோரை உலகம் போற்றும் என மிகத்தட்டையாக விளக்கி உள்ளார்கள். சற்று ஆய்வு செய்து இளிவரின் எனும் சொல்லின் மாற்று அர்த்தங்களைப் புரிந்து கொண்ட பின்னரே இக்குறள் பற்றின தெளிவு கிடைத்தது.

இளிவரல் என்பதை விட இளி + வரின்  என பிரித்து பொருள்படுத்துவதே சரியாக இருக்கும். இதற்கு முந்தின குறளில் வள்ளுவர்மானம் வரின்எனக் கூறுகிறார் - மானம் இழந்தால் என இதற்குப் பொருள் எனும் போதுவரின்எனும் சொல்லுக்கு இழப்பது என்பதே பொருத்தமான அர்த்தமாக இருக்கும். இளி என்றால் என்ன? அகராதிப் பொருள் பொருந்துதல், இணங்குதல், இணைதல். நமது தமிழிசை மரபில் ஏழு ஸ்வரங்களில் ஒன்று இளி. ஒரு கருவியை குரலுடன் பொருந்தி இசைப்பது

இளிவரின் என்பதை இப்படிப் பொருள்படுத்தினால், வாழ்வினோடு பொருந்தி போகாத, பல்வேறு காரணிகளால் தற்காலிகமாய், நிபந்தனைக்குட்பட்டு உருவாகிற இருப்புமட்டுமேதான்எனப் புரிந்து தன்னை மட்டும் பெரிதாகக் கருதிஇணங்காமல்இருக்கிற ஒருவன், தன்னை முழுமுதல் இருப்பாக கருதுகிற, தன்னாலே எல்லாம் சாத்தியமாகிறது என அகந்தை கொள்கிற ஒருவன் துக்கத்தில் உழல்வான், அவன் தன்னை, இந்த இருப்பை பல நிபந்தனைகளுக்கு ஆட்பட்ட, அந்நிபந்தனைகளுக்கு இணங்குற ஒரு தற்காலிக விசயம் எனப் புரிந்து கொள்வான் ஆயின் அவன் புத்தரைப் போல மாறுவான். ஆகையால் இவ்வுண்மையைப் புரிந்து கொண்டவர் புத்தர், அவரது ஒளியை இவ்வுலகம் தொழுது அமையும் எனப் பொருள் வருகிறது. பௌத்த மரபில் மனம் என்பது ஒளியால் ஆனது, அதை மேகங்கள் மூடினாலும் முழுமையாக மறைக்க முடியாது எனச் சொல்கிறார்கள்; ஒளி என்பது பௌத்ததில் ஒரு முக்கியமான உருவகம். அப்படித்தான்ஒளிதொழுதுஎனும் பிரயோகம் இங்கே வருகிறது

வள்ளுவர் ஒரு பௌத்தர் என்பதற்கு இதைப் போல பல நூறு உதாரணங்களை திருக்குறள் முழுவதிலும் இருந்து நாம் எடுத்தியம்ப முடியும். உரையாசிரியர்களுக்கு மட்டும் இது ஏன் கண்ணில் படவில்லை என்பது தமிழ் அறிவுலகின் புதிர்களில் ஒன்று.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.