முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அநீதியைக் கண்டால் கண்ணை மூடிக்கொள்ளும் பெண்ணியத்தின் பாசாங்கு


"கடந்த 10 வருடங்களில் பெண்கள் தான் அதிகமாக குடும்ப வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சொல்கிறார், மற்றும் ஒரு சிலரின் பேஜ்ஜில் ஆண்களுக்கு நடக்கும் குடும்ப வன்முறைகள் மற்றும் பாலியல் வறட்சியில் ஆண்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
(...)
இவ்வளவு கஷ்டப்பட்டு, அவர்கள் ஆசைப்பட்ட விசயத்தை செய்யும் இடத்தினை பெற்ற பின் பெண்கள் அத்தனை எளிதாக, அதை தூக்கி ஏறிய மாட்டார்கள்.
இவற்றில் காதல், திருமணம் என்று தடைகள் வரும் போது அதை துளிக் கூட தயவு தாட்சண்யம் இன்றி தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.
இப்படி குடும்ப அமைப்பால் நம் வீட்டு முந்தைய பெண்கள் காலம் காலமாக வரதட்சணை, மாமியார், மாமானர் கொடுமை, அடுப்படியில் நின்று நாள் முழுவதும் இருப்பது சொல்லி நிறைய அனுபவித்து விட்டார்கள்.
(...)
பெண்களுக்கு செக்ஸ் தேவையா, விடுதலை தேவையா என்றால், விடுதலையை டிக் அடித்து விட்டு நகர்ந்து விடுகிறார்கள்.
இது கால மாற்றம் தான். ஆணோ/பெண்ணோ அதை ஏற்றுக் கொண்டு தான் ஆகணும். அதை விட்டு பெண்கள் யாரையும் திருமணம் செய்யல, விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள், ஆண்களால் பெண்களை கவர முடியல என்று சொல்வது வீண்."
- ஒரு தோழி
இது காலமாற்றம், பெண்கள் சுதந்திரத்தை, தற்சார்பையே விரும்புகிறார்கள் எனும் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். ஆனால் இதே படித்த தற்சார்புள்ள, திருமணமும் ஆண்களும் தேவையில்லை எனும் பெண்கள் ஏன் ஜீவனாம்சம் எனும் பெயரில் ஒரு பெரும் தொகையையும் தந்திரமாக பெற்றுக் கொள்கிறார்கள்? ஏன் குழந்தையை பார்க்க கூட அப்பாவை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்? அண்மையில் போலி குடும்ப வன்முறை வழக்கு தொடுக்கப்பட்டு, குழந்தையிடம் இருந்து மூன்றாண்டுகள் பிரிக்கப்பட்ட துயரம் தாளாமல் பய்ஜு என்பவர் கேரளாவில் ஒரு லாட்ஜில் தூக்கு மாட்டிக் கொண்டார். அதன் பிறகும் கூட அவரது உடலை அவரது குழந்தை வந்து பார்க்க கூட அவரது மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில ஆண்கள் உரிமை இயக்கம் ஒன்று தலையிட்டு போலிசிடம் கெஞ்சி அப்பெண்ணை ஒப்புக்கொள்ள வைத்தார்கள். இந்த சிறு கருணையை அவர் பத்து நாட்களுக்கு முன்பு காட்டியிருந்தால் பய்ஜு இன்று உயிருடன் இருந்திருப்பார். இது போன்ற குரூரங்கள் அனேகமாக நாடு முழுக்க அரங்கேறுகின்றன - குழந்தையைப் பறிப்பது, பார்க்க விடாமல் சித்திரவதை பண்ணுவது, பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி மிரட்டி செட்டில்மெண்ட் பண்ண வைப்பது என. கணவரை மட்டுமல்ல மாமியார், கணவனின் சகோதரிகள், அவர்களுடைய குழந்தைகள் என வகைதொகையில்லாமல் வரதட்சிணை வழக்கு போடுகிறார்கள். எட்டு மாத குழந்தை மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். அக்குழந்தைக்கு வரதட்சிணை பற்றி என்ன தெரியும்? இது ஒரு விதிவிலக்கு அல்ல. ஏராளமான பெண்கள் இன்று இதை செய்கிறார்கள். அன்புத் தோழி, உங்களுக்கு ஒரு சகோதரர் இருந்து அவருடைய மனைவி உங்கள் மீது வரட்சிணை கொடுமை வழக்கு போட்டால் நீங்கள் அப்போதும் அதை பெண் விடுதலை, முன்னேற்றம் என கொண்டாடுவீர்களா? உங்கள் அம்மா செய்யாத குற்றத்துக்காக சிறையில் கிடந்து நோயுற்று இறந்தால் அதை கொண்டாடுவீர்களா?
இது மோசமான பெண்களால் நிகழும் பிரச்சினை அல்ல - மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்களால் நிகழும் அநீதி. இதை பெண் விடுதலை என நாம் பாராட்டக் கூடாது. மாறாக, பெண்ணியவாதிகளே இதை முதலில் கண்டிக்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட அதை செய்வதில்லை. அவர்கள் இச்சட்டம் தொடர வேண்டும், நிறைய அப்பாவி ஆண்கள் மேலும் தூக்கில் தொங்க வேண்டும் என விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை.
நீங்கள் குடும்பநல நீதிமன்றத்துக்கு வந்து பாருங்கள் - பெண்கள் தொடுக்கும் 98% வழக்குகளில் இப்படி ஆண்களை அலையவிட்டு மிரட்டி செட்டில்மெண்ட் வாங்கி விடுகிறார்கள். இதில் ஒரு பகுதி பெண்களுக்கு வேலையோ படிப்போ இல்லையென்பதை ஏற்கிறேன். ஆனால் படிப்பும் வேலையும் உள்ள பெண்களே மேற்சொன்ன கிரிமினல் வேலைகள் அத்தனையையும் செய்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன் - படித்த தற்சார்பான பெண்கள் தாராளமாக குடும்ப அமைப்பை உதறி விட்டு முன்னேறட்டும். ஆனால் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இருப்பதே தவறு. சமூகத்துக்காக திருமணம் செய்துவிட்டு தனக்காக, தன் முன்னேற்றத்துக்காக அற்ப காரணங்களை சொல்லி விவாகரத்து செய்யும் பெண்கள் இன்று அதிகமாகி வருகிறார்கள். அவர்களுக்கு ஆண் தேவையில்லை என்றால் ஏன் திருமணம் செய்கிறார்கள்? விவாகரத்து கோரும் துணிச்சலை ஏன் திருமணம் வேண்டாம் என சொல்வதற்கு காட்டுவதில்லை? குழந்தை பிறந்தால் என்னவெல்லாம் பிரச்சினைகள், சிரமங்கள் வரும் என்று அனைவருக்கும் தெரியும். இருந்தும் ஏன் பெற்றுக் கொள்கிறார்கள்? பெற்றுக்கொண்ட பின் விவாகரத்து வாங்கி அக்குழந்தையை தன் கணவன் பார்க்கவே கூடாது என பிடிவாதம் பிடிக்கிறார்கள்? இதன் பெயர் தான் தற்சார்பா, சுயமரியாதையா, பெண்ணுரிமையா, விடுதலையா? இதை ஏன் பெண்ணியவாதிகள் கண்டிப்பதில்லை?
குடும்பத்துக்காக, சமூகத்துக்காக பெயருக்கு ஒரு கல்யாணம், தமது மனநிறைவுக்காக ஒரு குழந்தை வேண்டும், ஆனால் தொந்தரவாக நடுவே இருக்கும் கணவனை பாதியில் ஏதாவது அதிருப்தியை காரணம் காட்டி இறக்கி விடுவோம், அவனுக்கு தன் அடிப்படை உரிமையை (குழந்தையுடன் இருப்பது) மறுப்போம், அவனுடைய சேமிப்பையும் சொத்தையும் பறித்துக் கொண்டு விரட்டுவோம் என்பது எப்படி நீதியாகும்? இந்த தன்னலமும் பழிவாங்கும் வெறியுமே இன்று அதிகமாக நவீன படித்த திருமணமாகி விவாகரத்து பல பெண்களிடம் வெளிப்படுகிறது. நான் மிகைப்படுத்துவதாக உங்களுக்குத் தோன்றலாம் - ஆனால் நான் நீதிமன்றத்திலும் வெளியிலும் சந்திக்கும் எத்தனையோ ஆண்களின் நிலைமை இதுவே. இப்படி ஒரு பிரச்சினையே இல்லை என்பதைப் போல ஆண் முற்போக்காளர்களும் பெண்ணியவாதிகளும் ஏன் சாதிக்கிறார்கள்?
தஸ்தாவஸ்கியின் "கரமஸோவ் சகோதரர்கள்" நாவலில் திமித்ரி தன் சகோதரன் அல்யோஷாவிடம் கேட்கிறான்: "ஒரு அதி அற்புதமான நியாயமான லட்சிய உலகை இந்த மனித குலத்துக்கு வழங்குவோம், ஆனால் அதற்கு ஈடாக ஒரு சிறுமதலையை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என நிபந்தனை வைத்தால் அதை ஏற்பாயா?" அதற்கு அல்யோஷா "மாட்டேன்" என்கிறான். இன்றைய பெண்ணியவாதிகளும் முற்போக்காளர்களும் "செய்வோம்" என்கிறார்கள். ஒரு அப்பாவி குழந்தை வதைக்கப்பட்டு கொல்லப்பட்டால் பரவாயில்லை, எங்களுக்கு அந்த அதி அற்புத லட்சிய உலகம் கிடைத்தால் போதும் என பெண்ணியவாதிகளும் முற்போக்காளர்களும் இன்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் தான் சதா சர்வ நேரமும் நீதி, பீதி என பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசும் நீதி எந்த உலகில் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. தம் கண்முன் நடக்கும் கொடூரங்களை ஏதோ ஒரு கற்பனையான எதிர்காலத்துக்காக, லட்சிய கருத்தியலுக்காக கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். இவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு இந்த உலகின் மீது மொத்தமாக அவநம்பிக்கை ஏற்படுகிறது. இவர்களுக்கு எந்த படிப்பும் இல்லாத மனிதர்கள் மேல் எனத் தோன்றுகிறது!
இறுதியாக சொல்கிறேன் - பெண்கள் தாராளமாக சுதந்திரம் பேணட்டும், யாரையும் சாராமல் மகிழ்ச்சியாக இருக்கட்டும், ஆனால் அதற்காக ஆண்களை பலிகேட்காதீர்கள், அவர்களை நடுவே இழுத்துப் போட்டு குருதிக் கொடை கேட்காதீர்கள். ஆண்களை விட்டுவிடுங்கள்!
- ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...