முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடி எதிர்ப்பலை எனும் மாயை



இந்த பாஜக எதிர்ப்பலை மாயையைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இடமே இல்லாத போது எப்படி எதிர்ப்பலை வர முடியும் என்பதே என் கேள்வி. தமிழக மக்கள் தம்மை இந்திய தேசியத்துக்கு எதிராக கற்பிக்க சில சூழ்நிலைகளில் மட்டும் தான் முடியும் - முன்பு இந்தி எதிர்ப்பு, பின்னர் ஜல்லிக்கட்டு, இடையே நீட் எதிர்ப்பு. ஆனால் நிரந்தரமாக அது இங்கிருந்ததில்லை, ஏனென்றால் அதற்கான அவசியம் தமிழர்களுக்கு இல்லை. அவர்கள் தம்மை தம்மளவில் ஒரு தேசிய இனமாக கருதுகிறார்கள். மேலும், தமிழர்கள் தமது இருப்புக்கு மத்திய அரசால் நிரந்தர ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நம்புவதில்லை. அப்படி ஒரு கசப்பு இருந்தாலும் ஆளும் மத்திய அரசை எதிர்க்கும் நோக்கில் மட்டுமே மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளது இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளதா? சரி அப்படியே வாக்களித்தாலும் பாஜகவின் நிரந்தர எதிரிகளான கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை? ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகமாய் தோல்வியடைந்தார்கள்? அவர்களை விட வெளிப்படையாக யார் பாஜகவை எதிர்க்கிறார்கள்? இது அடிப்படையில் ஒரு மாயை


யாரோ இப்படி ஒரு எதிர்ப்பலை இருப்பதாக தில்லி பாஜகவுக்கு நம்ப வைத்து விட்டார்கள். அவர்களுடைய ஈகோவை இது தடவி விடுவதாலோ என்னவோ வில்லனாக தம்மை கற்பித்து அடுத்தடுத்த காய்களை நகர்த்த தொடங்கி விட்டார்கள். அமமுக வாக்குகள் பாஜக எதிர்ப்பு வாக்குகள் எனச் சொல்லி அதிமுக-அமமுக இணைப்பை தடுத்தார்கள். அடுத்து, சவுக்கு சங்கரில் இருந்து சீமான் வரை பாஜக-திமுக ரகசிய கூட்டணி என பேசுகிறார்கள். இதுவும்பாஜக எதிர்ப்பலையைதிமுக பயன்படுத்தக் கூடாது எனும் நோக்கில் தான். பழைய 2-ஜி வழக்கை பாஜக திரும்ப எடுக்கிறது என்பது முதல் ஸ்டாலின் வேலை வைத்திருந்த புகைப்படம் வரை இதற்கு ஆதாரமாகக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் ஒரு ஆதாரமாடா? நாளை காங்கிரஸுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை எடுத்து வைத்து பாஜகவும் காங்கிரஸும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளது என சொல்லலாமே. ராகுல் ஒரு கோயிலுக்குப் போனதைக் காட்டி ராகுல் ஆர்.எஸ்.ஸின் பிடியில் உள்ளதாய் கொதிக்கலாமே. பைத்தியங்கள் மட்டுமே இதையெல்லாம் நம்புவார்கள்.


 என்னைப் பொறுத்தமட்டில் இந்த அவசரகதி குற்றச்சாட்டுகளே இவர்களை அம்பலப்படுத்தி விடுகின்றன. மேலும் அரசியலில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதால் மக்களும் அதைக் கணக்கில் கொண்டே வாக்களிக்கப் போகிறார்கள். நாளை ஒருவேளை பாஜகவுடன் திமுக இணங்குவதாகத் தெரிந்தால் முற்போக்காளர்கள் மட்டுமே ஏமாற்றமடைவார்கள், ஒட்டுமொத்த ஜனங்களும் அல்ல. தமிழகத்துக்கு இது ஒரு பிரச்சனையே அல்ல. (ஏன் என வரும் பத்திக்கு அடுத்த பத்தியில் சொல்கிறேன்) வரும் போது பார்த்துக் கொள்கிறோம். இப்பவே ஏன் நரம்பு புடைக்க கதறுகிறீர்கள் நீங்கள்?


இப்போதைக்கு அதிமுகவுக்கு நான்கே பிரச்சனைகள் தாம்.


தமிழக அரசியலில் தலைவர்களை மையமிட்டுத் தான் இயக்கங்கள் தோன்றுகின்றன. அதிமுகவின் முதல் பிரச்சனை அதற்கு ஒரு உறுதியான நிலையான தலைமை இல்லாதது


அடுத்த பிரச்சனை அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டோம் எனும் ஆவேசத்தில், அவநம்பிக்கையில் கட்டுப்பாடின்றி ஊழல் செய்து பணத்தை அவர்கள் வெளிப்படையாகவே குவிப்பது.


 மூன்றாவதாக, அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆள்வதால் இயல்பாகவே தோன்றுகிற அதிகாரக் களைப்பு, அதிகாரம் நோக்கிய அலுப்புணர்வு (anti-incumbency).


 நான்காவதாக, அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக அதை உடைக்க, பலவீனப்படுத்த தொடர்ந்து முயல்வது.


மற்றபடி என்னதான் பாஜகவால் வழிநடத்தப்பட்டாலும் எடப்பாடி அரசு தன்னை முழுமையாக தமிழக விரோத அரசாக காட்சிக் கொள்ளவில்லை. வேல் யாத்திரையை அது கையாண்ட விதம் ஒரு உதாரணம். அண்மையில் கர்நாடகாவில் நடந்த மதரீதியான மோதல்கள், மாட்டுக்கறி தடை போன்றவை, .பியில் அரங்கேறுகிற அப்பட்டமான மதவாத சட்டங்கள், மாற்றங்கள் இங்கு நிகழ்ந்தனவா? இல்லையே. என்னதான் இது பினாமி ஆட்சியென்றாலும், ஓரளவுக்கு மேல் (நீட், புதிய கல்வித்திட்டம், சி.., வேளாண் சட்டங்கள் போன்ற விசயங்களில்ல்) தமிழக நலனுக்காக நிற்க இந்த அரசால் முடியவில்லை என்றாலும், இது இன்றும் அதிமுக ஆட்சியே, பாஜக ஆட்சி அல்ல.

இந்த காரணங்களால் தான் இத்தேர்தலில் பாஜக vs திமுக என்றொரு எதிரிணை இல்லை என்கிறேன். எப்போதுமே இக்களம் அதிமுக vs திமுக என்றே இருக்கும். இதை எடுத்து சொல்லும் முதுகெலும்பு நம் ஊடகங்களுக்கு இல்லை என்பதே அவலம்!  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.