முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாராவின் காதலர்கள்




மனுஷ்ய புத்திரனின் நீள்கவிதைகளில் சில நேரம் அவற்றின் குறுகின எல்லைக்குள் மூச்சுத்திணறுவதை கண்டிருக்கிறேன் - கொட்டுகிற மழையில் கிடந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையை பலவந்தமாக கையைப் பற்றி அழ அழ வீட்டுக்கு இழுத்து சென்று முத்தாய்ப்பாக சில வரிகளை எழுதி முடித்து வைப்பார். அந்த நிர்பந்தங்களை கவிதை எனும் வடிவம் அவர் மீது சுமத்துவதைப் போல கவிதை நாவல் வடிவம் செய்வதில்லை. ஆனால் பிஞ்ச் செயலியில் வெளிவரும் “தாராவின் காதலர்கள்” தொடரில் அவர் முழுமையான சுதந்திரத்துடன் இரவு பகலாய் ஒரே விலங்கைப் பின் தொடரும் வேட்டைக்காரனைப் போல கவிதையின் கடைசி சொட்டு விழுந்து அது கையில் தன்னை ஒப்படைக்கும் வரை துரத்துகிறார். எந்த வடிவ பிரக்ஞை, கவலைகளும் இல்லாமல், முழுக்க ஒரு பரிசோதனைக் களமாக இத்தொடரை மாற்றுகிறார். 

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரஞ்சு இலக்கியத்தில் ஒரு பெரும் உடலெழுத்து மரபு தோன்றியது - ஹெலன் சிக்ஸு (Inside), ஜெனெ (The Thief’s Journal, Our Lady of the Flowers) போன்றவர்கள் உடனடியாக நினைவுக்கு வருகிறவர்கள். இவர்கள் புனைவு மொழியில் எந்த கதை கூறும் பாசாங்கும் இல்லாமல் இந்த உடலும், மனமும் உணர்வுகளின் தடாகத்தில் தொடர்ந்து தோன்றி மறையும் அலைகளாக எப்படி இருக்கின்றன என சித்தரிக்க முயன்றார்கள். தமிழில் உள்ள வலுவான எதார்த்தவாத மரபு காரணமாக அத்தகைய புனைவுகள் இங்கு சாத்தியப்படவில்லை. ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் லீனா, சுகிர்தராணி, குட்டிரேவதி ஆகியோரின் கவிதைகள் ஒரு கதவைத் திறந்தாலும், அது நமது இலக்கிய உலகில் ஒரு தனிப்போக்காக தோன்றாமல், விரைவில் தானாக மூடிக் கொண்டது. ஆனால் மனுஷின் இத்தொடரை பார்க்கையில் அவர் ஒருநாள் இதே பாணியை தன் உரைநடையிலும் முயன்று பார்க்க வேண்டும், கவிதை எனும் சிறையை உடைத்துக் கொண்டு புனைவின் பக்கம் வந்து விட வேண்டும் என ஒரு வாசகனாக ஆவல் ஏற்படுகிறது. 

அத்தியாயம் 2இல் தாரா தான் நேசிக்கும் ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் வாசனை தென்படுவதாக சொல்லும் இடம் அற்புதமானது. அதாவது தாரா ஆண்கள் தன்னை ஏமாற்றுவதாக சொல்லவில்லை, மாறாக ஆணின் உடலில் மற்றொரு பெண்ணின் வாசனையை அறிந்து அதில் திளைப்பதே தனக்கு நிறைவளிக்கிறது என குறிப்புணர்த்துகிறாள். எவ்வளவு வித்தியாசமான ஆழமான அவதானிப்பு இது. எனக்கு இதைப் படிக்க அவ்வளவு படைப்பூக்கமாக இருந்தது - இதில் இருந்து உருவி எடுத்து ஒரு கதையை எழுத முடியுமே என நினைத்தேன். தினமும் என் நாவலை எழுதும் முன் இத்தொடரை படித்தால் அவ்வளவு உற்சாகம் கிடைக்கிறது.  இதை அவர் எழுதி முடித்து நூலாக வெளிவரும் போது ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்வேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.