Skip to main content

சூனியவாதம் - அறிமுக உரைகள்




நண்பர்களே, புத்தாண்டு முதல் நாளான இன்றில் இருந்து நாகார்ஜுனரின் “மூதமத்யமகாகாரிகா” எனும் நூலை படிப்படியாக அறிமுகம் செய்து விளக்கலாம் என இருக்கிறேன் (இரவு 7 மணிக்கு). ஆரம்பத்தில் பேஸ்புக் லைவ்விலும் பின்னர் யுடியூபிலும் 15-20 நிமிடங்கள் பேசுவது திட்டம். வாரத்தில் சில நாட்கள் எனக்கு காலையும் மாலையும் ஐந்து மணிநேர வகுப்புகள் இருக்கும். அன்று மட்டும் தவிர்த்து விடுவேன். மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பாடல்களை எடுத்து மொழியாக்கம் + உரை என விளக்குகிறேன். 


இதை நான் ஏன் செய்ய வேண்டும்?

1) தமிழில் இந்த முக்கியமான நூலுக்கு அறிமுகமோ மொழியாக்கமோ இல்லை. சூன்யவாதம் குறித்து விரிவான விளக்கவுரைகள் தமிழில் இல்லை. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் (அம்பேத்கரின் தம்மம்) நாகார்ஜுனரை அறிமுகப்படுத்தினாலும் தனது அத்வைத ஹேங் ஓவர் காரணமாக பிழையாக விளக்குகிறார். உ.தா., நாம் முழுக்க அறிய முடியாத ஒரு பிரபஞ்சத்தின் பகுதி மட்டுமே என சூன்யவாதம் பேசுகிறது என. பிரபஞ்சமே இன்மையால் கட்டப்பட்டது எனும் போது அதை நினைத்து நாம் துக்கத்தில் மருகுகிறோம் என்பது தவறானது. இன்மையை முழுக்க அறியும் போது நாம் அகவிடுதலை பெற்று மகிழ்ச்சி பெறுவோமே ஒழிய அவர் சொல்லுகிற பறதி (angst) ஏற்படாது. இந்த குழப்பங்களை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.


2) வாரத்தில் நான்கு நாள் பேசுவதற்கே எப்படியும் குறிப்பெடுக்க, மொழியாக்க வேண்டி வரும். அது நாகார்ஜுனர் குறித்து ஒரு நூலை பின்னர் எழுத பயன்படும். 


3) நான் என் கோட்பாட்டு வகுப்புகளில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்யும் போது பௌத்தத்தை படிப்பது ஒரு மிக எளிய முறையில் பெரும் திறப்பை நமக்கு பின்நவீன சிந்தனையை அறியத் தரும் எனக் கூறுவேன். நாகார்ஜுனரை இன்னொன்றை அறிவதற்கு துணையாக பயன்படுத்துவது நியாயமல்ல என்றாலும் கூட பின்னமைப்பியல் சிந்தனைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாசிப்பு முக்கியமான பயிற்சியாக இருக்கும். நாகார்ஜுனரில் இருந்து தெரிதாவின் எழுத்து, திருக்குறள் ஆகியவற்றை வாசிப்பதும் ஒரு பெரிய திறப்பை அளிக்கும்.


4) அதே போல, நான் ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, பெரியாரைப் புரிந்து கொள்ள நாகார்ஜுனரின் சூன்யவாதம் பெருமளவு பயன்படும்.


5) சாதியமைப்புக்கு, இனவெறிக்கு, ஆணாதிக்கவாதத்துக்கு அடிகோலுவது சாராம்சவாதம் - அது வைதீக இந்து மதத்தில் மட்டுமல்ல கிறித்துவம், இஸ்லாத்திலும் உள்ளது. அதை உடைக்க கடவுளை மறுத்தால் மட்டும் போதாது, எல்லா சாராம்சங்களையும் மறுக்க முடிய வேண்டும். அதை எப்படி செய்வதெனத் தெரிய வேண்டும். வழக்கமான நமது கடவுள் மறுப்புவாதம் வறட்டுவாதமாக, மேலோட்டமான எடுத்தெறிதலாக சுருங்கி விடுகிறது. ஆனால் சூன்யவாதம் கடவுளை மட்டுமல்ல நமது இருப்பு குறித்த அத்தனை நம்பிக்கைகளின் அடுத்தளத்தையே தகர்ப்பது. அதனாலே அது ஒரு சிறந்த விடுதலை தத்துவமாக இருக்கிறது. அரசியல் சிந்தனை கொண்டவர்களுக்கு ஒரு தத்துவ, தர்க்க பலம் கிடைக்க இது உதவும்.


6) வழக்கமாய் தத்துவஞானிகள் ஒரு தத்துவத்தை மறுத்து மற்றொன்ன்றை கட்டியெழுப்புவார்கள். ஆனால் நாகார்ஜுனர் உடைப்பதோடு நிறுத்திக் கொள்வார். மறுத்து மறுவிளக்கம் தர மாட்டார், போட்டு உடைத்து விடுவார். இது முக்கியம் - ஒரு பிழையை மறுத்து அதனிடத்தில் சிமெண்டை பூசி சீர் செய்வது வழக்கமான தத்துவ உரையாடல். நாகார்ஜுனர் ஒரு ஜே.சி.பி எந்திரம். ஒவ்வொன்றையாய் அவர் எப்படி காலி செய்கிறார்  என்பதை கவனிப்பதே சுவாரஸ்யம். அதனால் அவர் மூலம் நாம் பெற்றதென்ன எனக் கேட்காமல் இருப்பது முக்கியம். அவர் மூலம் எதை “இழக்கிறோம்” என்பதே முக்கியம்.


7) இது பகுப்பாய்வு தத்துவம் என்பதால் அவதானிப்புகள், அர்த்தப்படுத்தலுக்கு பெரிய இடமிருக்காது. ஜென் தத்துவத்தைப் போல உணர்வுரீதியான ஒரு மாற்று உண்மையை இது காட்டாது. நம் அறிவைக் கொண்டு எப்படி பல முடிச்சுகளை அவிழ்ப்பது என தெரிந்து கொள்ளலாம். கற்பனை, புதிய சிந்தனை ஆகியவற்றுக்கு இதில் இடமிருக்காது. உணர்வுரீதியாக பெரிய திருப்தியை இதில் பெற முடியாது. முழுக்க முழுக்க அறிவார்ந்த தளத்தில் தர்க்கம் கொண்டு இயங்குவதால் ஒரு கட்டத்தில் களைப்பு ஏற்படலாம். அதற்குத் தயாராக இருந்தால் நம் சிந்தனை தசைகள் வலுப்படும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பௌத்தம் என்றதும் நாம் இதுவரையிலும் வெகுவாக பழகியுள்ளது ஜென் பௌத்தம், ஆனால் சூனியவாதம் அதற்கு தலைகீழானது. இதில் ஜென்னைத் தேடக் கூடாது.


8 ) நான் மகாயான மத்யமகா தத்துவத்தின், பௌத்தத்தின் வரலாற்றைப் பற்றி அதிகம் பேசப் போவதில்லை. ஏனென்றால் தத்துவமே என் இலக்கு; வரலாற்றின் பின் சென்றால் நாம் தத்துவத்தை தவற விட வாய்ப்புண்டு (இலக்கிய வரலாற்று வாசிப்பில் நிகழ்வதை போல.) 


9) இன்மை என்பதும் இல்லை என்பதும் ஒன்றல்ல. ஒரு பொருள் அசைகிறது. அதை நாகார்ஜுனர் மறுப்பதில்லை. இயல்பியலின் படி இன்று அந்த சலனத்தை, நகர்வை நாம் விளக்கலாம். ஆனால் அறிவியல் இந்த கோணத்தில் ஒன்று ஏன் அப்படி நிகழ்கிறது எனக் கேட்பதில்லை. அது எப்படி அப்படி இருக்க முடிகிறது என சூன்யவாதம் வினவுகிறது. ஒரு பந்தின் துள்ளல் எப்படி துள்ளலாக இருக்கிறது எனக் கேட்கிறது. (அறிவியல் அதை அதுவாகவே எடுத்துக் கொண்டு அலசுகிறது.) சூன்யவாதம் என்பது மறுப்புவாதம் அல்ல. இதை நினைவில் கொள்ள வேண்டும்.


10) நாகார்ஜுனரின் ஒரு சிக்கல் பின்னோக்குவாதம் (regress) - ஒவ்வொன்றையும் அதற்குப் பின்னால் என்ன, பின்னாலுக்குப் பின்னால் என்ன, பின்னாலுக்குப் பின்னாலுக்குப் பின்னால் என்ன என இந்த பாணி அலசல் போய்க் கொண்டிருக்கும். இது சில நேரம் ஒரு புகைமூட்டத்தின் மத்தியில் இருக்கிற உணர்வைத் தரும். கடுப்பேற்றும். ஆனால் நாகார்ஜுனரின் நோக்கமே நாம் சிந்தனையை ரொம்ப வலுவாகப் பற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதே. பகுப்பாய்வு சிந்தனையே சாரமானது என அவர் கூற மாட்டார். ஓரளவுக்கு நாகார்ஜுனரின் பாணியில் வினாக்களை எழுப்புகிற மேற்கத்திய தத்துவவாதி என சாக்ரடீஸைக் குறிப்பிடலாம். ஆனால் அவரே தர்க்கத்தின் ஆற்றலை நம்பினார். நாகார்ஜுனர் அந்த ஆபத்தை உணர்ந்து இறுதியில் சூனியமே சூனியமானது என்பதில் போய் முடிக்கிறார். 


11) மற்றொரு எச்சரிக்கை - நாம் அனைவருமே அத்வைத சிந்தனையால் தாக்கம் பெற்றவர்கள். விரும்பினாலும் இல்லாவிடிலும் நம் சிந்தனையில் வைதீகம் ஊறியுள்ளது. ஆனால் சூன்யவாதம் அதற்கு நேரெதிரானது. வைதீகம் இந்த உலகத்தின் பின்னால் ஒரு சாரம் உண்டு, அதுவே பிரம்மம் என்கிறது, சூனியவாதம் இந்த பிரம்மம் ஒரு கட்டமைப்பு என்கிறது. (அதனாலே பௌத்தத்தில் கடவுள் இல்லை.) நாகார்ஜுனரை வாசிக்கையில் அவர் சொல்வதற்கு இணையாக வைதீகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்க, வாதிட முனையக் கூடாது. அதற்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் அன்பு, தாய்மை, குழந்தைமை, மனிதநேயம், சாதிப்பற்று, மதப்பற்று, கடவுள் போன்ற செண்டிமெண்டுகளை கைவிடத் தயாராக இருக்க வேண்டும். அதை விட முக்கியமாக நமது இருப்பே சாரமானது என நம்புகிறோமோ அதைக் கைவிட தயாராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை உடையும் போது அது நம்மை எரிச்சல்படுத்தும். பரவாயில்லை என விட்டுவிட வேண்டும். 


12) உரைக்கு முன்பு அன்றைக்கான பாடலடிகளின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவேற்றி விடுகிறேன். அதை ஏற்கனவே வாசித்து நீங்கள் தயாராக இருக்கலாம். தேவைப்படுவோருக்கு நூலின் pdfஐ மின்னஞ்சல் பண்ணுகிறேன். 


13) நான் தத்துவ மாணவன் அல்ல. நான் தத்துவத்தில் இளைப்பாற வரும் இலக்கியவாதி. ஆக இந்த உரைகள் அந்த கண்ணோட்டத்தில் தான் அமையும். இங்கு இதைப் பற்றி பேசுவோர் இல்லை என்பதாலே அந்த வெற்றிடத்தை நிரப்புகிறேன். ஆகையால் என் குறைகளை பொறுத்துக் கொள்ளுங்கள்.


14) அவ்வப்போது இதைப் பற்றி எழுதுகிற குறிப்புகளை பிளாகில் வெளியிடுகிறேன். அதையும் படியுங்கள். இங்கு சுருக்கமாக பேசுவதை அங்கு விரிவாக விவாதிக்கிறேன் என்பதால் உங்களுக்கு உதவும். 


15) இறுதியாக நான் இதை நூற்றுக்கணக்கானோர் கவனிக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அக்கறை கொண்ட, இதற்கான உழைப்பை செலுத்த தயாராக உள்ள ஒரு சிறிய குழுவை மட்டுமே எதிர்பார்க்கிறேன். நான் என்னதான் எளிமைப்படுத்தினாலும் இது சிக்கலான நூல் தான். எல்லாருக்குமானது அல்ல, இதைத் தேடுபவர்களுக்கு மட்டுமே ஆனது. (மற்றபடி வித்தியாசமான மூளை அமைப்போ கூடுதல் அறிவோ ஒன்றும் தேவையில்லை.) இதை புத்தகமாய் நான் எழுதும் போதும் 50 பேர் தான் படிப்பார்கள் எனத் தெரியும். ஆகையால் இது உங்களுக்கு ஆனது அல்ல எனத் தோன்றினால் தவிர்த்து விடுங்கள்.

Comments

ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி. தொடருங்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
Chitra said…
மிக்க ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
நன்றி நண்பர்களே

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...