முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆட்டோபிக்‌ஷன் எழுதுவதன் சூட்சுமம்



இன்று என்னை சந்திக்க நண்பர் ஒருவர் இக்கேள்வியை கேட்டார்: autofiction என்றால் என்ன? அதற்கும் புனைவுக்கும் என்ன வித்தியாசம்?


என் பதில்: புனைவு என்றால் பிறருக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனையால் உருவாக்குவது. ஆட்டோபிக்‌ஷன் என்றால் தனக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனை பண்ணி எழுதுவது. அத்துடன் அந்த பாத்திரமாகவே சமூகவலைதளம், பேட்டிகளில் டெரராக வாழ்ந்து காட்டுவது. எழுத்திலும் நேரிலும் புனைவாகவே உலக வேண்டும் என்பதால் ஒப்பிடுகையில் ஆட்டோபிக்‌ஷன் மிகவும் சிரமம்.


நீங்கள் நிஜவாழ்வில் ஒரு எறும்பைக் கூட கொல்லாதவராக, எந்த சாகசமும் இல்லாத வாழ்க்கையை வாழலாம். ஆனால் ஆட்டோபிக்‌ஷனில் ஹீரோவான நீங்கள் சின்ன வயதில் பெற்றோரால் வதைக்கப்பட்டவனாக, வீட்டை விட்டு ஓடிப் போனவனாக, தன் பிழைப்புக்காக எல்லா விளிம்புநிலை வேலைகளையும் செய்தவனாக இருக்க வேண்டும். பல கொடூரங்களை பால்யத்தில் கண்டவனாக இருக்க வேண்டும். பதின்வயதில் சாராயம், கஞ்சா போன்ற பழக்கங்கள், வன்முறை, கஞ்சா கடத்துவது போன்ற தொழில்களில் ஈடுபட்டு பிறகு திருடனாக, ரௌடியாக மாறி, சில வருடங்கள் ஆண் பாலியல் விபச்சாரியாகவும் இருக்கலாம்

. இதெல்லாம் போதவில்லை என்றால் நீங்கள் சில வருடங்கள் மாபியா கும்பல்களில் ஒரு முக்கிய நபராக, அதே நேரம் இலக்கியம், இசை என கலாச்சார நுண்ணுணர்வுடன் இருக்க வேண்டும். கொலை, அடிதடி, பலாத்கார இதையெல்லாம் உணர்ச்சியில்லாமல் டீல் செய்பவனாக இருக்க வேண்டும். முதல்வரில் இருந்து மத்திய அமைச்சர் வரை உங்களால் பலன் பெற்றிருப்பார். ஆனால் நீங்கள் எதையும் கோராமல் இருட்டிலே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இந்த சமயம் உங்களை ஒரு காதல் கடவுளாக வழிபடும் பல பெண்கள் அவன் வாழ்க்கையில் கடந்து செல்வார்கள். நீங்கள் எந்தளவுக்கு கொடூரமாக நடந்து கொள்கிறீர்களோ அந்தளவுக்கு இந்த பெண்கள் உங்களிடம் மண்டியிடுவார்கள். இவர்கள் சின்ன சின்ன காரணங்களுக்காக, உங்கள் மீதான காதலுக்காக கொலையுண்டும், தூக்குமாட்டியும், தன்னை எரித்தும் மாண்டு போவார்கள். (கதையில் ஒரு சர்வதேச கோணம் வேண்டுமெனில் நீங்கள் மாபியாவில் இருந்து அல்கொய்தாவுக்கு சென்று, அங்கு அமெரிக்க உளவுப்படை சல்லடை போட்டு தேடும் படுபயங்கர தீவிரவாதியாகியதாக எழுதலாம்.) ஒரு கட்டத்தில் போதும் என முடிவு செய்து தான் சம்பாதித்த அதிகாரம், தொடர்புகளை உதறி விட்டு ஊருக்குத் திரும்பி நீங்கள் ஒரு எழுத்தாளனாவதாக, அங்கு பல சக எழுத்தாளர்களை டீல் செய்து, வாசகிகளுடன் சல்லாபித்து வாழ்வதாக முடிக்கலாம். அல்லது அல்கொய்தாவில் சேரும் இடத்தில் கட் செய்து நீங்கள் ஒரு விளையாட்டு வீரனாக, உன்னத கலைஞனாக, வியாபார காந்தமாக மாறி, உலகின் மிக முக்கியமான பணக்காரனாகி, பின்னர் ஒருநாள் எல்லாவற்றையும் உதறி துறவியாக இமய மலைக்கு செல்வதாக மாற்றலாம். அதிகாரம், பணம், குரோதம், இச்சை எல்லாம் வெறும் மாயை என புரிந்து நீங்கள் ஒரு விழிப்புணர்வை தன் மலைப்பயணத்தில் பெற்று ஆன்ம உச்சம் பெறுவதாக எழுதலாம். 


இப்படி பார்முலாவை சரியாக கையாண்டால் சிறப்பான ஆட்டோபிக்‌ஷன் ரெடி.


அவ்வப்போது வாசகர்களில் உங்கள் எந்த நூலில் சொந்த அனுபவம் முழுமையாக வந்துள்ளது எனக் கேட்பார்கள். அப்போது, “என் சொந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டு வரவே முடியாது, நிஜத்தை எழுதினால் என்னைக் கொன்றே விடுவார்கள், ஆனால் இன்னின்ன நூல்களில் லேசாய் உண்மை ஒளிந்துள்ளது, நீங்களே கண்டுபிடியுங்கள்” என பூடகமாக பேச வேண்டும். தலையை பிய்த்துக் கொள்ளும் வாசகர்கள் உங்களைப் பற்றின பல புரளிகளை கூடுதலாக பேசி வளர்த்து தாமும் ஆட்டோபிக்‌ஷன் படைப்பாளி ஆவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...