முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று வினாடி வைத்தியர்

முதுகுவலி ஒரு விசித்திரமான பிரச்சனை. கை, காலில் காயம் ஏற்பட்டால் ஓய்வு கொடுத்து சரி செய்வதைப் போல முதுகுக்குப் பண்ண முடியாது. மோசமான காயம் என்றால் மாதக்கணக்கில் படுத்துக் கொண்டிருக்கவும் இயலாது

கை, கால் வலியைப் போல் அல்லாது முதுகு வலி கால்களுக்கும் பரவும். உங்களுடைய எல்லா வேலைகளையும் பரணில் தூக்கிப் போட வைக்கும். அதனாலே நான் முதுகுவலியை கடுமையாக அஞ்சுகிறேன். எனக்கு எல்லா தசை, எலும்பு காயங்கள் குறித்தும் பயம் அதிகம் தான், என்றாலும் முதுகுவலி தான் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். முதுகுவலி மிக லேசாக தென்பட்டாலும் நான் விடுப்பெடுத்துக் கொண்டு படுத்து ஓய்வெடுப்பேன். மருத்துவரை உடனடியாகக் காண்பேன். ஏனென்றால் சனியன் வந்தால் போகாது என அறிவேன். அதனால் அதை வாசலோடே நிறுத்தி அனுப்பி விடுவது என் வழக்கம்.


ஒரு எழுத்தாளனாக நான் என் கை, கண்ணுக்கு அடுத்தபடியாக முதுகையே மிக முக்கியமாக நினைக்கிறேன்.


முதுகுவலியின் மற்றொரு மர்ம சுபாவம் நமக்கு வேறு பிரச்சனைகள் உடம்பில் ஏற்பட்டாலும் முதுகுவலி மாறுவேஷத்தில் எங்கேயோ பதுங்கிக் கொள்ளும் என்பது. எல்லா பிரச்சனைகளும் வலிகளும் மறைந்த பின்னர்ஹலோ சார்என முதுகுவலி புதரில் இருந்து கைதூக்கிக் கொண்டு எழுந்து வரும். வந்தால் உங்களை ஓட ஓட விரட்டும்.


 இந்த வலிகளில் மனவலியும் சேரும். நான் கடும் மனச்சோர்வில் இருக்கையில், தினமும் அழுது கொண்டிருக்கையில் முதுகுவலி மிகுந்த பரிவுடன் வெளியிலேயே பொறுமையாக நின்றிருக்கும். மனம் சாந்தி அடைந்ததும் அது என்னை ஆறுதல்படுத்தும் நோக்கில் ஒரு பூங்கொத்துடன் வீட்டுக்குள் வரும். இந்த நல்லியல்பை நீங்கள் வேறு வியாதிகளிடம் காண முடியாது.


முதுகுவலிக்கான மருந்து, சிகிச்சை செலவு பிடித்தவை. வலி நிவாரணிகள் என்பதால் சிறுநீரகத்தை பழிவாங்கக் கூடியவை. ஆனால் பிரச்சனை சரியாகும் எனும் உத்தரவாதம் இல்லாதவை. உங்களுடைய ஓய்வு, உடற்தகுதி, அதிர்ஷ்டம் ஆகியனவே காப்பாற்றும். எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு தோளில் காயம் ஏற்பட்ட போது மருத்துவர் பார்த்து விட்டுசின்ன காயம் தாங்க, மூன்று மாதங்களில் சரியாகி விடும். ரொம்ப மாத்திரை எடுத்துக்க வேண்டாம்என்றார். நானும் காத்திருந்தேன், காத்திருந்தேன், காலத்தின் எல்லை வரை காத்திருந்தேன். அண்மையில் தான் அந்த வலி சரியானது. எல்லா எலும்பு, தசை பிரச்சனைகளுக்கும் இந்த சிக்கல் உண்டு - உடம்பாகத் தான் அவற்றை சரியாக்க முடியும்.


 மணவாழ்க்கை ஓராண்டு என்றால் விவாகரத்து முடிய ஐந்தாறு ஆண்டுகள் என்பதைப் போல் என் நண்பர் ஒருவருக்கு முதுகுவலியென்பது தீராத தலைவலியைப் போல கூடவே தொத்திக் கொண்டது. அவர் பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு நரம்பு / வர்ம வைத்தியரிடம் சென்றார். போனதும் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். அடுத்து அவரை ஒரு மேஜை மீது மல்லாக்க படுக்க வைத்து பெல்ட்டுகளைப் போட்டு மேஜையுடன் கட்டி விடுவார்கள். அடுத்து வைத்தியர் வருவார். சிஷ்யர்கள் என் நண்பரை இறுக்கப் பிடித்துக் கொள்ள வைத்தியர் தன் காலை மடித்து முதுகின் ஓரிடத்தில் வைத்து ஒரு அழுத்து. அவ்வளவு தான். மூன்றே நொடியில் சிகிச்சை முடிந்து விடும். எழுந்ததும் நண்பர் தன் உடல் ஒரு இறகைப் போல ஆகி விட்டதாக உணர்வார். வலியெங்கே என்றுஸ்காட்லாண்ட் யார்டானநமது தமிழக் போலிசாரே வந்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. சில நேரம் இப்படி ஊரைப் பார்க்க போன வலி திரும்பாது. சில நேரம் நண்பர் ஓவராக வேலை பார்த்து தொல்லை கொடுத்தால் அது ஏதாவது ஒரு லாரியில் ஏறி திரும்ப வந்து அவரது முதுகில் தொத்திக் கொள்ளும்


துரதிஷ்டவசமாக இந்த நரம்பு / வர்ம வைத்தியருக்கு பெங்களூருக்குள் சீடர்களோ மருத்துவமனைகளோ இல்லை. இருந்தால் அவர் இந்நேரம் கோடீஸ்வரராகி இருப்பார். எல்லா எலும்பு மருத்துவர்களும் ஊரை விட்டே ஓடியிருப்பார்கள். அல்லது இந்த நரம்பு / வர்ம வைத்தியர் நீண்ட தாடி வைத்து கார்ப்பரேட் சாமியாராகி இருந்திருந்தால் இந்நேரம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...