எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு. UPSC எல்லாம் தேர்வாகி நம் ஆட்சியர்கள் என்ன கிழிக்கிறார்கள் எனத் தெரியாதா? பொதுப்பிரச்சனைகளின் போது கார்ப்பரேட்டுகள் பக்கமாக நின்று பொதுமக்களை சுடுவதற்கு ஆர்டர் போடுவது, அமைச்சர்களும் பிற அதிகார வர்க்கத்தினரும் திருட வழிவகை பண்ணிக்கொடுத்து தமக்கு வரும் கட்டிங்கைக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பல நூறு கோடிகளுக்கு பங்களாக்களாக கட்டுவது … இதைச் செய்ய எதற்கு ஒரு படிப்பு, தேர்வு மண்ணாங்கட்டி எல்லாம்? மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஒரு சிறுசொல்லாவது உதிர்ப்பார்களா? ம்ஹும். அதுக்கு தாலிபானின் படிக்காத தற்குறிகளே மேல். ஜாலியாக பொழுதுபோக்கு அரங்குகளில் சின்னக்குழந்தைகளின் விளையாட்டுக்கார்களை ஓட்டிப் பார்த்து விட்டு ஏக்கத்துடன் அதை இரவோடு இரவாக எரித்து விடுகிறார்கள். நம்முடைய ஆட்சியர்கள் என்றால் அந்த அரங்குகளைச் சுற்றி பெரிய மதில்கள் எழுப்பி சில பல பங்களாக்கள் கட்டி நாம் சொந்தமாக்கி விடலாம் ஐயா என அமைச்சரக்ளுக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள்.
எனக்கு தாலிபான்களின் பல செயல்பாடுகள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் இந்த பப்புகள், வெகுஜன சினிமா, சீரியல்கள் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அந்த இடத்தில் பொதுவிவாத அரங்குகள், தரமான படங்களை மட்டும் திரையிடும் தியேட்டர்கள், பாரம்பரிய இசைவடிவங்கள், நடனங்களைக் கொண்டு வரலாம். மால்கள், பிரம்மாண்ட கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மெண்டுகளின் இடத்தில் மக்கள் விளையாடுவதற்கான இடங்களை அமைக்கலாம். குடி, சிகரெட், போதை மருந்துகளை முழுக்க ஒழிக்கலாம்.
நவீன உலகில் நாம் உள்ளீடற்றவர்களாக, சந்தையால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக மாற்றப்பட்டு விட்டோம். ரொம்பவே நவீனப்படுவது ஆண்-பெண் உறவை அவநம்பிக்கையும் ஸ்திரமின்மையும் மிக்கதாக மாற்றுகிறது. அடுத்த முப்பதாண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் அம்மா மட்டுமே இருப்பாள். எங்கு பார்த்தாலும் உடைந்த குடும்பங்களே தெரியும். குற்றங்கள் மலியும். இதற்கு முக்கியமான காரணம் இன்றுள்ள நுகர்வுக்கலாச்சாரம், அதற்காக நாம் சதா நேரமும் வேலை பார்ப்பது, அதில் சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க ஏதாவது ஒரு இன்பத்தைத் தேடி அலைவது, எதிலும் திருப்தியுறாமல் தீராப்பசியுடன் இரவெல்லாம் விழித்திருப்பது, எப்போதும் உடல் குறித்த அச்சம், பதற்றம், இதை ஈடுகட்ட ஊடகங்களின் நமக்கு ஊட்டும் போதை மருந்துகள், மிகை உணர்ச்சிகள்… போதும் போதும்.
நான் தாலிபான்களை, அவர்களுடைய ஒழுக்கவாதத்தை, பெண் எதிர்ப்பை ஆதரிக்கவில்லை, ஆனால் அவர்களிடம் இருந்து சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் - பொழுதுபோக்கு, நுகர்வுப் பண்பாட்டு விசயத்தில் மட்டும்.
