ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்ப்பட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களை மிக அதிகமாக பயன்படுத்துவது பண வசதியும் அதிகாரமும் கொண்ட மத்திய / மேல்மத்திய வர்க்க பெண்களே. எதற்கென்றால் தன் மீது தவறு இருக்கும் போது அதை மறைக்கவும், கணவனையும் அவன் குடுமத்தினரையும் இரண்டாண்டுகள் சிறையில் தள்ள வாய்ப்புள்ள சட்டங்களைக் கொண்டு அவர்களை மிரட்டி சுலபத்தில் விவாகரத்து பெறவும், பல லட்சங்களில் இருந்து கோடிகள் வரை வரக்கூடிய 'செட்டில்மெண்ட்' தொகையைப் பிடுங்கவும் இச்சட்டங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதே எதார்த்தம். கூடவே குழந்தையையும் கணவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்வார்கள் - அல்லது குழந்தையை தம் பேச்சுவார்த்தைக்காக பயன்படுத்துவார்கள். சில இடங்களில் குழந்தையை துன்புறுத்தியதாக வேறு கணவன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் பொய் வழக்கு போடுவார்கள். மூன்று நான்கு ஆண்டுகளில் குழந்தையை கணவனுக்கு சரிவர காட்டாமல் மறைத்துவிட்டு "குழந்தையைக் கொடுக்கிறோம், அதற்கு இவ்வளவு லட்சங்கள் கூட கொடு" எனக் கேட்டு வாங்குகிற மனைவியரும் உண்டு. என் நண்பர் (ஒரு எழுத்தாளர்) ஒருவரிடம் இப்படி 'சமரசம்' பேசி அவரது ஒட்டுமொத்த சேமிப்பான முப்பது லட்சங்களையும் வீட்டையும் வாங்கிவிட்டு குழந்தையை மட்டும் திரும்பக் கொடுத்தார் அவரது மனைவி. இத்தனைக்கும் அவர் சுயசம்பாத்தியமுள்ள தற்சார்பான பெண். ஆனாலும் சில நவீன பெண்களின் பேராசையும் பழிவாங்கும் வெறியும் மொத்த ரூபமெடுப்பது பிரிவின் போதே. அதை அந்த சந்தர்ப்பத்தில் அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
இந்த நுணுக்கங்களை இவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது நமது 'ஜெய்பீம் சூர்யா' குடும்பநல கறுப்பு சட்டை அகோரிகளும் தாம். ஏனென்றால் அவர்களுக்கு இதில் (அகோரி கட்டணத்துடன் சேர்த்து) 10% கட்டிங் கிடைக்கும். நீங்கள் எந்த குடும்பநல நீதிமன்றத்துக்கு போய் பாருங்கள் - 99% வழக்குகளும் பெண்களுக்கு சார்பாக செட்டில்மெண்டிலேயே முடியும். அல்லது முதல் ஆண்டிலேயே மியூச்சிவலாக பேசி விவாகரத்து வாங்கி விடுவார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக பாரபட்சமான சட்டம், பேராசை பிடித்த வக்கீல்கள், பழிவாங்கும் வெறியும் சூழ்ச்சியும் மிக்கவர்களாக உருமாறும் மனைவியர் என இணைந்து ஒரு மாபியா முத்தரப்பு தோன்றுகிறது. இதனிடம் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது. அப்படி சிக்கிக் கொண்டவர் தான் இந்த பய்ஜூ.
இவர் கேரளாவை சேர்ந்தவர். நியுசிலாந்துக்கு புலம்பெயர்ந்து வேலை செய்து வந்த இவர் இரண்டு விதங்களில் சுரண்டப்பட்டிருக்கிறார்:
1) இவரது மனைவியின் சகோதரர் இவரிடம் இருந்து நாற்பது லட்சத்துக்கு மேல் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்.
2) இவரது மனைவி ப்ரியா திருமணத்துக்குப் பின்னர் இன்னொருவருடன் பாலியல் உறவில் இருந்து ஏமாற்றி இருக்கிறார்.
இவர் செய்த தவறு அப்பெண்ணை விசாரணை செய்து ஆதாரமாக வீடியோ எடுத்தது. இது அப்பெண்ணை பயமுறுத்தி இருக்கக் கூடும். அவள் இவர் தன்னை விவாகரத்து பண்ணி இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் காட்டி அம்பலப்படுத்தி ஊருக்கு முன்னால் அசிங்கப்படுத்துவார், விவாகரத்துக்குப் பின்னர் தனக்கு போதுமான ஜீவனாம்சம் கிடைக்காமல் போய்விடும் என அஞ்சியிருக்கிறார். உடனே அவர் ஊருக்குத் திரும்பி தன் குடும்பத்திடம் பேசி இருக்கிறார். அவர்கள் கருப்பு சட்டை அகோரியிடம் பேசி அவர் வழக்குத் தொடுக்குமுன் நாம் ஒரு வழக்கைப் போட்டு அவரை அடிப்போம் என திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படித்தான் கணவனுக்கு எதிராக போலி வழக்கு ஒன்றைத் தொடுக்கிறார். அது The Protection of Women from Domestic Violence Act (2005) அல்லது 498 A சட்டப்பிரிவாக இருக்க வேண்டும். இதில் 498 Aயின் கீழ் வழக்கு நடந்திருந்தால் குறைந்தது 3 ஆண்டுகள் பய்ஜு உள்ளே போயிருப்பார். எதற்கு? தன் மனைவி தன் நண்பருடன் தன்னை ஏமாற்றி உறவு வைத்திருந்ததை கண்டுபிடித்ததற்கு. சும்மா வழக்குப் போட்டால் தண்டனையா என்று நீங்கள் கேட்கலாம். இங்கு நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - இந்த சட்டப்பிரிவின் படி ஒரு பெண் வழக்குப் போட்டால் போலீஸ் அப்பெண்ணுக்கு எல்லா விதமான உதவிகளையும் பண்ண வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறது. அதாவது இவ்வழக்கு அரசுக்கும் தனிமனிதனுக்கும் எதிரான போராட்டமாக மாறிவிடுகிறது. கணவனை அடித்து காலி பண்ணுவதற்கான எல்லா வேலைகளையும் அரசின் அமைப்புகள் அப்போது பண்ணும். அது மட்டுமல்ல கணவன் மனைவியின் மனதைக் காயப்படுத்தும்படியாகப் பேசுவது, ஏசுவது, முறைத்துப் பார்ப்பது கூட குற்றமாக கருதப்படும். அடித்ததாக கூட சேர்த்துவிட்டு அதற்கு சான்றாக மனைவியின் உறவினர் வந்து பேசினாலும் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். இந்த வழக்கில் ப்ரியாவின் சகோதரர் வந்து “என் கண் முன்னால் வைத்து என் சகோதரியை அவள் கணவன் அடித்தார்” என்று சொன்னாலே போதும், அதை ஏற்றுக்கொண்டு பய்ஜுவை உள்ளே தள்ளிவிடுவார்கள். இந்த சட்டத்தில் ஆண் தன்னை நிரூபித்து தப்பிப்பது கிட்டத்தட்ட அசாத்தியம்.
அது மட்டுமல்ல, நீங்கள் உங்கள் வேலையை சரிவர செய்ய முடியாமல் குழந்தையைப் பிரிந்து குடும்பத்தை இழந்து நீதிமன்றத்துக்கு அலைவது மிகப்பெரிய உளவியல் வதை. அது உங்கள் சுயமரியாதையை அழித்து, தன்னம்பிக்கையை குலைத்துவிடும். நீங்கள் குடும்பநல நீதிமன்றத்துக்குப் போய் பார்த்தால் அங்கு கட்சிக்காரர்களின் முகம் எப்போதும் செத்துப்போயிருக்கும், ஆனால் கருப்பு சட்டை அகோரிகள் மலர்ந்த முகமாக இருப்பார்கள். (ஏனென்றால் அது அவர்களுக்கு சோறு.) நான் எந்த அலுவலகத்துக்குப் போகும் போதும் அங்கு வாடிக்கையாளர்கள் இயல்பாகவும் அவர்களுக்கு பணி செய்யும் ஊழியர்கள் கடுப்பாகவும் இருப்பதைக் காண்பேன். ஆனால் குடும்பநல நீதிமன்றம் மட்டுமே விதிவிலக்கு - அங்கு இது தலைகீழாக இருக்கும். “வாடா வா சிக்கிக்கிட்டியா, உன்னை உரிக்காம விடப் போறதில்ல” என்பதே அந்த முகமலர்ச்சியின் பின்னுள்ள எண்ணமாக இருக்கும். ஏனென்றால் மற்ற இடங்களில் வாடிக்கையாளர் தன் விருப்பத்துடன் வருகிறார், இங்கோ அவர் கட்டாயமாக வரவழைக்கப்படுகிறார், மற்ற இடங்களில் அவர் தன் நேரத்தில் தனக்கு முடிகிற கட்டணத்தை கொடுத்து சேவையைப் பெறுவார், இங்கோ அவரது நேரத்தையும் கொடுக்க வேண்டிய கட்டணத்தையும் நீதிமன்றமும் கறுப்பு சட்டை அகோரிகளுமே தீர்மானிக்கிறார்கள், இது போக அங்கு ஒரு ஆணாக நீங்கள் அங்கு சிறுக சிறுக சந்திக்கும் அவமானங்கள், அநீதி, மிரட்டல், அநிச்சயமான எதிர்காலம் பற்றின நெருக்கடி உங்களை தற்கொலை நோக்கித் தள்ளிவிடும்.
ஒரு உதாரணம் தருகிறேன் - இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்: இரண்டு முறைகள் நீதிமன்றத்துக்குள் வைத்து கணவர்கள் தம் மாமனாரால் அடிக்கப்படுவதைப் பார்த்தேன். காவலர்களோ கருப்பு சட்டை அகோரிகளோ தடுக்கவில்லை. எல்லாரும் அதை ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்கள். “ஏன் சார் அடிக்கிறீங்க, இதனால் தான் உங்களை எல்லாம் உள்ளே விடுறதில்ல, உங்களுக்கு கம்பிளெயிண்ட் இருந்தால் எங்களுக்கு புகாரா கொடுங்க, இப்படியெல்லாம் பண்ணக் கூடாது” என்று காவலர்கள் மாமனாரிடம் சொல்கிறார்கள். இது ஒரு குற்றம் எனக் கருதி நடவடிக்கை எடுப்பதில்லை. இன்னொரு முறை ஒரு கணவர் தன் பொறுமையை இழந்து எதிர்க்கட்சி கருப்பு சட்டை அகோரியை நோக்கி கத்தியபடி அவர் சட்டையைப் பிடித்துவிட்டார். உடனே போலிசார் அவரைப் பிடித்துக் கொண்டு போனார்கள். இதைப் போன்ற பாரபட்சத்தை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. இது போன்ற இடத்திற்கு நீங்கள் மாதம் சில முறைகள் என வருடக்கணக்கிற்கு போவதென்றால் அது உங்கள் மனநலத்தை உருக்குலைத்துவிடும். கூடவே குழந்தையை பிரித்து விட்டார்களே எனும் கடும் துன்பம்.
ஒரு பெண் குடும்ப நல நீதிமன்றத்துக்குப் போகும் போது அவளுடைய அப்பா, அம்மா, சகோதர்கள் எனும் பெருங்கூட்டம் அவளுடன் நீதிமன்றத்துக்கு செல்வதுடன் கடைசி வரை அவளுடன் நின்று அவளைப் பாதுகாக்கும். இது இந்தியாவில் உள்ள நடைமுறை. ஆனால் ஆணோ எந்தவிதத்திலும் ஆதரவற்று நிற்கிறான். அவனுடைய பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள் என யாருமே கூட வருவதோ ஆதரிப்பதோ இல்லை. அதுவும் 498A யில் அவனுடைய குடும்பத்தினரையும் குற்றவாளியாக சேர்த்தால் மொத்த குடும்பத்தினரும் தனிமைப்படுவார்கள். இந்த பிரச்சினைகள் பெரும்பாலான பெண்களுக்கு வருவதில்லை. சமகாலத்தில் விவாகரத்தின் போது மிகப்பெரிய ஆதரவு பெண்களுக்கு கிடைக்கிறது, ஆனால் ஆண்களோ ஒரு சமூக விரோதியாக கருதப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறான்.
பய்ஜூவையே எடுத்துக் கொள்வோம் - இந்த வழக்கு முடியும் போது அவருக்கு கிடைப்பதென்ன? மனைவியை அடித்து துன்புறுத்தியவர் எனும் கெட்ட பெயர், வேலை இழப்பு, குழந்தை இழப்பு, குடும்பமற்ற தனிமை, கடைசியில் செட்டில்மெண்ட் எனும் பெயரில் ஒரு பெரும் தொகை நஷ்டம். மிக முக்கியமாக இந்த சமூகமும் உலகமும் இவ்வளவு அநீதியாக இருக்கிறதே, இந்த உலகில் நன்மை, நியாயம், நீதி என ஒன்றுமே இல்லையா எனும் அவநம்பிக்கை, மனக்கசப்பு, இனி இந்த வாழ்வை எப்படி எதிர்கொள்வது எனும் நிர்கதி நிலைமை, உங்களுக்காக சமூகம், குடும்பம், நண்பர்கள், நீதியமைப்பு, கடவுள் என யாருமே வர மாட்டார்கள் என்பது ஒரு பெருங்கொடுமையான நிலைமை - ஒரு நொடி நீங்கள் ஒரு புழுவைப் போல உணர்வீர்கள். இதுவே பய்ஜுவை தற்கொலை நோக்கித் தள்ளி இருக்கிறது. இதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால் நானே 2022இல் தற்கொலை முயற்சி செய்தேன். அன்று நான் தப்பித்ததற்கு என் வீட்டில் அப்போது ஆட்கள் இருந்ததே காரணம். நான் இப்படி பாதிக்கப்பட்ட ஆண்களிடம் பேசும் போது அவர்களில் பலரும் பலமுறை தற்கொலை முயற்சி செய்தவர்களே எனத் தெரிய வந்தது. ஆனால் இதை நம் சமூகம் கண்டுகொள்வதே இல்லை.
இதே பய்ஜுவின் இடத்தில் அவரது மனைவி இருந்து அவர் தற்கொலை பண்ணியிருந்தால் உடனடியாக பய்ஜூ கைதாகி இருப்பார். ஆனால் தன் தற்கொலை மனைவியே காரணம் என ஒரு ஆண் வாக்குமூலம் கொடுத்துவிட்டு தற்கொலை பண்ணினாலும் மனைவி மீது எந்த வழக்கும் பாயாது. ஏனென்றால் நம் சட்டம் ஒரு பெண் ஒரு ஆணை தற்கொலைக்குத் தூண்டினால் அது குற்றமல்ல எனக் கருதுகிறது. நான் சும்மா அடித்து விடுகிறேன் என நினைக்கிறீர்களா? இதைப் பாருங்கள்:
Nexus between Section 113A of the Evidence Act, 1872 and Section 306 of the Indian Penal Code, 1860
Section 113A of the Evidence Act, 1872, presumes the commission of suicide by a married woman to have been abetted by her husband or any relative of his relative if it is established that she committed suicide within a period of seven years from the date of her marriage and that her husband or any of his relatives had subjected her to cruelty. “Cruelty” has the same meaning as defined under Section 498A of the Indian Penal Code, 1860
The ingredients of Section 306 of the Indian Penal Code, 1860 are necessary to be fulfilled for conviction of the crime under Section 113A.
In the case of Gumansinh v. State of Gujarat (2021), the Hon’ble Supreme Court ruled that Section 113A of the Evidence Act can be invoked to uphold the conviction of the accused in the absence of direct evidence.
பொதுவாக தற்கொலைக்குத் தூண்டியதாக போடப்படும் வழக்குகளில் சட்டம் வலுவாக இருப்பதில்லை. நேரடியாகத் தூண்டினார் என நிரூபிக்க வேண்டும். ஆனால் பெண்களின் தற்கொலையைப் பொறுத்தமட்டில் அதை 113 A எனும் சட்டப்பிரிவு ஆண்களுக்கு எதிராக “கருதி” அவர்களை குற்றவாளி ஆக்குவதை சுலபமாக இருக்கிறது. ஆண்களுக்கு இப்படி ஒரு சட்டம் இல்லை. அதனாலே ஏகப்பட்ட ஆண்கள் தம் தற்கொலைக்கு மனைவியே காரணம் குறிப்போ வீடியோவோ தயாரித்து விட்டு தற்கொலை பண்ணினாலும் அதை ஒரு வழக்காக போலீஸ் எடுப்பதில்லை, எடுத்தாலும் நீதிமன்றத்தில் பெண்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியாது. பய்ஜுவின் மனைவி ப்ரியாவும் சுலபத்தில் தப்பித்து விடுவார். பய்ஜு தன்னை மரணத்தை நோக்கித் தள்ளிய ப்ரியா, அவளுடைய சகோதரர், அம்மா மட்டும் அவளுடைய காதலன் ஆகிய நால்வரை குற்றம் சாட்டுகிறார். அவர்களை தெய்வம் தண்டிக்கும் என்கிறார். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது. அப்பெண் தன் வாழ்க்கையை ஒரு சிறிய ஏமாற்றத்துடன் ஜாலியாக வாழவே போகிறார். அவளை பயன்படுத்திய அந்த காதலன் வேறு பல மணமான பெண்களுடன் படுக்கப் போகிறான். பய்ஜுவின் குழந்தையிடம் அவர்கள் “உன் அப்பா ஒரு பயந்தாங்கொள்ளி, உன் அம்மாவைத் துன்புறுத்தி விரட்டி விட்டு கடைசியில் தற்கொலையும் பண்ணிக்கொண்டார்” என சொல்லி நம்ப வைப்பார்கள். நாமும் மறந்துவிடுவோம்.
சரி அதென்ன “ஏமாற்றம்”? இவர் தற்கொலை பண்ணி பாதியில் விடைபெறா விட்டால் அப்பெண் அடுத்த இரு வருடங்களுக்குள் சில கோடிகளாவது செட்டில்மென்றாக பெற்றிருப்பார். குடும்பநல கறுப்பு சட்டை அகோரிக்கு 10% கிடைத்திருக்கும். அதனாலே இவர்கள் இருவரும் பய்ஜுவின் தற்கொலையால் நஷ்டமடைந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனாலே நான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு “கோரிக்கை வைக்கிறேன்” - இது போன்ற வழக்குகளில் கணவன் பாதியில் தற்கொலை பண்ணினாலோ இறந்தாலோ வழக்கை மூடிவிடாமல் அதை அவனுடைய பெற்றோர் அல்லது உறவினருக்கு எதிராக நடத்தி அவர்களுடைய சொத்துக்களைப் பறித்து மனைவியிடம் கொடுக்கும்படியாக ஒரு புது சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள். அப்போதே இவ்வகையான ப்ரியாக்களும் அவர்களும் குடும்பநல கறுப்பு சட்டை அகோரிகளும் "சந்தோஷமாக" இருப்பார்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன் - பய்ஜுவின் தற்கொலைக்கு காரணம் மனைவி அவருக்கு துரோகம் செய்து இன்னொருவருடன் படுத்ததல்ல. அவரது குழந்தையைப் பிரித்து, பொய் வழக்குப் போட்டு அவரை அலைய விடுவதற்கு சாதகமாக உள்ள பால் சமநிலையற்ற இந்திய சட்டங்களும் இச்சட்டங்களை இன்றும் ஆதரிக்கிற பெண்ணியவாதிகளும் குடும்பநல கறுப்பு சட்டை அகோரிகளுமே காரணமாவர். இச்சட்டங்களும் இப்படி ஆண் விரோத குடும்பநல நீதிமன்றமும் இல்லாவிடில் அவர் தன் மனைவியிடம் இருந்து பிரிந்து போயிருப்பார். குடும்பத்தினருடன் இருந்து பேசி ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு குழந்தையை தன்னுடன் அழைத்துப் போயிருப்பார் (தன் மனைவிக்கு குழந்தை மீது எந்த அக்கறையும் இல்லை என்று அவரே சொல்கிறார்.) ஆக பிரிவு ஒரு பிரச்சினை அல்ல. பிரிவை ஒரு தண்டனையாகவும் பொய்வழக்கு போட்டு அவரை வதைக்கும் நவீன சட்ட அமைப்புமே அவரைக் கொன்று விட்டது, அவரை இப்படி ஊருக்கே அறிவித்து தற்கொலை பண்ணும்படி செய்து விட்டது. இந்த தற்கொலை சமத்துவமற்ற நம் சட்ட அமைப்புக்கு அவர் கொடுத்த ஒரு செருப்படியாகவே நான் பார்க்கிறேன்.
இந்த ஆண் விரோத சட்டப்பிரிவுகளை நோக்கி நான் காறி உமிழ்கிறேன்.
பொய் வழக்கு இட பரிந்துரைக்கும் அன்புள்ள குடும்பநல கறுப்பிறக்கை காக்காக்களே இப்படி ஒருத்தரைக் கொன்று தான் நீங்கள் சாப்பிட வேண்டுமா? ஏன் இப்படி வாழ்கிறீர்கள்?
பிணந்தின்னிகளே, உங்களை எல்லாம் நாங்கள் துரத்தி அடிக்கிற நாள் நிச்சயம் ஒருநாள் வரத்தான் போகிறது. அன்று இந்த பய்ஜுக்களின் சாவுக்கு நாங்கள் பதில் கேட்போம்.

கருத்துகள்