முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாராளுமன்ற தேர்தல்: சாதி, மத வாக்குப் பங்கீடும் அதன் அரசியலும்

 

2024 பாராளுமன்ற தேர்தலில் சாதி-மதம் அடிப்படையிலான வாக்கு சதவீதத்தைப் பற்றி ஒப்பீனியன் தமிழ் அலைவரிசையில் ஒரு தரவை முன்வைத்தார்கள் - அதிகமாக தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு வந்துள்ளது. இங்குள்ள தலித்துகளை பாஜக தன் வசம் இழுக்க ஒரு புறம் முயன்று வருகிறது, தலித் அறிவுசமூகம் (intelligensia) மறைமுகமாகவும், சில உதிரி கட்சிகள் நேரடியாகவும் பாஜகவை ஆதரிக்கின்றனர் என்றாலும் கணிசமானோர் இன்னமும் திராவிட கட்சிகளின் ஆதரவாளர்களே. வேறு சில மாநிலங்க்ளிலோ பாஜக வந்து இட ஒதுக்கீட்டைப் பறித்து விடுமோ எனும் பயம் தலித் சமூகங்களுக்கு இருந்தது. தமழ்நாட்டில் அப்பயம் இல்லாவிடினும் திராவிட கட்சிகளின் பகுதியாக தம்மைக் காண்கின்றனர் என நினைக்கிறேன். அதற்குரிய சமூகப்பொருளாதார காரணங்கள் இங்கு உள்ளன.

அதே நேரம் பழங்குடிகளின் வாக்குகள் கணிசமாக பாஜக கூட்டணிக்குப் போயுள்ளது. அதற்கான முயற்சிகளை சில மாநிலங்களில் பாஜக செய்தது, முர்முவை ஜனாதிபதி ஆக்கியது ஆகியவற்றை வைத்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இன்னொரு பக்கம், ஆதிக்க சாதியினரின் வாக்குகள் நியாயமக பாஜகவுக்கே போயிருக்க வேண்டும். அதுவும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளும் இந்தியா கூட்டணிக்கு போயுள்ளது. இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி இத்தனைக்கும் பொருளாதார மறுபங்கீடு, சமத்துவம் பற்றி பேசியது. இந்த சாதிகள் வழங்கிய ஆதரவை எந்த சமூக உளவியலின், பொருளாதார நோக்கத்தின் அடிப்படையில் பார்க்க முடியும்? தெரியவில்லை.

இன்னொரு ஆச்சரியம் இஸ்லாமியரின் வாக்குகளில் அனேகமாக பாதி பாஜகவுக்கு சென்றுள்ளது. இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள், அதிக பிள்ளைகள் பெற்று நாட்டின் வளத்தை சுரண்டுபவர்கள் என்று என்னென்னமோ மோடி சொல்லி வெறுப்பை வளர்த்தாரே, அது இஸ்லாமியரை பெருவாரியாக பாஜகவுக்கு எதிராக திரட்டியிருக்க வேண்டுமே? 2019இலும் வடக்கே இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாக பாஜகவுக்கு சென்றன. அது ஒரு பெரும் சதவீதம் அல்ல என்பதால் பாஜக அதை 'கோருவதில்லை', ஆனால் உள்ளுக்குள் அதைத் திரட்ட வேலை செய்கிறது. பெங்களூரில் இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வாங்கிக் கொடுப்பதை, அவர்களை உள்ளிழுப்பதை கவனித்திருக்கிறேன். சில இடங்களில் தயங்காமல் பிரதிநுத்துவமும் கொடுக்கிறார்கள் என்றாலும் பெருவாரியாக பாஜகவின் நிலைப்பாடு "உங்களுக்கு உதவுவோம், உங்கள் நடைமுறை வாழ்வை கெடுக்க மாட்டோம், எங்களுடன் நில்லுங்கள், எங்கள் பிரச்சாரம் உங்களுடைய அன்றாட பரிவர்த்தனைகளை பாதிக்காது " என்பதே. கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலில் தமது ஊழல் மீது கவனம் திரும்பாதிருக்க முன்னெடுத்தது. அண்மையிலும் ஒரு மதக்கலவரத்தை காதலின் விளைவான கொலையை வைத்து நிகழ்த்த முயன்றது. ஆனால் இது போன்ற உதிரி சம்பவங்களைத் தவிர்த்து நோக்கினால் அவர்கள் இஸ்லாமியருக்கு நேரடியான அச்சுறுத்தல் அரசியலை செய்வதில்லை.

இன்னொரு பக்கம், பாஜகவுக்கு தெளிவான இஸ்லாமிய வாக்காள வியூகம் உள்ளது. பாஜக இந்துக்களை எப்படி தேர்தலின் போது ஒற்றைத் திரளாகப் பார்க்காமல், சாதி அடிப்படையில் பிரிக்கிறார்களோ அவ்வாறே இஸ்லாமியர்களையும் நோக்குகிறது. குறிப்பாக பாஸ்மண்டா என சொல்லப்படும் 'கைவிடப்பட்ட' பிற்படுத்தப்பட்ட, தலித் இஸ்லாமிய சமூகங்களை பாஜக தன் வயப்படுத்த தொடர்ந்து முயல்கிறது என பெய்யாத் அலி தெரிவிக்கிறார். இவர்கள் இஸ்லாமிய சமூகத்தினுள் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறவர்கள், தீண்டாமையை அனுபவிப்பவர்கள், ஏழைகளாக துன்புறுகிறவர்கள். 2022இல் ஹைதாபாதில் நடந்த டாஸ்மண்டா இஸ்லாமியருக்கான பாஜக தேசிய நிர்வாகிகள் சந்திப்பை அவர் உதாரணமாக சுட்டுகிறார். பாஜக இஸ்லாமியரை துண்டுபடுத்தி உள்ளது - அவர்களை இந்திய வம்சாவழி இஸ்லாமியர், அந்நிய இஸ்லாமியர் (பதான்கள், சயித்துகள்) எனப் பிரிக்கிறது. பூர்வ இந்திய இஸ்லாமியருக்கான நிதியையும் வாய்ப்பையும் அந்நிய இஸ்லமியர் (டாஸ்மண்டா அல்லாதவர்கள்) சுரண்டிக் கொழுப்பதாக பாஜக பிரச்சாரம் செய்கிறது. அதாவது இந்துக்களிடம் வந்து உங்கள் தாலியையும், தங்கத்தையும், சொத்தையும் எருமை மாட்டையும் இஸ்லாமியருக்கு கொடுப்பாகள் என்று சொல்லிவிட்டு அதையே சற்று மாற்றி "உயர்சாதி இஸ்லாமியருக்கு கொடுப்பார்கள்" என டாஸ்மண்டா இஸ்லாமியரிடம் சொல்கிறார்கள். இந்த அணி திரட்டல் பாஜகவுக்கு தேர்தல் பலன்களை அளித்துள்ளதாக பெய்யாத் அலி கூறுகிறார். அதாவது இஸ்லாமியர் ஒரு மதரீதியான தனிக்கூட்டமாக இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதில்லை. அவர்கள் உடைபட்ட திரளாக இரு பக்கமும் வாக்களிக்கிறார்கள்.

தமது மதத்துக்காக வாக்களிப்பார்களா, அல்லது சாதிக்காகவா என பெய்யாத் தான் உத்தரபிரதேச பெஸ்மண்டா இஸ்லாமியரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் கேட்கும் போது அவர்கள் சாதிக்காகத் தான் என்கிறார்கள். ஹிலால் அகமது 2019க்குப் பின்னர் இஸ்லாமியரின் வாக்களிப்பு தேர்வு மிகவும் சிக்கலாகி, பிளவுபட்டுள்ளது, அவர்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் திரள்வதில்லை என்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் 'டாஸ்மண்டா இஸ்லாமியர்' குறித்து கூகிளில் அதிகமாக தேடப்படுகிறது. அதாவது, 90களுக்குப் பிறகு இந்து தலித்துகள், பற்படுத்தப்பட்டோருக்கு நிகழ்ந்த அணிதிரளல் இப்போது இஸ்லாமியருக்குள்ளும் நிகழ்கிறது.

இதன் அடிப்படையிலே காங்கிரஸ் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றி தேர்தல் பரப்புரையில் விவாதித்தது; அந்த இடத்தில் பாஜக மாட்டிக் கொண்டு கொஞ்சம் அடிவாங்கியது. இந்த பாராளுமன்ற தேர்தலில் - ஒரு கணக்கெடுப்பு படி - இந்தியா கூட்டணிக்கு சற்று அதிகமாகவே இஸ்லாமியர் வாக்களித்துள்ளனர், ஒட்டுமொத்தமாக அல்லர்.

இங்கு இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் கவனிக்க வேண்டும். அல்ஜசீரா இதழில் சயீப் காலித் எழுதிய கட்டுரையொன்றில் ஏன் ராகுல் காந்தி தன் நன்றி உரையில் இஸ்லாமியர்களைக் குறிப்பிடவில்லை எனக் கேட்கிறார். அது மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரையிலோ கொள்கை அறிக்கையிலோ இஸ்லாமியரை தனியாக குறிப்பிடவில்லை என்கிறார். இது பாஜக ஏற்படுத்தியுள்ள இஸ்லாமிய வெறுப்புவாதத்தின் பொறியில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காகவே என நினைக்கிறேன். மேலும் இஸ்லாமியர் எனும் மத அடிப்படைப் பிரிவு ஒரு கற்பிதமே என காங்கிரஸும் பிற கட்சியினரும் உணர்ந்துள்ளனர். பிராந்திய, சாதிய, வர்க்க நலன்களை கணக்கில் கொள்ள முயல்கிறார்கள், இது நடைமுறை எதார்த்தத்தை கணக்கில் கொண்டது என்பது என பார்வை. சுமார் 20 கோடி இநதிய இஸ்லாமியர் ஒற்றை அடையாளம் அல்லர்.

இதை கவனிக்காமல் விடுவது, இஸ்லாமியர் தம்மை நாடு கடந்த ஒரு சர்வதேச மக்கள் தொகையாக மத அடிப்படையில் அடையாளம் காண்கிறார்கள் என சித்தரிப்பது ஊடகங்கள் இஸ்லாமிய சமூகத்துக்கு இழைக்கும் ஒரு அநீதி. உண்மையில் அவர்கள் இந்தியாவுக்குள் கூட ஒற்றை மத அடையாளத்தின் பாலான திரள் அல்லர். அவர்களை வகுப்பு, சாதி ரீதியாக அணுகுவதும், வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதுமே (பிளவுபடுத்துவது அல்ல) சரி.

இதைத் தாண்டி பல காரணங்களும் இருக்கக் கூடும் - யாராவது ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி காரணங்களைக் கண்டறிந்தால் நன்றாக இருக்கும்.

சாதி, மத திரள்களின் ஆதரவு ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறும். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட அங்குள்ள ஒவ்வொரு பிராந்தியத்திலும் சமூகப்பொருளாதார, அரசியல் பங்கீட்டு நிலையைப் பொறுத்தும் மாறும். உதாரணமாக, மேற்கு வங்காளத்தில் இஸ்லாமியர்கள் டி.எம்.ஸியை ஆதரித்ததைப்போல தீவிரமாக பிற மாநிலங்கள் அனைத்திலும் இந்திய கூட்டணிக் கட்சியினரை ஆதரிக்கவில்லை.
ஆகையால் இந்த தேர்தலில் கிடைத்துள்ள சாதி, மத வாக்குகளை வைத்து சாதி, மத திரள் உருவாக்கத்தை, அதன் சார்பை யாரும் ஒரு கருத்துருவாக்கமாக முன்வைக்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.