முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கே.வி ஆனந்த் - மிகை வண்ணங்களின் காதலன்





கே.வி ஆனந்த் சற்று மிகைப்படுத்தப்பட்ட ஆனால் அழகான துலக்கமான சித்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் - அவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் கூட துண்டுத் துண்டு சித்திரங்களாகவே என் மனத்தில் பதிந்துள்ளன. அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் கூட அப்படித்தான். அதுவும் பாடல்களில் வரும் மொண்டாஜ் பாணி அவ்வளவு அழகாக இருக்கும்.


 பி.ஸி ஶ்ரீரம் மிக மென்மையான ஒளியில் சன்னமான வண்னங்களுடன், ஒளி-நிழல் பின்னல்களுடன் காட்சிகளை உருவாக்க விரும்பினார் என்றால், அந்த காட்சிகள் கதையமைப்புடன் பொருந்தி படத்தின் செய்தியை உள்மனத்துக்கு உணர்த்த வேண்டும் என நினைத்தார் என்றால், அவருடைய சீடரான கே.வி ஆனந்த் ஒரு மீ-எதார்த்த கனவுலக பாணி ஒளியமைப்பை கொண்டு வந்தார். 96இல் என் பதின்வயதில்காதல் தேசம்வந்த போதுஎப்படி இப்படியெல்லாம் எடுக்கிறார்கள்?” என பார்த்து பார்த்து ஏங்கியது நினைவுள்ளது. “என்னைக் காணவில்லையே நேற்றோடுபாடலில் அந்த நீல நீர் அப்படி கனவில் காண்பது போல - எட்டித் தொடலாம் - என்பது போல இருக்கும். ஆனால் இதே மாதிரி நீல வண்ணம் கலக்கப்பட்ட கடல்நீர் குட்டையைஒரு தெய்வம் தந்த பூவேபாடலில் ரவி கே. சந்திரன்-மணிரத்னம் கூட்டணி அவ்வளவு கவித்துவமாக பாடலின் கருவுக்கு பொருத்தமாக அமைத்திருப்பார்கள். இந்த வித்தியாசம், கதையை மீறி நிற்கும் துடுக்குத்தனம் தான் கே.வி ஆனந்தின் தனித்துவம். இதுதான் அவர் தமிழ் சினிமாவுக்கு அளித்த கொடை - pop art என சொல்கிறோமே, அல்லது anime, அனிமேஷன் படங்களில் வருகிற பாணியிலான ஒரு வண்ணத் தேர்வை அவர் எதார்த்த சினிமாவுக்கு, வணிக தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார். அதை அவ்வளவு சிலாக்கியமாக செய்தார்


சில திருமணங்கள் ஒரே கலவரமாக, கச்சாமுச்சாவென நடந்து முடியும், ஆனால் புகைப்படக் கலைஞர் அதனுள் அழகான கவித்துவமான தருணங்களை கண்டடைந்து ஆல்பமாக்கி அளிக்கும் போது அதைப் பார்க்கும் கணவன், மனைவிக்கு ஒரு நொடி இது நாம் அல்லவென்று லஜ்ஜையாகவும், அட நாம் தானா என பெருமையாகவும் இருக்கும். கே.வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்த குப்பை படங்களைக் கூட அப்படி உருமாற்றினார் என நினைக்கிறேன். அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த ப்ரியதர்ஷனின்தேன்மாவின் கொம்பத்துபாருங்கள் - காட்சிகள் ஏதோ காமிக்ஸ் கதையில் நிகழ்வன போலத் தோன்றும்; பளிச்சென்று, சட்டகத்தில் பாத்திரங்கள் இருந்து எழுந்து நம்மை நோக்கி வருவதைப் போல, இது நம் தேசத்திலே நடக்கிற கதை அல்ல என்பது போல. “காதல் தேசம்பார்த்து விட்டு நகரங்களில் இளம் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல, ஒரு ஏழைப்பையனின் மொட்டை மாடி அறை இவ்வளவு ஸ்டைலாக இருக்கும் போல என நான் என் கிராமத்து வீட்டில் இருந்து யோசித்து ஏமாந்திருக்கிறேன். அந்த பூக்கள் இரைந்து கிடக்கும் சாலையில் இளம்பெண்களின் கால்கள் மிதித்து அழகாக நசுக்கி வரும் காட்சி இருக்கிறதே! இன்னொரு பக்கம் இந்த வகையான கற்பனாவாதம் - தபு சங்கரை நூறாயிரம் மடங்கு பெருக்கி உருவாக்கப்பட்ட மிகை அழகியல் - பெண்களைப் பற்றி ஒரு தவறான சித்திரத்தை அந்த காலத்தில் எனக்கு ஏற்படுத்தியது.


இந்த கற்பனாவாத ஒளியமைப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆண்-பெண் உறவு குறித்து ஒரு அவநம்பிக்கையான எண்ணமே கே.வி ஆனந்துக்கு இருந்ததென கருதுகிறேன்: அவர் எழுதியகாதல் படிக்கட்டுகள்தொடர் என்று தான் நினைக்கிறேன்; அதில் தன் நண்பனின் காதலி ஒரு இரவு விருந்தின் போது அவள் போதையாகி விட்டு தன்னிடம் பாலியல் விருப்பம் தெரிவித்ததாக எழுதியிருப்பார். மானுடக் காதல் எல்லாம் அந்தந்த சூழலுடன் முடிந்து போவது தான் எனும் தொனி அதில் இருக்கும்.

 அவருடைய பெரும்பாலான படங்களில் எந்த இளம் பெண்ணுமே தேவதையாக இருக்க மாட்டாள். எதிர்மறையான ஒரு சந்தர்பத்தில் இருந்து, தவறான பின்னணியில் இருந்து தோன்றுவார்கள். ஒரு துரோகியான நண்பனின் தங்கை (“அயன்”), துரோகியின் தோழி (“மாற்றான்”) எனசூழ்நிலை மாறினால் சட்டென காதலனை தவறாக புரிந்து கொண்டு வெறுத்தொதுக்குவார்கள் (“அயன்”). காதலன்களும் அப்படியே - தான் உண்மையில் யாரென்பதை, ஏன் வில்லனுக்கு உதவுகிறான் என்பதை காதலிக்கு சொல்லாமல் ஏமாற்றுவார்கள் (“கோ”) அல்லது ஒரு படப்பிடிப்பின் போது சகநடிகையை காதலி பார்த்திருக்கும் போதே அணைந்து உளம் மயங்குவார்கள் (“கவண்”). 


ஒரு இயக்குநராக அவருடைய முதல் படம் (“கனா கண்டேன்”) வியப்பையும் நம்பிக்கையையும் தந்தது; ஆனால் அதன் பிறகு அவர் முழுமசாலா படங்களில் இறங்கி விட்டார். இதிலும் ஒரு சுவாரஸ்யம் அவர் சங்கரைப் போன்றே சிந்தித்தார் என்பது; அவர் இறுதி வரை மனதளவில் சங்கரின்மாற்றான்தான். ஒரு நடக்க வாய்ப்பில்லாத ஒற்றை வரியை (what if?) எடுத்துக் கொண்டு அதை ஒரு எதார்த்த சூழலில் பொருத்தி விடுவார். கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை ஒருவர் கண்டுபிடித்தால், அதை சாத்தியமாக்குவதில் அவருக்கு பல சவால்கள், தடைகள் வந்தால்? (“கனா கண்டேன்”) [Catch Me If You Can பாணியில்] ஒரு கடத்தல்காரன் கஸ்டம்ஸுடன் சேர்ந்து கடத்தல்காரர்களை ஒழிக்க நினைத்தால்? அரசியல் சூழலை மாற்றும் நோக்கில் தேர்தலில் ஈடுபட்டு வென்று ஆட்சி அமைக்கும் இளைஞர்களின் தலைவன் ஒரு துரோகி, தன் அதிகாரத்துக்காக யாரையும் ஏமாற்ற, ஒழிக்க தயங்காத ஒரு மனிதாபிமானமற்ற வில்லன் என பின்னர் நாயகனுக்கு தெரிய வந்தால்? (“கோ”) தான் ஒட்டிப்பிறந்த இரட்டையனாக தன் தந்தையின் பேராசையே காரணம் என ஒருவனுக்குத் தெரிய வந்தால்? (“மாற்றான்”) இப்படி அவருடைய ஒவ்வொரு படத்தையும் what if கேள்வியாக நாம் வகுத்திட முடியும். இந்தஒருவேளை இப்படி நடந்தால்?” கருத்துருவை அவரால் எதார்த்தமாக நிறுவி நியாயப்படுத்த முடிந்தால் அப்படம் சிறப்பாக அமைந்து விடும். “அயனைப்போல. சில படங்களில் அது நம்பும்படியாக இருக்காது. அவை படுத்து விடும். ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு சிறிய வியப்பில்லாமல் அவருடைய ஒளிப்பதிவாக்கிய காட்சிகளையோ இயக்கிய படங்களையோ நாம் பார்க்க முடியாது - ஒருவேளை அப்படித்தான் அவர் தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என விரும்பி இருக்கலாம்


போய் வாருங்கள் கே.வி ஆனந்த் - நீங்கள் விடைபெறும் போது என் பதின் காலமும் கூடவே விடைபெறுவதாகத் தோன்றுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.