டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறார்கள்:
India's XI for the WTC final
Virat Kohli (capt), Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Rishabh Pant (wk), Hanuma Vihari/Ravindra Jadeja, R Ashwin, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah
எனக்கு இந்த அணித் தேர்வுடன் உடன்பாடில்லை. முதற்காரணம் மட்டையாட்டத்தை வலுவாக்கும் நோக்குடன் 8வது எண் வரை ஆல்ரவுண்டர்களை சேர்ப்பதற்காக இரண்டு சுழலர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் சுழல் அந்தளவுக்கு எடுபடாது. கூடவே மழை வேறு பெய்யும் என்கிறார்கள். ஆட்டம் இறுதி நாளுக்கு சென்றால், அப்போது பந்து வீசும் அணி ஒரு நல்ல இலக்கை நிர்மாணித்திருந்தால் மட்டுமே சுழலர்களால் ஆட்டத்துக்குள் வர முடியும். முதல் இன்னிங்ஸில் அவர்களால் தடுப்பாட்ட முறையிலே வீச முடியும். அப்போது விக்கெட் எடுக்க எனில் நீங்கள் 80-90 ஓவர்களில் 60-70 ஓவர்களை மூன்று வேக வீச்சாளர்கள் வீச வேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறீர்கள். இது ஒரு தற்காப்பு மனநிலைக்கு அணியை டாஸ் போடும் முன்னரே தள்ளி விடுகிறது. கோலியின் பேட்டியிலும் அவர் எதிர்மறையாகவே அதிகமும் பேசி இருக்கிறார். தோல்வி பயம் அவர் சொற்களில் எட்டிப் பார்க்கிறது. “இந்த ஒரு போட்டியை வைத்து எங்களை யாரும் மதிப்பிடப் போவதில்லை. நாங்கள் இதுவரை ஒரு டெஸ்ட் அணியாக எப்படி ஆடியுள்ளோம் என்பதே முக்கியம்” என்கிறார். ஒரு வீரன் போருக்குப் போகுமுன்னரே தனக்கான பாடையை தயார் செய்வது போன்றது இது.
அடுத்து, வேகவீச்சாளர்களின் தேர்வைப் பார்ப்போம்:
இஷாந்துக்கு இங்கிலாந்தில் வீசிய அனுபவம் உண்டு. கவுண்டி கிரிக்கெட் வேறு ஆடியிருக்கிறார். அவர் இப்போது முழுநீளத்தில், கட்டுப்பாட்டுடன் வீசுவதால் அவருடைய பந்து பெரும்பாலும் வீச்சு எடுபடும்.
ஆனால் பும்ரா அண்மையில் நல்ல ஆட்டநிலையில் இல்லை. ஆகையால் அவர் மீது அதிக அழுத்தம் போடாமல் விக்கெட் எடுக்கும் ஒரு நான்காவது வேக வீச்சாளர் தேவை.
ஷாமி அண்மையில் மோசமான உடற்தகுதியுடன் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடரிலும், ஐ.பி.எல்லிலும் அதைக் கண்டோம். திடீரென இப்போது அவர் 100% உடற்தகுதி பெற வாய்ப்பே இல்லை. அவர் ஒரு சிறந்த சீம் பவுலர் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களுக்கு மேல் அவர் முழுவேகத்தில் வீசினால், பாதி ஆட்டத்திலே காயமடைய 90% வாய்ப்புண்டு. பிறகு இரண்டு வேக வீச்சாளர்களை மட்டும் வைத்து அம்மானமாட வேண்டும். இன்னிங்க்ஸுக்கு ஐம்பது ஓவர்களை அஷ்வினும் ஜடேஜாவும் வீசும் நிலைமை வரும். ஷாமியை எடுத்திருப்பது ஒரு பெரிய ரிஸ்க்.
ஷாமியின் இடத்தில் முகமது சிராஜை எடுத்திருக்க வேண்டும். அதே போல ஜடேஜாவின் இடத்தில் தாகூரையும் ஆல் ரவுண்டராக கொண்டு வந்திருக்கலாம். அப்போது எட்டாவது எண் வரை ஆட ஆள் இருப்பார். அல்லது ஜடேஜா மீது நம்பிக்கை அதிகமெனில் அஷ்வின் இடத்திலும் அவரை எடுக்கலாம். ஆனால் அஷ்வினே மேலான வீச்சாளர் என நான் நம்புகிறேன்.
பும்ரா, இஷாந்த், சிராஜ், தாகூர், அஷ்வின் எனும் பந்து வீச்சு வரிசை சுலபத்தில் 80-90 ஓவர்களை பகிர்வதாகவும், ஒருவேளை மழை பெய்தால் அந்த சீதோஷ்ண நிலையை சரியாக பயன்படுத்தும் திறன் படைத்ததாகவும், ஆல்ரவுண்டர் திறன் கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக இந்திய டெஸ்ட் மட்டையாளர்கள் முதல் டெஸ்டில் சொதப்புவார்கள். இந்த போட்டியில் அந்த போக்கு மாறினால் சிறப்பாக இருக்கும்.
கோலி தலைமையிலான அணி தன் முதல் சர்வதேச கோப்பையை வெல்லட்டும். இனி வேறு வழியில்லை, ஆதரிப்போம், நம்புவோம்!

Comments