முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினேஷ் கார்த்திக்கும் வேறு விசயங்களும்



நேற்றைய இந்தியா-மே. தீவுகள் முதல் டி20 போட்டியைப் பார்த்த போது தோன்றியவை:


  1. அஜய் ஜடேஜா டிவி விவாதத்தில் சொன்னதைப் போல தினேஷ் கார்த்திக் இப்போது எம்.எஸ் தோனியின் பாணியை தனக்கானதாக வரித்துக் கொண்டு விட்டார். அவர் பதினாலாவது ஓவருக்கு மேல் வருகிறார் என்றால் விக்கெட்டுகள் தன்னைச் சுற்றி மளமளவென சரிகிறது என்றால், சற்றும் பதறாமல் பதினெட்டாவது ஓவர் வரை பொறுமையாக ஒற்றை, இரட்டை ரன்கள், எப்போதாவது ஒரு நான்கு என அடித்து காத்திருப்பார். ஒரு புலி தன் இரையை அடிக்க சரியான தருணத்திற்கு காத்திருப்பதைப் போல. 18 ஓவரில் பெரும்பாலான பந்து வீச்சாளர்களுக்கு ஏதோ ஒரு பயம் வந்து விடும். தினேஷ் வேறு கவருக்கு, எக்ஸ்டிரா கவருக்கு மேலும், நேராகவும், மிட்விக்கெட், லாங் ஆனிலும் சிக்ஸர்கள் அடிப்பார், ஸ்கூப் ஷாட், ரேம்ப் ஆடுவார் என்பதால் அவருக்கு எங்கு வீசுவது என்பதில் வீச்சாளர்களுக்கு குழப்பம் வரும். தம் பாட்டுக்கு நாலு மெதுபந்துகள், ஒன்றிரண்டு யார்க்கர்கள், லெங்க்த் பந்துகள் என வீச வேண்டியவர்கள் கைகால் உதற கண்ட இடத்திலும் வீச முயன்று சொதப்புவார்கள். நேற்றைய போட்டியில் மே. தீவு வீச்சாள்ரகளும் அப்படித்தான் திணறினார்கள். ஆட்டத்தின் கடைசி இரு ஓவர்களில் கார்த்திக் இந்த பயத்தை பயன்படுத்தி எதிரணியின் முதுகுத்தண்டை முறித்தார்


2) தினேஷ் கார்த்திக் பின்னர் ஆட்டநிறைவு பேட்டியில் சொன்னதைப் போல அவர் ஆடுதளத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு எந்த ஷாட் ஆடலாம், எது வேண்டும் என முடிவெடுக்கிறார். இது 10-12 பந்துகளை பொறுமையாக ஆடிய பின்னரே சாத்தியமாகிறது. அதனாலே முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டி வரும் போது அவருக்கு சற்று சிரமமாகிறது. நேற்றைய போட்டியில் முழுநீளப் பந்துகளை அடிக்கலாம் என முடிவெடுக்கிறார். பெரும்பாலும் கவருக்கு மேல், லாங்க் ஆனில் மற்றும் நேராக. அந்த மெதுவான ஆடுதளத்தில் இவை நல்ல தேர்வுகள். இதுவே சற்று வேகமாக ஆடுதளம் எனில் பின்னங்காலுக்கு சென்று இன்னும் கூடுதல் ஷாட்களை அடித்திருப்பார். ஸ்டம்புக்கு குறுக்காகவும் ஆடியிருப்பார். இந்த திட்டமிடலும், அவதானிப்பும் தினேஷ் கார்த்திக்கின் தனிச்சிறப்புகள். அதனாலே இறுதி ஓவர்களில் மற்றவர்கள் அடிக்கத் திணறும் போது அவர் மட்டும் சிறப்பான டைமிங்குடன் பந்தை தெறிக்க விடுகிறார். தோனி தான் இந்த பாணி - நில், கவனி, அடி - ஆட்டத்தின் பிதாமகர் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதனாலே கார்த்திக் தோனியின் வாரிசாகத் தோன்றி விட்டார் என நினைக்கிறேன்.


3) அதே நேரம் தோனியால் 8வது ஓவரில் வந்தும் 20 ஓவர்கள் வரை ஆடி அணியை கரைதேற்ற முடியும். கார்த்திக்கால் இதுவரை அது இயன்றதில்லை


4) இன்னொரு விசயம் கார்த்திக் பந்தின் வேகத்தை நம்பி இருப்பவர். அவருக்கு கடைசி ஓவர்களை வீசும் பொறுப்பை ஒரு நல்ல சுழலரிடம் ஒப்படைத்தால் - இடதுகை சுழலர் அல்லது கால்சுழலர் - அது சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால் அப்போது கார்த்திக் பவரை தன் உடம்பில் இருந்து உற்பத்தி பண்ண வேண்டி வரும். அவர் ஒரு திடகாத்திரமான ஆள் அல்ல. சுழலர்களுக்கு எதிராக அவரது பவுண்டரி ஷாட்கள் ஸ்லாக் ஸ்வீப் மற்றும் இறங்கி வந்து லாங் ஆனில் அடிப்பவை மட்டுமே. அதுவும் ஸ்வீப்பையும், பின்னால் சென்று டீப் பாயிண்டில் அடிக்கும் கட் ஷாட்டையுமே நம்பி இருப்பார். ஆகையால் அந்த இடங்களை கவர் செய்து விட்டால் தாராளமாக ஒரு சுழலரால் கார்த்திக்கை கட்டுப்படுத்த முடியும். தோனிக்கும் இந்த பிரச்சனை இருந்தது. எதிர்காலத்தில் எதிரணி தலைவர்கள் இந்த யுக்தியை கார்த்திக்கு எதிராக முயல்வார்கள் பாருங்களேன்!


4) நிறைய பேர் கார்த்திக்கின் 37 வயது மீள்வருகையைப் பற்றி பேசுகிறார்கள். அதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் அவர் அபிஷேக் நாயருடன் சேர்ந்து கடுமையாகப் பயிற்சி எடுத்து தன் உடற்தகுதியையும் மட்டையாட்டத் திறனையும் மேம்படுத்தியதும், டி20 போட்டிகளின் நிபுணராக தன்னை தகவமைத்ததும் முக்கிய காரணம். ஒரே ஒரு திசையில் நம் ஆற்றலை நாம் செலுத்தினால், கடுமையாக உழைத்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம்.


5) நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து அஷ்வின் அடித்த சிக்ஸர், சுணங்காமல் ஆடிய விதம் பிடித்திருந்தது. அவர் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக அணியில் நிறுவ முயல்கிறார். சஹல், ஜடேஜா, அக்ஸரின் இடங்கள் உறுதியாகி விட்ட நிலையில் இப்போது மூன்றாவது சுழலராக அவர் குல்தீப் மற்றும் பிஷ்னாயுடன் போட்டியிடுகிறார்


6) சூர்ய குமார் யாதவை நேற்று துவக்க மட்டையாளராக அனுப்பினார்கள். ஆனால் கடந்த டி20 போட்டியில் துவக்க வீரராக வந்து ரிஷப் பண்ட் அசுர ஆட்டமாடினார். எனக்கு பண்டின் சரியான இடம் அதுவே எனப் படுகிறார். அவருக்கு பந்தின் வேகம் பிடிக்கிறது. மத்திய ஓவர்களில் ஆட வரும் போது சுழலர்கள் வீசும் மெதுவாக ஆப் குச்சிக்கு வெளியே விழுந்து திரும்புகிற, வேக வீச்சாளர்கள் வைடாக வீசுகிற பந்துகளை அவரால் சுலபத்தில் அடிக்க முடிவதில்லை. ஆனால் துவக்க மட்டையாளராக அவரால் ஆட்டத்தின் போக்கை முதல் 6 ஓவர்களில் தீர்மானிக்க முடியும். தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் டி20 போட்டிகளின் சேவாகாக உருவெடுப்பார்.


7) நான் அர்ஷ்தீப் சிங்கின் பெரிய விசிறி. அவர் எனக்கு ஏனோ வசீம் அக்ரமை நினைவு படுத்துகிறார். நேற்று அகில் ஹுசைனுக்கு போட்ட அந்த உள்வரும் யார்க்கர் வசீமின் அந்த புகழ் பெற்ற யார்க்கரே. அதே போல தொடர்ந்து அவரை மட்டையாளர் இரண்டு சிக்ஸர்கள் அடித்தாலும் கவலைப்படாமல் வேறு நீளத்தையோ யுக்தியையோ முயன்று பார்ப்பார். அவரது இந்த துணிச்சலும் எனக்குப் பிடித்திருக்கிறது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.