முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்து டி20 அணியின் வேகப்பந்து வீச்சும் இந்திய மட்டையாட்டத்தின் பிரச்சினையும்

இங்கிலாந்து தன் டி20 அணியில் இம்முறை இரண்டு முழுநேர சுழலர்களை மட்டுமே கொண்டு வந்தனர். ஆனால் இந்தியாவோ தன் அணியில் நான்கு சுழலர்களைக் கொண்டு ஆடுகிறது. ஆகையால் இங்கிலாந்தின் அணித்தேர்வு முட்டாள்தனமானது என்று ஶ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் கூறினர். நானும் அப்படியே கருதினேன். ஆனால் அவர்களுடைய தேர்விற்குப் பின்னால் அபாரமான திட்டமொன்று இருந்தது என்பதை தொடரின் இரண்டாவது ஆட்டத்தின்போதே புரிந்துகொண்டேன்



கடந்த சில ஆண்டுகளாகவே நமது மட்டையாளர்கள் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் ஆடப் போகும்போது பந்தை நான்காவது, ஐந்தாவது குச்சிகளில் தொடர்ந்து வீசி அவர்களை வெளியேற்றுகிறார்கள். பந்தை உள்ளே வீசுவதே இல்லை. ஏனென்றால் உள்ளே வரும் பந்தைக் கூட இந்திய மட்டையாளர்கள் காலை நகர்த்தி ஆப் பக்கமாக அடித்தார்கள். பந்தை வெளியே வீசினால் அவர்கள் அதை மட்டையால் தொடும் நோக்கில் நகர்ந்து வருவர்கள் எனக் கருதி வைடாக வீசி சற்றே உள்ளே கொண்டு வந்தோ நேராகச் செல்ல வைத்தோ தடுப்பாட வைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைத்தார்கள் எதிரணி வேகவீச்சாளர்கள். கோலி, ரஹானே, புஜாரா என நமது மட்டையாளர்கள் இப்படித்தான் திணறினார்கள். ஆனால் டி20யில் பந்து அந்தளவுக்கு நகராது, பவுன்ஸும் ஆகாது, நன்றாகத் தெறித்துக் கொண்டு சிக்ஸர் போகும் என்பதால் வைடாக வீசுவது நல்ல உத்தியல்ல. நமது மட்டையாளர்கள் வழக்கம்போல முழுநீளத்திலும் குறைநீளத்திலும் விழும் பந்துகளை விளாசி சுற்றிச்சுற்றிக் காட்டினார்கள். சஞ்சு சாம்ஸன் பந்தைவிட்டுத்தட்டிகவர், எக்ஸ்டிரா கவருக்கு மேலாக தூக்கி விரட்டுவார் என்றால் சூர்யாவோ குச்சிகளுக்குப் பின்னால் எல்லா திசைகளுக்கும் விளாசுவார். ரிங்கு, அபிஷேக் ஷர்மாவின் வலிமை நேராகவும் கவர் பகுதியிலும் அடிப்பது. இந்திய அணி மட்டையாட்டத்தைக் காணவே எதிரணிக்குப் பயமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து ஒன்றை கவனித்தார்கள் - பிரச்சினை திசையில் இல்லை, நீளத்தில் இருக்கிறது. இந்தியா பின்னங்காலுக்குப் போய் பெரிதாக அடிப்பதேயில்லை. நீங்கள் ஹெட், வார்னர் போன்ற வீரர்களின் பெரிய ஷாட்களை கவனித்தால் பின்னால் போய்த்தான் பந்தைத் தூக்குவார்கள். ஆனால் இந்திய அணியிலோ முன்பு முன்னங்காலிலும் பின்னங்காலிலும் ஆக்ரோஷமாக அடிப்பதற்கு டெண்டுல்கர் போன்ற ஒருவராவது இருந்தார். இப்போது யாருமே இல்லை. (ரோஹித் ஷர்மாவும் டி20யில் இருந்து ஓய்வுபெற்று விட்டார். ரஹானே டி20 ஆடுவதில்லை.) இங்கிலாந்து வேகவீச்சாளர்களில் நான்கு பேரும் 140-150 வேகத்துக்கு வீசுபவர்கள். அவர்கள் மிக வேகமாக பந்தை நடுக்குச்சியில் இருந்து விலாப்பக்கமோ ஆப் பக்கமிருந்து நடுக்குச்சிக்கோ வீசுவார்கள். ஒரு பந்தைக் கூட வெளியே வீசுவதில்லை. உள்ளே வரும் பந்தையும் நம் மட்டையாளர்களால் குச்சிகளை விட்டு அடிக்க முடியாது. குச்சிகளுக்கு குறுக்கே சென்று midwicket, fine leg பகுதிகளுக்கு புல் / ஹூக் அடிக்கவே முடியும். ஆனால் அங்கேயும் தடுப்பாளர்களை நிறுத்தி வைத்துவிடுகிறார்கள். மேலும் நம் ஆட்களுக்கு அங்கே பின்னங்காலில் அடிக்க வராது. கடைசி இரண்டு போட்டிகளில் அவர்களில் 90% மேல் பந்துகளை நம்மை விரட்டவே அனுமதிக்கவில்லை. இதில்தான் இந்திய மட்டையாளர்கள் திகைத்துப் போனார்கள்.


இரண்டாவது போட்டியில் இந்தியா தட்டுத்தடுமாறி வென்றாலும் அதில் உண்மையான வெற்றியாளர்கள் இங்கிலாந்தே என்று நான் நினைத்தேன். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு அவ்வளவு அழகாக நெருப்பாக இருந்தது. சென்னையின் ஆடுதளத்தின் பவுன்ஸ் அவர்களுக்கு உதவியது, மூன்றாவது போட்டியில் ராஜ்கோட்டில் அந்தளவுக்கு உதவாது என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அந்த ஆடுதளத்திலும் பந்தை குத்தி உள்ளே கொண்டு வந்தபோது, ஒழுக்கத்துடன் தொடர்ந்து குறைநீளத்தில் வீசிக்கொண்டே இருந்தபோதுதான் அவர்களுடைய திட்டத்தின் மேதைமை எனக்கு விளங்கியது. நாம் பொதுவாக சஞ்சு சேம்ஸன் பவுன்சருக்கு எதிராகத் திணறியதைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால் அனேகமாக எல்லாருக்குமே அந்த நீளம் சிம்மசொப்பமாக உள்ளது. அஷ்வினின் யுடியூப் சேனலில் இதைப் பற்றின விவாதம் நடந்ததை கவனித்தேன். பந்தை குறைநீளத்தில் உள்ளே கொண்டு வந்து சஞ்சுவை விரட்டவே விடாமல் இங்கிலாந்து கட்டுப்படுத்தியதை அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் சொல்லாமல் விட்டது மற்ற மட்டையாளர்களுக்கும் இதுவே நடக்கிறது என்பது. அதனாலே அவர்கள் நான்கு வேகவீச்சாளர்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 16 ஓவர்களில் அவர்கள் 80 பந்துகளையும் அப்படியே வீசும்போது இந்தியாவின் கணிசமான ஷாட்கள் அசாத்தியமாகின்றன (இதுவே இரண்டு முழுநேர சுழலர்களை அவர்கள் கொண்டு வந்தால் இந்த திட்டத்தைப் பின்பற்றுவது சிரமமாகும்.). கையைக் கட்டியது போலாகி விடுகிறது. என்ன மாதிரி ஆடுதளமென்றாலும் இதே மாதிரி வீசுவதே அவர்களுடைய நோக்கம். இதை 1932-33இல் ஆஸ்திரேலியாவின் பிரேட்மேனுக்கு எதிராக இங்கிலாந்து பிரயோகித்த bodyline வியூகத்துடன் நாம் ஒப்பிடலாம். வழக்கமாக 100 சராசரியில் ஆடும் பிரேட்மேன் அந்த தொடரில் 56.57 சராசரியுடன் 396 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். என்னவொரு மகத்தான வீரர் என்று பாருங்கள். (இதுவே கோலி, ரோஹித், கில் உள்ளிட்ட நமது இன்றைய இந்திய மட்டையாளர்கள் எனில் பாடி லைனுக்கு எதிராக 10-20 சராசரியுடன் 100 ஓட்டங்களே எடுத்திருப்பார்கள்.) இங்கிலாந்தின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான பிரண்டம் மெக்கல்லத்தையும், புள்ளியல் வல்லுநர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்


 இந்தியாவுக்கு இந்த பொறியில் இருந்து விடுபட ஒரே வழிதான் இப்போது உள்ளது. அஷ்வின் சொல்வதைப்போல மைதானத்தின் பக்கவாட்டு எல்லைக்கோடுகள் குறைவாக இருக்க வேண்டும். பின்னங்காலுக்குப் போய் பவுன்ஸரை லேசாக அரைகுறையாகத் தட்டினாலே சிக்ஸர் போக வேண்டும். அப்போது சஞ்சு, சூர்யா போன்றவர்கள் ஜொலிப்பார்கள். வழக்கமான பெரிய மைதானங்களில் இது பெரும் பிரச்சினையாகவே தொடரப் போகிறது. இனி ஓரளவுக்கு நல்ல வேகவீச்சாளர்களைக் கொண்டுள்ள எதிரணிகள் எல்லாருமே நான்கு வேகவீச்சாளர்களுடன் சரியான திட்டத்துடன் வருவார்கள். இந்திய மட்டையாளர்களால் இதற்கு உடனடியாக தீர்வு கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இயல்பாகவே பின்னங்காலில் நன்றாக ஆடக்கூடியவர்கள் நம்மிடம் இப்போது இல்லை. சஞ்சுவும் சூர்யாவும் மெல்லமெல்ல இதற்குத் தீர்வு காண்பார்கள்தாம். ஆனால் அதற்குள் தோல்விகள் அதிகமாகி அணிக்குள் பல மாற்றங்கள் வரும். இடதுகை ஆட்டக்காரர்களால் இதே பந்துகளை பின்னால் வெட்டியாட முடியும், விட்டு தூக்கி அடிக்க முடியும் என்பதால் அவர்களை அதிகமாக கொண்டு வருவார்கள். ரிஷப் பண்ட் கூட உள்ளே வரலாம் (அவரால் இயல்பாகவே இந்த வியூகத்தை நன்றாக கையாள முடியும்.).  இங்கிலாந்தின் இந்த வியூகம் ஒருவேளை இந்திய அணியின் மட்டையாட்ட வரிசையையே எதிர்காலத்தில் மாற்றும் நிலையை உருவாக்கக் கூடும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.