முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னையின் அன்பு



“குயின்” வெப்ரீசிஸ் (MX player) பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா “என்னை ஏன் எந்த நிபந்தனையும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?” என தவிப்புடன் கேட்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர் அமைதியாக “தாயால் மட்டுமே நிபந்தனையில்லாத அன்பைத் தர முடியும். வேறு எல்லாரிடமும் நமக்கு நிபந்தனைக்குட்பட்ட்டே அன்பு கிடைக்கும்.” என்கிறார். என்னவொரு பளிச்சென்ற, ஆழமான வசனம். இது ஜெயலலிதாவின் ஆங்கிலப் பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கருத்து தான் என்றாலும் வசனமாக வருகையில், அதுவும் எம்.ஜி.ஆரின் இடத்தில் இருந்து சொல்லப்படுகையில் பிரமாதமாக இருக்கிறது. இது மட்டுமல்ல வேறிடங்களிலும் பல அழகான வசனங்கள் உண்டு. பொதுவாக கௌதம் மேனனின் படங்களில் வசனம் மணிரத்னம்தனமாக இருக்கும், ஆனால் இப்படத்தில் இலக்கியத்தனமாக உள்ளது. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தனித்துவமான பேச்சு பாணி உள்ளது, அதற்கேற்ற வசனங்களும். கார் ஓட்டுநரால் இந்த மாதிரி தெளிவாக பேச முடியாது, ஆனால் அவர் மிகையாகவும் பட்டும்படாமலும் பேசுகிற பாணியில் சொல்லப்படாத சங்கதிகள் தொனிக்கின்றன. ஜெயலலிதாவின் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரான சிஸ்டர் ஒருவர் பேசுகிற வசனங்களும் அப்படியே தனித்துவமாக பொருத்தமாக உள்ளன. யாரோ திறமையான ஒரு வசனகர்த்தா விளையாடி இருக்கிறார்!


இதை ஒட்டிய பொதுவான ஒரு கேள்வி: அன்னையின் அன்பு பரிபூரணமானதா, நிபந்தனைக்கப்பாற்பட்டதா?


“குயினில்” கூட ஜெயலலிதாவின் அம்மா தனது மகன் மீது தான் கூடுதல் அன்பாக இருக்கிறார்; அதனாலே தொடர்ந்து அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே மோதல்கள் வெடிக்கின்றன. ஆனால் இந்தளவுக்கான அன்பு கூட எம்.ஜி.ஆரிடம் இல்லையே என்பதையே அவரை உடைய வைக்கிறது.


நடப்புலகில், காதலனுடன் ஓடிப் போகும் பொருட்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து, விஷம் ஊட்டி கொல்லும் அன்னையர் இல்லையா? பெற்ற பிள்ளைகளிடம் சின்ன விசயங்களுக்காக கோபம் கொண்டு துரத்தி விடும் பெற்றோர் இல்லையா? ஆணவக் கொலை செய்யும் பெற்றோர்? காதல் தெரிய வரும் முன் வரை தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடி விட்டு அடுத்த நொடி அதே மகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விடும் பெற்றோரை எப்படி புரிந்து கொள்வது? இதையெல்லாம் அரிதான நிகழ்வுகள் என்று கொண்டால் ஒன்றுக்கு மேலான குழந்தைகள் உள்ள வீடுகளில் ஒரு குழந்தை அதிக செல்லத்துடனும் மற்றொன்று குறைவான கவனிப்புடனும் ஏக்கத்துடனும் வளர்க்கப்படுதில்லையா? இந்த தலைப்பில் அண்மையில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியே நடத்தினார்கள். உணவில் கூட பாரபட்சம் காட்டுகிறார்கள் என தாய்மாரை நோக்கி குழந்தைகள் குற்றச்சாட்டு வைத்தார்கள். எத்தனையோ பெண் பிள்ளைகள் தமது அம்மா அண்ணனுக்கோ தம்பிக்கோ காட்டுகிற அன்பில் சிறுபகுதியை கூட தமக்குத் தருவதில்லை என மனம் கசிகிறார்கள். இது பொறாமையாகி வெறுப்பாக மாறி வெளியே ஆண்கள் சற்று கூடுதலாக மதிப்பு பெற்றால் அவர்களை கொலைவெறிக்கு ஆளாக்குகிறது. இந்த பாலின பாரபட்சத்தை எப்படி புரிந்து கொள்வது? அன்னையின் அன்பு கூட நிபந்தனைக்கு உட்பட்டதே என சொல்லத் தோன்றுகிறது.


கடைசியாக, அன்பு நிபந்தனையற்றதாக உள்ளது அத்தனை நல்லதல்ல என்றும் சொல்ல வேண்டும். அப்படியான அன்பு ஒரு சர்வாதிகாரமாக, துயரம் தரும் ஆட்கொள்ளலாக மாறி விடும். அன்பு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாருக்கும் நிரூபிக்க தேவையில்லாமல், அவ்வப்போது தோன்றி மறைவதாக, தொடர்ச்சியை பற்றி கவலைப்படாததாக, இறுக்கமற்றதாக இருப்பதே சுதந்திரமானது. அன்னையரின் அன்பு ‘நிபந்தனைக்கு உட்பட்டதாக’ இருக்கையில் அவர்கள் அதை ரொம்ப சீரியஸாக எடுக்காமலும் இருக்க வேண்டும்.  “நீயா நானா” நிகழ்ச்சியில் இன்னின்ன காரணங்களுக்காக இந்த பிள்ளையிடம் கூடுதல் அன்பு காட்டுகிறேன் என தாய்மார் பாரபட்சத்தை நியாயப்படுத்துவதை கவனித்தேன். அந்த நியாயப்பாடே அவர்களுடைய பிரச்சனை, அது அவர்களை அநீதியாக அன்பு காட்டுபவர்களாக மாற்றுகிறது. போகிற போக்கில், முந்தின நொடியை மறந்து விட்டு அன்பு காட்டுகிற அன்னையரால் அனைவருக்கும் அன்னையாக இருக்க இயலும். நிபந்தனைக்கு அப்பாலான ஒரு பரிபூரண அன்பை கட்டமைக்க முயல்கையிலே நமது அன்னையர் பாரபட்சம் காட்டுகிறவர்களாகிறார்கள் என்பது ஒரு நகைமுரண்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.