Skip to main content

“சத்யா” - ஒரு படம், பல உருவல்கள்







நேற்று அஜயன் பாலாவின் பதிவால் தூண்டப்பட்ட ராம்கோபால் வர்மாவின் சத்யா (1998) படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்தேன். அப்போது தான் ஒன்று புரிந்தது - தமிழில் மணிரத்னமும் பாலாவும் இப்படத்தில் இருந்து நிறைய காட்சிகளை உருவி இருக்கிறார்கள். குறிப்பாக சொல்வதானால், “ஆயுத எழுத்தில்” வரும் அரசியல்வாதியான செல்வநாயகம் (பாரதி ராஜா) இப்படத்தின் வில்லனான தாக்கூர் தாஸ் பாவின் மறு உருவாக்கம் தான். பிக்கு மாத்ரேயின் (மனோஜ் பாஜ்பாய்) இன்னொரு வடிவம் தான் இன்ப சேகர் (மாதவன்). பிக்கு  மாத்ரேயின் அந்த உணர்ச்சிகரமான, உலகமே தன்னாலானது என நம்பும் இயல்பு, எதையும் உதைத்துத் தள்ளி முன்னேறும் ஆசையின் தான் இன்ப சேகரின் செலுத்துவிசை. அவனை தன் போக்குக்கு இழுத்து சென்று பயன்படுத்தி, தேர்தலில் வென்று விட்டு, இறுதியில் இறுதி விடும் அரசியல்வாதியே இரு படங்களில் வரும் வில்லன்கள். ஒரே வித்தியாசம் “சத்யாவில்” வில்லன் கொல்லப்படுகிறான், “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் நாயகன் இணக்கிப் போகிறான். அதே போல, “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் சமரசம் செய்யும் நாயகன் இறுதியில் சிறை செல்கிறான், வில்லன் ஜெயித்து சட்டமன்றத்துக்கு செல்கிறான்.


பிக்கு மாத்ரே தன் மனைவியுடன் ஓட்டலுக்கு சென்று ஆர்ப்பாட்டமாக பேசிக்கொண்டு சாப்பிடும் அந்த காட்சியை அப்படியே சற்று மாற்றி “ஆயுத எழுத்தில்” மணி பயன்படுத்தி இருக்கிறார். பிக்குவுக்கும் அவன் மனைவிக்குமான அந்த முரட்டுத்தனமான காதலும் இன்னும் விரிவாக கவித்துவமாக “ஆயுத எழுத்தில்” மாதவன்-மீரா ஜாஸ்மின் உறவாகிறது.


பிக்கு மாத்ரேவுக்கும் சத்யாவுக்குமான (சக்கரவர்த்தி) உறவு சிறைச்சாலையில் ஆரம்பிக்கிறது. ஒரு துளி கருணை அதன் துவக்கப் புள்ளி. சத்யாவை முதன்முதலாக எந்த கேள்வியுமின்றி அரவணைத்து ஏற்கும் முதல் நபர் பிக்கு தான்; அவன் அவனை முழுமையான விசுவாசத்துடன் நண்பனுக்கும் மேலான ஒரு உறவாக கருதுகிறான். ஒரு சின்ன மோதலில் ஆரம்பித்து உணர்ச்சிகரமான ஒரு bromanceஆக இருவரின் நட்பும் பரிணமிக்கிறது. இறுதியில் தன் நண்பனை துரோகத்தினால் கொன்ற வில்லனை சத்யா கொன்று பழிவாங்குகிறான். சத்யாவின் பாத்திரம் ஊரோடு ஒத்துப்போகத் தெரியாத, உணர்ச்சிகளை காட்டத் தெரியாத, உள்ளொடுங்கிய அனாதையுடையது. இதில் தன்னை ஒருவன் மிருகமாக கருதுகிற ஒரு இழையை சேர்த்து விட்டால் “பிதா மகனின்” சித்தன் (விக்ரம்) வந்து விடுவான் (இதை BOFTA பேட்டியில் பாலாவே ஒத்துக் கொள்கிறார்.). சக்தியும் சித்தனும் சிறைச்சாலையில் நட்பாகிற இடங்கள் பாலாவின் பார்வையில் உருமாற்றம் பெற்றிருந்தாலும் படைப்பூக்கத்தை இங்கிருந்தே பெற்றிருக்கிறார். வில்லனை வெறியுடன் கொல்லும் காட்சியை நிச்சயமாக சுட்டிருக்கிறார். சத்யா வில்லனைக் குத்திவிட்டு அவன் உயிர்த்துடிப்பு போகும் வரை தன்னுடன் இறுக்கிப் பிடித்தபடி நிற்பான். சித்தனோ தொண்டைக் குழியை அப்படி ஆர்வமாக பார்த்தபடி ரசனையாக வேட்டையாடிக் கொல்வான். இரண்டிலும் பழிவாங்கும் வெறியின் தடையற்ற உன்மத்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 


அதே போல “சேது” படத்தில் இறுதிக்காட்சியானது “சத்யாவில்” இருந்து சிறிது மாற்றப்பட்டு உருவானதே - “சத்யாவின்” அந்த பிரசித்தமான கிளாசிக்கான காட்சியில் சத்யாவின் காதலி அவனை கைவிட்டு விடுவாள். அவன் அவள் அறைக்கு வெளியே நின்று கதவைத் தட்டி மன்றாடிக் கொண்டே இருப்பான். தான் ஒரு சாமான்யமானவன் என நினைத்திருந்த காதலன் உண்மையில் ஒரு மாபியா ஆள் எனத் தெரிந்ததும் நொறுங்கிப் போகும் அவள் அச்சத்தால் பீடிக்கப்படுகிறாள். சத்யாயோ தன்னை அவள் எந்த நிலைமையிலும் மறுக்க மாட்டாள் என நம்பிக் கொண்டிருக்கிறான். அவளுடைய அச்சத்தை அவன் அந்த கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் நுழையும் போது தான் முதன்முதலில் காண்கிறான். (அவன் அவளிடம் தன் தரப்பைக் கூற முயலும் போது போலிசால் சுட்டுக் கொல்லப்படுவான்.) இரு மனநிலைகளின் இந்த நாடகீயமான மோதல் இந்த காட்சியில் சிறப்பாக வந்திருக்கும் - காதலின் பரிபூரண ஏற்பு கூட சந்தர்ப்பவசத்தால் தற்காலிகமாக உருவாவதே என இயக்குநர் காட்டி இருப்பார். யோசித்துப் பார்த்தால் “சேதுவின்” கிளைமேக்ஸும் அதன் கதைக்கருவும் இது தான். இந்த காட்சியையும் ஜெயகாந்தனின் சிறுகதையையும் மட்டும் வைத்தே ஒரு மொத்த திரைக்கதையையும் உருவாக்கி விட்டார் பாலா.

இன்னொரு படத்தின் கிளைமேக்ஸும் நினைவு வந்தது -  அது சசிகுமாரின் “சுப்பிரமணியம்புரம்”.


“சத்யா” எக்கதைகளை நினைவுபடுத்துகிறது என்றும் யோசித்துப் பார்த்தேன். உடனடியாகத் தோன்றியவை மகாபாரத கர்ணன்-துரியோதனன் உறவு. அதில் இருந்து பாண்டவர்களை அகற்றி விட்டு முழுக்க தீமையால் ஆளப்படும் உலகை கற்பனை செய்தால் அதுவே “சத்யாவின்” மும்பை நிழலுலகம். அடுத்து “காட்பாதர்”.

Comments

Ram said…
அபிலாஷ், இயக்குனர்கள் சுடுவதில் தவறில்லை.... ஆனால் நாம் அதை அறிந்து கொள்ள இவ்வளவு நாள் ஆகிறது... அதுவும் ஊடகங்களும் இதை பற்றி அப்போதே கிழித்து தள்ளினால் நன்று

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...