Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்?



நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லி சேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சி ஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யா மற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால் ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பது பயன் தரும்.


1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரே அல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள். அதனாலே தனக்கு வராத தளத்தில் கால்பதிக்க தயங்குகிறார்.


2) தொண்ணூறுகளில் ரஜினி ஜெயாவுக்கு எதிராக சற்று சவுண்டு விட்டு அது ஓரளவுக்கு திமுக கூட்டணிக்கு தேர்தலில் உதவியது என்னவோ உண்மைதான். ஆனால் உடனே அவர் கோடம்பாக்கம், இயமமலை என ஒதுங்கி விட்டார். அதன் பிறகு தமிழகம் என ஒன்று இருக்கிறதென்றோ, அதைக் காப்பாற்றத் துடிக்கும்ஆண்டவன்இருக்கிறார் என்றோ அவர் மறந்து விட்டார். ஏனென்றால் அவர் சம்பாதிப்பதற்காக இங்கு வந்தவர், வந்த நோக்கத்தை மறந்து அரசியலில் சூதாட அவர் தயாரில்லை.


3) கமலுடன் ஒப்பிடுகையில் ரஜினிக்கு சினிமா எனும் கலையின் மீதும் பெரிய அக்கறையோ லட்சிய வேட்கையோ இல்லை. முழுக்க முழுக்க அவருக்கு நடிப்பு ஒரு தொழில்தான். அத்தொழிலுக்குப் பாதகமான எதையும் அவர் இதுவரை செய்ததில்லை. அதனாலே கமலைப் போன்று கண்ணிவெடியில் கால்வைக்கிற முயற்சிகளில் இறங்கி பெரும்பணத்தை அவர் இழந்ததில்லை, இதுவரை அவர் கடனிலும் மூழ்கியதில்லை. அப்படித்தான் அவர் ஒரு படத்துக்கு 90 கோடி வாங்கும் அளவுக்கு (இது போக, படத்தின் லாபத்திலும் பங்குவாங்குகிறாரா எனத் தெரியவில்லை) இந்தியாவின் உச்ச நட்சத்திர நடிகராக மாறி இருக்கிறார்.


4) ரஜினியின் பலம் அவரது லௌகீகம். சுயநலம். அடைந்த எதையும் இழந்து விடலாகாதே எனும் கவனம். இதற்கு நேர்மாறான ஒரு சித்திரத்தை அவர் ஊடகம் வழியாக உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்


5) ரஜினியின் நடிப்பு வாழ்வின் இறங்குமுகம் துவங்கி விட்டது. விஜய் சர்க்காரில் நூறு கோடி பெற்று அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினியை வரிசையில் முந்தி விட்டார். இதை வைத்து ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று அரசியல் கட்சி ஆரம்பித்து புதிய இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என சிலர் நம்பினர். ஆனால் ரஜினி எல்லாரையும் விட புத்திசாலி. ஒரு நடிகராக தன் நிறைகுறைகளைத் துல்லியமாக அறிந்தவர் அவர்.


6) என்னதான் இறங்குமுகத்தில் இருந்தாலும் இன்னும் 5-8 வருடங்களாவது அவருக்கு சம்பாதிக்க மீதமுள்ளது. அதாவது அவரைப் போன்ற 40 வருடங்கள் கோலோச்சிய மாஸ் ஹீரோவின் நடிப்பு வாழ்வின் இறங்குமுகமே பல வருடங்கள் நீடிக்கும். இதனாலே ரஜினி கடந்த சில வருடங்களில் இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் தொடர்ந்து படங்களாக நடித்துத் தள்ளுகிறார். தன் ஆயுளை நீட்டிப்பதற்காக புதிய விசயங்களை கதைத்தேர்வில் முயன்று பார்க்கிறார். நிறைய உழைக்கிறார். இதையெல்லாம் அரசியலில் இறங்குவதன் மூலம் அவர் கைவிடுவாரா?


7) தொண்ணூறுகளில் கூட ரஜினி சாபமிட்ட பிறகு ஜெயலலிதா ஆட்சியை இழந்தாலும் திரும்ப வந்த அம்மா அவரைப் பழிவாங்க முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் ரஜினி யாருக்கும் அரசியல் எதிரி அல்ல, அவருக்கு சொந்தக் கட்சியோ, நேரடி அரசியல் அடையாளமோ இல்லை என்பது. திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி லூஸ் டாக் செய்ததற்கு வடிவேலு எப்படியான தண்டனையை அதிமுக வென்றபிறகு அனுபவித்தார் என அறிவோம். வடிவேலு போன்ற உச்ச நகைச்சுவை நடிகரை வீட்டில் உட்கார வைக்க இருந்த ஒரே காரணம் அவர் எதிர்க்கட்சிக்காக பிரச்சாரம் செய்தார் என்பது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் இன்னும் உக்கிரமாக கட்சிகளை சாட வேண்டி இருக்கும். அது அதிகாரத் தரப்புடன் பகைமையை உண்டு பண்ணும். ஆக, அரசியல் எனத் தேர்வு செய்து விட்டால் சினிமாவை விட்டு விட வேண்டும். ஒரு திரைக்கலைஞனால் இங்கு அரசாங்கத்தை எதிர்த்து களமடவே முடியாது. இதுதான் நட்சத்திர நடிகர்கள் பொதுவாக கட்சியில் இணைந்து பங்காற்றத் தயங்குவதற்குக் காரணம்.


8) ரஜினிக்கும் இந்த பயம் இருந்திருக்கும், இருக்கும் - ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தின் வசதிகளை, அதிகாரத்தை கைவிட அவர் தயாராக மாட்டார். ஒருவேளை ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு தனக்கான ஒரு வெளி உருவாகி விட்டது என அவர் நம்பிக்கை வளர்த்திருக்கலாம். ஆனால் ஆளும் அதிமுகவுக்கும் அவர்களைப் பின்னிருந்து இயக்கும் பாஜகவுக்கும் தமிழக மக்களிடையே செல்வாக்கில்லை என, அடுத்து வருவது திமுக ஆட்சியே எனப் புரிந்து கொண்ட நிலையில் அவர் தான் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது தன் மொத்த சொத்தையும் விற்று திருப்பதி உண்டியலில் போட்டது போலாகும்.

9) ரஜினி என்னதான் இமைய மலை, பனிக்குகைகள், சாமியார் என கனவு கண்டாலும் அவரால் ஏழ்மையில், முற்றும் துறந்தெல்லாம் வாழ முடியாது. பாஜக பின்னிருந்து பணத்தை இறக்கினாலும் ரஜினியும் செலவு செய்தே ஆக வேண்டும். களமிறங்கினால் அதிமுகவையோ திமுகவோ விமர்சிக்காமல் பிரச்சாரம் செய்ய முடியாது. அப்படி தலைவர்களை மட்டுமல்ல கட்சித்தொண்டர்களையும் லட்சக்கணக்கில் பகைக்க நேரிடும். இது பாஜக கூட்டணியில் ஆட்சி அமையாத பட்சத்தில் ரஜினியின் படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதில், வெளிவந்தாலும் ஓடுவதில் பெரும் தடங்கல்களை ஏற்படுத்தும். அடுத்த சில வருடங்கள் நடிக்காமல் இருந்தால், நடித்த படங்கள் வெளியாகாமல் போனால் இதன் விளைவு 500-1000 கோடிகள் நஷ்டமாக இருக்கலாம்


10) நவம்பரில் கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில் உள்கட்டமைப்பை நிறுவி, ஊரூராகப் பயணித்து மக்களை சந்தித்து பிரச்சாரம் பண்ணி கட்சியை நிலைப்படுத்தி தேர்தலில் நின்று ... “முதல்வன்படத்தில் மட்டுமே இது சாத்தியம். இருந்தும் ரஜினி அதைத் தள்ளிப்போட்டு என்ன பயன், அரசியலில் இறங்குவதற்கு சாத்தியமில்லாத சூழலை தானே உருவாக்குவதைத் தவிர. அதாவது, கட்சி ஆரம்பிக்கப் போவதாய் சொல்லி உரையாற்றினாரே அப்போது கூட அவருக்கு சற்றே நம்பிக்கை இருந்திருக்கலாம், ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் வெற்றிவாய்ப்பு 1-10 என இருக்கையில் அவர் அம்முடிவை எடுக்கவே மாட்டார். எடுத்தால் அவரைப் போல பெரிய முட்டாள் வேறில்லை. ரஜினி முட்டாளில்லை.


மாறாக, ரஜினி வரும் சட்டமன்றத் தேர்தலில் பட்டும்படாமல் சில வேட்பாளர்களை ஆதரித்து அறிக்கை விடுவார். அல்லது சில கட்சிகளுக்கு மறைமுகமாய் ஆசி வழங்கி பூடகமாய் பேசுவார். தன் கருத்துக்களால் யாரும் புண்படாமல் பார்த்துக் கொள்வார். நிச்சயமாக வெளிப்படையாக பாஜக சார்புநிலையை எடுக்க மாட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேச மாட்டார். தேர்தல் முடிந்து ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் பூங்கொத்து கொடுத்து அவரைப் புகழ்ந்து அறிக்கை வெளியிடுவார் ரஜினி. அதுதான் ரஜினி ஸ்டைல்.


Comments

Masked said…
மிக மிக சரியான பார்வை. ரஜினி ஒரு தேர்ந்த வியாபாரி. நிச்சயம் எவ்விதத்திலும் நஷ்டம் அடைய மாட்டார். கட்சி தொடங்கி தேர்தலில் நின்று 10 இடங்கள் வருவதே நடக்காத விஷயம்.
Chef Ramu said…
ஜனவரியில் மீண்டும் சந்திப்போம்

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...