முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சல்யூட்

 





ரோஷன் ஆண்டிரூஸின் “மும்பைப் போலீஸ்” எனக்குப் பிடிக்கும். குறிப்பாக அதன் கிளைமேக்ஸை அமைத்திருந்த விதம். ரோஷன் ஆண்டிரூஸுக்கு ஒரு புலனாய்வாளனின் பிறழ்வு, அதனால் அவன் செய்யும் குற்றம், அதனால் அவனுக்குள் நேரும் உள்போராட்டம் என்பதைப் பேச விருப்பம் அதிகம் என நினைக்கிறேன். அண்மையில் வந்துள்ள “சல்யூட்டும்” அப்படியானதே. போலீஸார் தாம் சரி என நம்பும் ஒன்றுக்காகவும், அரசியல் அழுத்தத்துக்காகவும் ஆதாரங்களை ‘விதைத்து’ ஒருவரைக் குற்றவாளி ஆக்குவதே கதைக்களம். இந்த குழுவில் ஒரு இளம் அதிகாரி, நியாய தர்மத்தை நம்புகிறவர் இருக்கிறார் (துல்கர் சல்மான்), அவருக்கும் சக போலிஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படும் மோதலே படம். கூடவே “தங்கப் பதக்கம்” பாணியில் குடும்பத்துக்கும் லட்சியத்துக்குமான உணர்ச்சி மோதலும் (அப்பா vs மகனுக்குப் பதில் தம்பி vs அண்ணன்) வருகிறது. இது கதையை சிக்கலாக்குகிறது; நல்ல டிராமாவுக்கு வழிவகுக்கிறது. உண்மை நிலைநாட்டப்படுகிறதா இல்லையா என்பதை ஒரு திரில்லர் பாணியில் பரபரப்பாக இறுதிக் காட்சி வரை கொண்டு செல்கிறார்கள். இது வெகுவாக மெச்சத்தக்கது. ஆனால் படம் இறுதியில் அதிருப்தியளிக்கிறது. இரு தவறுகள் அதற்குக் காரணம்:


  1. யார் ஹீரோ, யார் வில்லன் என்பது இது போன்ற கதைகளில் தெளிவாக இருக்க வேண்டும். நாயகனை ஒரு துன்பியல் நாயகனாகக் கட்டமைத்தால் அவன் தன் பிழைகளால் சீரழிந்து மனம் அவதிப்பட்டு குற்றவுணர்வு கொண்டு அழிவதாகவோ தண்டனை பெறுவதாகவோ அமைக்க வேண்டும். அல்லது அவன் நல்லவனாகவே இருக்க வேண்டும். இப்படத்தில் துல்கரின் பாத்திரம் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. அது நம்மை அவரிடத்து அன்பும் இரக்கமும் கொள்வதைத் தடுக்கிறது. (ஆனால் “மும்பை போலீஸில்” இப்பிரச்சனை இல்லை.) ஒருவேளை அந்த அண்ணனின் பாத்திரத்தைக் கொண்டு வராமல் விட்டிருந்தால், நாயகனே பழியை ஏற்று அதனுடன் மோதி மெல்ல மெல்ல மீண்டும் வந்து நீதியை நிலைநாட்டுவதாக கதை அதன் பாட்டுக்கு ஒரு ஒழுங்கைப் பெற்றிருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் துல்கரின் ஆல்டர் ஈகோவாக அவரது அண்ணனைப் படைத்து, அண்ணனைத் தீமையில் இருந்து காப்பற்ற முயன்று துல்கர் இறுதியில் அவரை பலிகொடுப்பதாகக் கொண்டு வந்திருக்கலாம். இந்த பாணியை மிஷ்கின் “அஞ்சாதேவில்” சரியாகக் கையாண்டிருப்பார். ரோஷன் ஆண்டிரூஸுக்கு இதை ஏன் யாரும் கதை விவாதத்தின் போது எடுத்துச் செல்லவில்லை? 
  2. ஒரு குற்றப்புலனாய்வு கதையின் முடிவில் பார்வையாளர்களுக்குத் திருப்தியளிக்கும் ஒரு விழுமியம், புரிதல் (சினிமா மொழியில் ‘மெஸேக்’) வேண்டும். இதில்லாத படம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மீண்டும் மிஷ்கினுக்கே வருகிறேன் - அவரது “யுத்தம் செய்யின்” மையம் கண்காணிப்பின் அதிகாரம் மனிதர்களிடையே எப்படி தீமையை உண்டு பண்ணுகிறது என்பதே. படம் முடியும் போது ஒவ்வொரு மனித உடலாக மீட்கப்படுகிறது. அதன் நீதியே படத்தின் விழுமியம். அகிர குரசாவோவின் Stray Dog படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஶ்ரீகணேஷின் “எட்டுத் தோட்டாக்களும்” ஒரு நல்ல உதாரணம். அமைப்பின் மீது இரு தரப்பான ஆட்கள் கோபம் கொள்ளுகிறார்கள். ஒருவர் (வில்லன்) வன்முறையாக, அபத்தமாக எதிர்வினையாற்ற மற்றொருவரோ (ஹீரோ) அமைப்பு கோரும் ஒழுக்கத்துடன் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும், பொறுமை வேண்டும் எனக் கோருகிறார் (பேட்மேன் vs ஜோக்கர் பாணியில்). இது “எட்டுத்தோட்டாக்கள்” என்றால் “ஸ்டிரே டாக்” ஒரு இருத்தலிய கோணத்தில் மனிதனின் தேர்வுகளை அலசுகிறது. எந்த முடிவும் சரியே எனும் இடத்தில் இருக்கிறவரிடம் போலீஸின் துப்பாக்கி மாட்டினால் என்னவாகும் என்பதே ஒற்றை வரி. அது எந்த துப்பாக்கியானாலும் அதே கதை தான், ஆனால் போலீஸ் என்பதால் அது துப்பறியும் கோணத்தைப் பெறுகிறது. படத்தின் முடிவில் குரசாவோ கடைசி வரை நாம் எடுக்கும் முடிவுகளை உறுதியாக நம்பி அதனை சார்ந்து போராடுவதே நம் வாழ்வுக்கு அர்த்தமளிக்கிறது என்கிறார். இது அப்படத்தை சுவாரஸ்யமாகவும் அர்த்தம் பொருந்தியதாகவும் ஆகிறது. இன்று திரில்லர் படமெடுக்கும் பலர் இந்த “அர்த்தத்தைத்” தான் தவற விடுகிறார்கள். ரோஷன் ஆண்டிரூஸும் இதே பிழையை செய்திருக்கிறார். படம் முடியும் போது பரிசு வெல்லாத லாட்டரி சீட்டை வாங்கிய உணர்வே நமக்குக் கிடைக்கிறது! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...