முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆணும் பெண்ணும் சமம், ஆனால் பெண்ணும் ஆணும் சமம் அல்ல



கல்லுமேலே நின்னுகினு

கன்னிகுறை சொன்னாக்கா

கல்லும் கிடுகிடென்னும்

கல்லில் இருக்கும்

கருநாகம் கண்ணீர்விடும்!

புத்துமேலே நின்னுகினு

பொண்ணு குறை சொன்னாக்கா

புத்தும் கிடுகிடென்னும்

புத்தில் இருக்கும்

புதர்நாகம் கண்ணீர்விடும்!


(ஒப்பாரிப் பாடல்)


தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸில் பங்கேற்ற ஒருவரைக் குறித்து கடந்த ஆண்டு ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்தது - அவர் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி ஒரு இளைஞரை வீட்டுக்கு அழைத்து வந்து அங்கு அவரை பலவந்தப்படுத்தியதுடன், அவரை வெளியேற அனுமதிக்காமல் நிர்வாணப்படுத்தி வீட்டுக்குள்ளே பூட்டி வைத்ததாகவும், மிகவும் கெஞ்சிய பிறகே நீண்ட நேரத்திற்குப் பின்னர் விட்டிருக்கிறார் என்று. இந்த குற்றத்தை வெளியே சொன்னால் தான் ஒரு ஹோமோ என அம்பலப்படுவோம் என்றெண்ணி அந்த பாதிக்கப்பட்டவர் போலிஸில் புகார் அளிக்கவில்லை, சமூகவலைதளம் ஒன்றில் மட்டும் வெளிப்படுத்தினார். மேலும் தன்னை பலாத்காரம் பண்ணினவரின் போலீஸ், அரசியல் தொடர்புகள் குறித்து அவருக்கு அச்சம் இருந்ததால் அவர் தன் அடையாளத்தையும் வெளிப்படுத்தவோ தொடர்ந்து முயலவோ இல்லை. ஆனால் இந்த புகார் ஒரு சில இணையதளங்களைத் தவிர வேறெங்கும் கவனம் பெறவில்லை. சம்மந்தப்பட்ட அந்த நபரும் பதிலளிக்கவில்லை. ஆனால் இதே ஷோவில் முன்பு பங்கேற்ற டேனி மீது அவர் ஒரு இளம்பெண்ணுக்கு சாட் மூலம் தொந்தரவு கொடுத்தார் என்று புகார் வந்த போது அது எவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனப் பார்த்தோம். டேனி இதற்குப் பதிலாக வக்கீல் நோட்டீஸ் ஒன்றை வெளியிட நேர்ந்தது. இதற்கு முன்பு மீ டூவின் போது ட்வீட் செய்யப்பட்ட பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு மைலேஜ் பெற்றன, நாடே அவற்றைப் பற்றி பேசின எனப் பார்த்தோம். இத்தனைக்கும் அவற்றில் பெண்கள் நேரடியாக பலாத்காரம் பண்ணப்படவில்லை; ஒன்று சீண்டல் அல்லது பாலுறவுக்கான நெருக்கடி அளிப்பது, சில இடங்களில் ஆசை காட்டி பயன்படுத்திக் கொள்வது என்றே குற்றங்கள் இருந்தன. ஒரு பெண்ணைத் தவறாகத் உரசுவது கூட மிகப்பெரும் குற்றமாகக் கருதப்பட்டு ஊடகங்களில் பேசப்படுவதையும் கண்டிக்கப்படுவதையும் கண்டிருக்கிறொம், ஆனால் ஒருவரை பலாத்காரம் பண்ணி வீட்டுக்குள் நிர்வாணப்படுத்தி நீண்டகாலம் பூட்டி வைத்திருப்பது ஒரு பொருட்டாகவே நம் சமூகத்துக்கு இல்லை. ஏனெறால் பாதிக்கப்பட்டவர் ஒரு ஆண்

இன்னொரு விசயம் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைப்பது போக அவர் இதை எங்கு சொன்னாலும் கேலி பண்ணப்படுவதே உறுதி. பலாத்காரம் பண்ணினவரையும், பாதிக்கப்பட்டவரையும் நம் சமூகம் வேடிக்கைப் பொருட்களாகப் பார்த்து சிரிக்குமே அன்றி பொருட்படுத்தாது. காவல் நிலையம் போனாலும் அதுவே நடக்கும். நம் சமூகம் எந்தளவுக்கு பிற்போக்காக, சுரணையற்றதாக உள்ளது பாருங்கள்! ஆனால் கிடைக்கும் கேப்பிலெல்லாம் அறம் முறம் என்றெல்லாம் ஜல்லியடிக்கத் தவற மாட்டோம்.


பலாத்காரம் மட்டுமல்ல ஆண்கள் கொலை செய்யப்படுவது, தற்கொலை பண்ணிக் கொள்வதையும் இச்சமூகம் கண்டுகொள்வதில்லை. தினசரியைப் பாருங்கள் - தினமும் ஒன்றிரண்டு ஆண் தற்கொலை செய்திகளாவது படுகின்றன. நான் கவனித்தவரையில் பெண்களை விட அதிகமாக ஆண்களே தற்கொலை பண்ணிக்கொள்கிறார்கள். பெண்கள் சாகும் போது அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கி போராடுகிறார்கள் குடும்பத்தினர். போலிசும் உடனே கைது பண்ணுகிறது. ஆனால் இந்த ஆண்கள் தற்கொலை பண்ணும் போது ஒரு அடிமைக் கப்பலில் உள்ள ஒரு அடிமை செத்ததைப் போல வீசிவிட்டுக் கடப்பதைப் போல அதைக் கையாள்கிறார்கள் குடும்பமும் போலிசாரும் நீதியமைப்பும். சில பத்தாண்டுகளாகவே ஒரு மீடியா பிரபலம் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்து, குடும்பங்களை உடைத்து வந்தார்; அண்மையில் அவரிடம் சிக்கி சின்னாபின்னமான ஒரு இளைஞன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை பண்ணினார். அதை ஒரு செய்தியாக வெளியிட்டு ஒரு புலனாய்வு இதழ் முக்கியத்துவப்படுத்தினாலும் நம் சமூகம் வழக்கம் போல அதைப் பொருட்படுத்தவில்லை. இதுவரை அப்பெண் கைதாகவில்லை. கவிஞர் தாமரையைத் தவிர வேறு எவரும் இச்செய்தியை பொருட்படுத்திப் பேசவில்லை. இதுவே தற்கொலை பண்ணினது அப்பெண்ணாக இருந்திருந்தால் அடுத்த நாளே அந்த இளைஞன் சிறை சென்றிருப்பான். இதனால் தான் சொல்கிறேன் நம் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஆணும் பெண்ணும் சமம், ஆனால் பெண்ணுக்கு ஆண் சமம் அல்ல. ஏனென்றால் ஆணிடம்கருப்பைஇல்லை. கருப்பையைத் தாண்டி யோசிக்கவே முடியாது ஒரு காட்டுமிராண்டி சமுகமாக இந்த நம் சமூகம் இருக்கிறது.


 ஒரு குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என விருப்பம் காட்டும் நம் குடும்பங்கள் அக்குழந்தையின் பாலியல் வளர்ச்சியில், பாதுகாப்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. பெண் பூப்பெய்துவதைக் கொண்டாடும் ஒரு சமூகம் ஆண் வயதுக்கு வரும் போது அதை ஒரு பொருட்டாக கருதுவதுண்டா? இச்சமூகத்துக்கு ஆண் என்பவன் இவர்களுக்கு ஒரு அடிமைத்தேனீ மட்டுமே; அவன் தன் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டே, அபாயங்களை சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவனை முக்கியமானவனாக ஒரு பாவனை பண்ணிக்கொண்டே சமூகம் அவனை பயன்படுத்தி தூக்கி வீசுவதே எப்போதும் நடக்கிறது. காவல்துறையிலும் ராணுவத்திலும் வன்முறையில் ஈடுபட வேண்டியவன், கடுமையான ஆபத்தான தொழில்களில் இறங்கி வேலை செய்ய வேண்டியவன் ஆண் தான். சாக்கடையை சுத்தம் பண்ண இறங்கி சாகிறவன் ஆண் தான். ஆணவக் கொலைகளில் பெரும்பாலும் பலியாகிறவனும் ஆண் தான். பெண் எல்லா பாதுகாப்பான பணிகளில் இருத்தப்பட்டு பாதுகாக்கப்படுபவள். ஒரு ஆண் செத்தால் அவனிடத்தில் இன்னொரு ஆண் வந்துவிடுவான், ஆனால் ஒரு பெண்ணோ ஈடுசெய்ய முடியாதவள் எனும் எண்ணம் நம் சமூகத்தின் கூட்டுமனத்தில் இருக்கிறது, நம் குடும்பங்களுக்குள் இருக்கிறது, அதனாலே ஒரு ஆண் இறந்தால் ரெண்டு மூன்று நாட்களுக்கு மேல் அவன் சுவரொட்டியாக மட்டுமே எஞ்சுகிறான். தாய் தந்தையர் கூட அவனை மறந்து நகர்ந்து விடுகிறார்கள்.


இதை ஆண்கள் புரிந்துகொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம்! மேலே உள்ள செய்தியைக் கூட பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்று நான் மாற்றி எழுதினால் அது எத்தனையோ பேரை பதற்றத்துக்குள்ளாக்கி இருக்கும். இப்போது கூட அவர்களின் கவலை நாம் கொண்டாடிய அவன் ஒரு ஹோமாவா என்பதாகவே இருக்குமே அன்றி (ஹோமோபோபியா) அது ஒரு குற்றம் என்று தோன்றாதுஎன்னவொரு பண்பாடற்ற, நுண்ணுணர்வற்ற சமூகம் இது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...