முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்ய புத்திரன் எனும் ராவணன்



இந்த ஆண்டு மனுஷுக்கும் சற்று சிக்கலானதாக, சவாலானதாக இருந்தது என அறிவேன். லாக் டவுனின் போது உயிர்மை அச்சு இதழை கொண்டு வர இயலவில்லை, அவருடைய அலுவலகத்தை மூடும் சூழல். இருந்தாலும் ஒற்றை ஆளாக பகுதி நேர ஊழியர்களை சிலரை வைத்துக் கொண்டு அவர் உயிர்மை இணைய இதழ், யுடியூப் சேனலை உற்சாகத்துடன் சிறப்பாக நடத்தினார். இந்த புத்தகக் கண்காட்சியிலும் குறைந்தபட்ச முதலீடு, உள்கட்டமைப்பு, நிறைய கட்டுப்பாடுகள் இருந்தும் அவர் எப்படியோ சமாளித்து விட்டார். இந்த நெருக்கடிகள் ஒரு பக்கமிருக்க, அவர் எழுதிக் குவித்த கவிதைகள் தாம் பெரிய ஆச்சரியம். எப்போதெல்லாம் நெருக்கடிகளும் ஏமாற்றங்களும் அதிகமாகின்றனவோ அப்போதெல்லாம் எழுத்தில் தீவிரம் காட்டுவது, அநேகமாய் துரித கவனிப்புக்கு, செய்தித் துணுக்குக்கு மட்டும் தகுதியானவை என நாம் நினைக்கிற எத்தனையோ விசயங்களை கவிதையாக்குவது, கடந்த பத்தாண்டில் எழுதியதை விட எளிமையாக மென்மையாக அதே நேரம் தீவிரமாக எழுதுவது என பலரும் பொறாமைப்படுமளவுக்கு செயல்பட்டிருக்கிறார். பலரும் கடுப்படிக்கும் அளவுக்கு வாசகிகளைப் பெற்றிருக்கிறார். கைவிடப்படும் போது நம்மில் பலரும் எழுத்தை விட்டு விடுவோம், குடியில் சங்கமிப்போம், மன அழுத்த மாத்திரைகளை கையில் வைத்து உருட்டிக் கொண்டிருப்போம், சமூக வலைதளங்களில் வம்பில், வீண் சர்ச்சையில் ஈடுபடுவோம். ஆனால் மனுஷ் கவிதை வெளிப்பாட்டை இறுகப் பிடித்து மேலே வந்து விட்டார் என்பது இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் ஒரு பெரும் ஊக்கமளிக்கும் சங்கதி.


பொதுவாக எழுத்தாளர்கள் எப்படி மனம் குவித்து உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள்?

சிலர் எளிய மத்திய வர்க்க வாழ்க்கைக்குள் இருந்தபடி அதிலிருந்து எழுத்துக்கான கருப்பொருளை எடுத்து அமைதியான, வசதியான வேளைகளில் மட்டும் எழுதுகிறார்கள்.   

இன்னும் சிலர் ஒரு துறவியைப் போல எழுத்து மட்டுமே இலக்கு, வேறெதையும் கவனிக்க மாட்டேன் என செயல்படுவார்கள். வீடு, குடும்பம், வேலை என இருந்தாலும் அதிலெல்லாம் பட்டும்படாமல் இருந்து விட்டு எழுத்தில் முழுத்தீவிரத்துடன் பித்துடன் இருப்பார்கள். இந்த வகைமையில் இன்னும் சிலர் செய்தித்தாள் படிக்கவோ, சினிமா பார்க்கவோ, சில்லறை இன்பங்களில் ஈடுபடவோ செய்யாமல் உக்கிரமாக இருப்பார்கள் அல்லது அப்படி இருக்க வேண்டும் என போதிப்பார்கள்.

மனுஷ் போன்று வெகுசிலரே எழுத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத சூழலில் வாழ்க்கை முறையில் இருப்பார்கள் - அன்றாட நிகழ்வுகள், சச்சரவுகள், செய்திகள், இலக்கிய வம்புகள், அரசியல் கருத்துக்கள், நிகழ்வுகள் என எதையும் அவர் விட்டு வைப்பதில்லை. ஒரு பக்கம் இறைந்து கிடக்கும் நாளிதழ்கள், இன்னொரு பக்கம் போனில் சமூகவலைதள உரையாடல்கள், ஐ.சி.யு மருத்துவ உபகரணம் போல அணையாத டிவி என அவர் இருக்கும் இடம் கவனச்சிதறல்களின் உச்சமாக இருக்கும். அவர் அரசியலுக்கு வந்த பிறகு பயணங்களும் அதிகமாகி விட்டன, தினசரி டிவி விவாத அரங்கு வெட்டுகுத்துக்கள் வேறு. இதன் மத்தியில் அவர் ஆயிரக்கணக்கான கவிதைகளை வருடாவருடம் எழுதுவது ஒரு அதிசயம் என்றே நினைக்கிறேன். 


எழுதுவதற்கு மனத்தை அதிக சஞ்சலமின்றி வைத்திருக்க வேன்டும், உணர்ச்சிகளை ஆறப் போட வேண்டும், மெல்ல மெல்ல கொதிநிலைக்கு போக வேண்டும், அமைதியான நிலை, சலனமற்ற போதம் பழுத்து மெல்ல நெருப்பாகி ஒளிவிடும் போது அது சிறந்த எழுத்தாகும் என்றெல்லாம் தமிழில் நம்பிக்கைகள் உள்ளன. ஜெயமோகன் போன்றோர் இதை அறிவுறுத்துவார்கள். எப்படியும் குறைந்தபட்சம் எழுத்துக்கு ஒரு வாழ்க்கை ஒழுங்கு அவசியம் என சொல்லாதவர்களே இல்லை. எனக்குத் தெரிந்து மனுஷ் ஒழுங்குக்கு நேரெதிர் திசையில் பயணிப்பவர். தன் மொத்த நாளில் ஒரு சில மணிநேரங்கள், சில நேரம் பத்து பதினைந்து நிமிடங்களே கவிதைக்கென செலவழிக்கிறார். ஒரு ஆயிரம் பக்க கவிதைத் தொகுப்பை மொத்தமும் தன் செல்போனிலே எழுதியதாக ஒருமுறை சொன்னார். ஏன் அப்படி? லேப்டாப்பில் எழுதலாமே? படுக்கப் போகும் போது போனில் எழுதுவேன் என்றார். இதையெல்லாம் எப்படி சாதிக்கிறார் என்பது அடிக்கடி எனக்குள் எழும் கேள்வி. ஆனால் பாருங்கள் எழுத்துக்கு விரோதமான ஒரு வாழ்க்கைச்சூழலை அமைத்துக் கொள்ளும் போதெல்லாம் அவர் அதிகமாகவும் சிறப்பாகவும் எழுதுகிறார். அவருடைய மன அமைப்புக்கு இது தான் சரியாக வருகிறது என நினைக்கிறேன். உ.தா., அவர் இலக்கியம், சிறுபத்திரிகை சூழல் என்று மட்டுமிருந்த, அரசியல் சமூகம் பற்றி குறைவாக எழுதிய, சமூக வலைதளங்கள், டிவி விவாதங்களே இல்லாத தொண்ணூறுகளில் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். அவரது அந்த காலத்து சிலாகிக்கப்பட்ட கவிதைகளை விட பத்து பன்னிரெண்டு ஆண்டுகளில், இந்த “சீரழிவான, கவனச்சிதறல்களின் காலத்தில்” எழுதிய கவிதைகளே மேலானவை முதிர்ச்சியானவை எனும் எண்ணம் எனக்குண்டு.


மனுஷின் மன அமைப்பு சிறு சிறு அறைகளாக பகுக்கப்பட்ட, அவற்றை இணைக்கிற ஊடுபாதைகள் கொண்ட ஒன்று என நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அவரால் இருக்க முடிகிறது. இவற்றின் அடியாழத்தில் எங்கோ கவிதைக்கான பாதாள அறை இருக்கிறது. சரியான / தேவையான நேரத்தில் அங்கு போய் இருந்து கொண்டு அவரால் தீவிரத்துடன் செயலாற்ற முடிகிறது. ஒரு கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் போவதைப் போல சுலபமாக அவரால் அந்த அறைக்குள் போக முடிகிறது என்பதே ஆச்சரியம். சமூகவலைதள அறை, காதல்களின், நட்புகளின், எளிய அலுப்பான அன்றாட உறவுகளின் அறை, அரசியல் அறை, செய்திகளின், சர்ச்சைகளின் வம்புகளின் அறை, கருத்துக்களின் அறை, அன்றாடங்களின் அறை என எங்கு நேரம் செலவிட்டாலும் தன்னை அங்கு அழித்துக் கொள்ளாமல் கவிதைக்கு மீண்டு விடுகிறார். அது அவருடைய இயல்பு. அவரை ஒரே ஒரு அறையில் பூட்டி வைத்தால் போரடித்து செத்து விடுவார். என்னால் இப்படி பத்து தலைகளுடன் இருக்க முடிவதில்லை. ஒருநாள் ஒன்றில் ஈடுபட்டால், அதில் மட்டுமே இருந்து அதிலேயே எரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நான் கவனமாக எழுத்தைத் தவிர பிற விசயங்களில் உன்மத்தமாய் ஈடுபடாமல் இருக்க முயல்வேன். மனுஷ் இதற்கு நேரெதிரான இயல்பு கொண்டவர். அவர் ஒரு ராவணன்.


மனுஷுக்கு இன்று பிறந்த நாள். என் வாழ்த்துக்களும் அன்பும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.