முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ரஜினிகாந்த்” நூல் குறித்து தமிழ் பிரபா



 நண்பர்களுடனான மதுக்களிப்பில் நான் அதிகம் பேசுபவைகளுள் ஒன்று “ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை”. 

 

மேற்கூரியது போன்ற கட்டுக்கோப்பான சொற்களில் பேச மாட்டேன் எனினும் வாய்க்குழைவில் இந்த சாரமே மிகுந்திருக்கும். மதுவின் இனிய மயக்கத்தில் நினைவுகளை, ஏக்கங்களை, மனிதர்களை, நாவல்களை, திரைப்படங்களை, ஆளுமைகளைக் குறித்துப் புலம்புவது என் களியாட்டத்தின் ஒருபகுதி. இதில் ரஜினி மெஜாரிட்டி. இனி அடுத்த முறை ரஜினி பற்றி உரையாட வருமாயின் ஆர், அபிலாஷ் எழுதிய “ரஜினிகாந்த்” என்னும் குறுநூலையும் துணைக்கு வைத்துக் கொள்வது உசிதம் என்று எண்ணுகிறேன்.


அபிலாஷ் எழுதி சமீபத்தில் வெளிவந்த ரஜினி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான இதில், ரஜினியின் கதாப்பாத்திரம் பரவலாக கொண்டாடப்படதற்கு காரணம் அதிலுள்ள தொன்மம், அதை முன்வைத்து தத்துவப் பார்வை, ரஜினியின் உடல்மொழி அரசியல், ஆகியவை குறித்து எழுதியிருக்கிறார்.


உதாரணத்திற்கு சில கட்டுரைகளின் தலைப்புகளைத் தருகிறேன்.


ரஜினியும் கமலும்


ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்


அதிகாரத்தை எதிர்கொள்ளும் இருமுறைகள்; ரஜினியும் பூக்கோவும். 


ரஜினியின் சிகரெட் குறியீடு – கலகத்திலிருந்து சமகாலப் பெண்கள் வரை


கமல் ரஜினி நடிப்பின் மீதான ஒப்பீடுகளை ஆங்காங்கே வாசிக்கும்போது, நான் அடிக்கடி சொல்லிவரும் “நடிப்பு குறித்த கமல் ரசிகர்களின் பார்வை என்பது பழமைவாதிகளின் திண்ணைப்பேச்சுக்கு ஒப்பானது” என்கிற கருத்தின் மீது ஊக்கமருந்தை தெளித்தது போன்றிருந்தது.


விதந்தோதுதல் என்ற வகையில் இல்லாமல், ரஜினி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு பின்னணியில் உள்ள பொதுமக்களின் உளவியல் மீதான விசாரணைகளும் கட்டுரையில் இடம் பெறுகின்றன.


ரஜினியின் கதாபாத்திரத் தன்மையை பௌத்த தத்துவத்துடன் இணைத்து முன் வைக்கும் பார்வை ஆழ்ந்த வாசிப்பின் விளைவென்றே கருதுகிறேன். 


தலைப்புக்கு வெளியே கட்டுரையாளர் ஆங்காங்கே பயணம் போனாலும் "எல்லாம் எதுக்கு நம்ம தலைவருக்காகத்தான" என்கிற பரிந்துணர்வு நூலாசிரியரின் மீது வராமலில்லை. 


நூலின் இறுதிப் பகுதியில் ரஜினியின் அரசியல் தத்தளிப்புகள் குறித்து நேர்மையான அலசலும் இடம் பெற்றிருக்கின்றன.


ரஜினி ஏன் இந்த மண்ணுக்கானவர் அல்ல! 


ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்? 


என்கிற இரு தலைப்பில் அமைந்த கட்டுரைகளின் அவதானிப்புகள் முக்கியமானவை. 


நூலின் தலைப்பும் அட்டைப்படமும் புத்தகக் கண்காட்சிக்காக  அவசரமாக சிசேரியன் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. 


எம்.ஜி.ஆர் குறித்து எம்.எஸ் பாண்டியன் எழுதி, பூ. கோ. சரவணன் மொழிபெயர்த்த “பிம்பைச் சிறை” என்னும் நூலுக்கு இணையாக வர வேண்டிய வாய்ப்புகள் இருந்தும் அபிலாஷ் அதன் எல்லைகளை சுருக்கிக் கொண்டார் என்கிற வருத்தம் இருக்கிறது. பரவாயில்லை.  


தலைவரின் அரசியல் திட்டங்கள் , அறிக்கைகள் அது இது என சில ஆண்டுகளாக குகை மனிதன் போல வாழ்ந்து வந்த என்போன்ற ரசிகர்கள் மொட்டை மாடியில் நின்று உரக்க வாசிக்க வேண்டிய நூல் இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...