முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினி எனும் டுரோஜன் குதிரை




ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார். தேர்தலுக்குப் பின் துவங்குவேன் என்றும் சொல்லவில்லை. தன்னை ஒரு நிரந்தரஎதிர்கால முதல்வர்வேட்பாளராக களத்தில் வைத்திருக்க அவர் விரும்புகிறார் அல்லது பாஜக விரும்புகிறது. அதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த மாய மான் அறிக்கை - அதிலுள்ள கருத்துக்கள் எனது, ஆனால் அது எனதல்ல என ஒரு விளக்கத்தை வேறு அண்மையில் கொடுத்திருக்கிறார்.


அடுத்தடுத்த ஆண்டுகளில் தமது கூட்டணியில் அரசை அமைக்க முடியாவிடில் பாஜக அரசு ரஜினியை வைத்து ஒரு எதிர்காலக் கனவை தொடர்ந்து தக்க வைக்க விரும்பும். இந்த தேர்தலுக்கு அடுத்த தேர்தலுக்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் இப்போது ரஜினியை வைத்தாடும் சதிராட்டத்தை மீண்டும் பாஜக ஆடும். அல்லது ஒருவேளை அதிமுக, மூன்றாவது அணிகள் ஓரளவுக்கு இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாகத் தோன்றினால், அவ்வப்போது ஆட்சியைக் கலைத்து ரஜினியை முதல்வராக்குவோம் என மிரட்டல் விடுப்பதற்கும் பாஜகவுக்கு ரஜினி பயன்படுவார்


அதென்ன டுரோஜன் குதிரை?


டுரோஜன் குதிரை கிரேக்க தொன்மத்தில் வருகிறது - கிரேக்கத்துக்கும் டுரோய் நகரத்துக்கும் பெரும் போர் நடக்கிறது. டுரோய் நகரக் கோட்டையை உடைக்காமல் கிரேக்கர்களால் போரில் வெல்ல முடியாது. ஆனால் மிக வலிமையான கோடைக்காவலை உடைப்பது அத்தனை சுபலமல்ல. பத்து வருடங்கள் தொடர்ந்து முற்றுகையிட்டுப் பார்த்து களைத்துப் போகிற கிரேக்கர்கள் இறுதிக்கட்ட முயற்சியாக ஒரு சூழ்ச்சியை செய்கிறார்கள் - ஒரு பிரம்மாண்டமான குதிரை சிற்பத்தை செய்து அதனுள் தம் படை வீரரக்ள் சிலரை பதுக்குகிறார்கள். அந்த குதிரை சிற்பத்தை விட்டுவிட்டு கப்பலேறி தம் ஊருக்கு திரும்புகிறார்கள். கிரேக்கர்கள் தம்மிடம் தோற்று ஓடுகிறார்கள் என இதைப் பார்த்த டுரோய் வீரர்கள் குதூகலிக்கிறார்கள். தோல்வியை ஒப்புக்கொண்டு தமக்கு பரிசாக ஒரு பிரம்மாண்டமான குதிரையை விட்டுச்சென்றிருக்கிறார்கள் என நினைத்து அதை இழுத்து கோட்டைக்குள் போகிறார்கள். இரவு முழுக்க குடி கொண்டாட்டம் விழாக்கோலம். மக்கள் போதையில் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க குதிரையில் இருந்து வெளியேறும் கிரேக்க வீரர்கள் கோட்டை வாயிலை திறந்து விடுகிறார்கள். அதற்காக காத்திருக்கும் கிரேக்கப் படை உள்ளே நுழைந்து டுரோய் வீரர்களை படுகொலை செய்து டுரோய் நகரை கைப்பற்றுகிறது.


அதில் இருந்து எதிரியின் வலுவான கோட்டைக்குள் புகுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமான சூழ்ச்சி எனும் பொருளில் இந்த டுரோஜன் குதிரை அறியப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ரஜினி தான் அந்த டுரோஜன் குதிரை. பார்க்க அழகாக, வேடிக்கையாக கூட இருக்கும். ஆளாளுக்கு இழுத்து தெருவில் விட்டு விளையாடுவார்கள். ஆனால் ஒரு நள்ளிரவில் அதனூடாக எதிரிகள் நுழைந்து தமிழக ஆட்சியை பறித்துக் கொள்வாரக்ள்.


ரஜினி இங்கு வெறும் நடிகராக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. ஆனால் எல்லாரிடமும் கைக்குலுக்கி நல்லுறவை பேணி விட்டு நள்ளிரவில் கோட்டைக்கதவை திறந்து விடுகிற துரோகியாக அவர் இருக்க வாய்ப்புள்ளவரை அவரை தொடர்ந்து எதிர்ப்பது அவசியம். நேரடியாக நடப்பு அரசியலில் ஈடுபடும் எதிர்த்தரப்பினரை நம்பலாம், நாளை அவர்கள் நம் தரப்பிலும் சேரலாம். ஆனால் ரஜினியைப் போன்றவர்கள் ஒரு கணினி வைரஸைப் போன்று பொய்வேடம் பூண்டு உள்ளிருந்து நம்மை அழிக்க வந்தவர்கள். எப்படி ஆளுநர் என்பவர் மத்திய அரசின் சார்பில் மாநில சுயாட்சிக்கு, அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஒரு சட்டபூர்வமான அச்சுறுத்தலோ, ரஜினியைப் போன்றவர்கள் பாஜக சார்பில் அதே பணியை நம் தோளில் கையிட்டு புன்னகைத்தபடி செய்கிற எட்டப்பர்கள். ரஜினிக்குத் தேவை ஒரு anti-malware program.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...