முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிய மலைச்சிகரங்கள்

 மனுஷ்ய புத்திரன் தன் கட்டுரையில் ‘திறன் வெளிப்பாடு’ என்றுதான் எழுதினார். அதை நான் திறன் மேம்பாடு எனத் தவறாகப் புரிந்துகொண்டு அதை விமர்சித்ததது தவறுதான். தவறான மனப்பதிவினால் நேர்ந்த பிழையை மன்னிக்கவும். அப்பகுதியை நீக்கியும் விட்டேன்.

அதேநேரம் அவரது கட்டுரை மிகவும் கண்டனத்துக்குரியது என்பதிலோ புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பில் உள்ள பல கோளாறுகள், பிரச்சினைகள், வெளிப்படைத்தன்மையின்மை குறித்த என் விமர்சனப் பார்வையை நான் துளியும் மாற்றிக்கொள்ளவில்லை.
இங்கே நான் இருவேறு விளக்கங்களைத் தரவேண்டும்:
முதலில், நான் மனுஷ்ய புத்திரனை - அவர் சொல்வதைப்போல - நான் பாஸிஸ்ட் என்று கண்டுபிடித்துக் கூறவெல்லாம் இல்லை - அவரது அக்கட்டுரையின் தொனியிலும் கருத்துக்களிலும் பாஸிஸத்தன்மை தெரிகிறது என்றேன். பாஸிஸ்டாவது எழுத்தின்வழியாக அல்ல என்று எனக்குத் தெரியும். பாஸிஸம் ஒரு சித்தாந்தம், அது ஒரு சமூகச் சூழலின் விளைவு, அதிகார அமைப்பை முழுக்க மாற்றியமைக்கும்போது தோன்றுவது, அது ஆளுமையோ மனநிலையோ அல்ல. மனுஷ்ய புத்திரன் தன் இளமையிலிருந்தே கொஞ்சம் அனார்க்கிஸமும் (அரசின்மைவாதம்), தாராளாவதமும், குடிமைச் சமூகத்தின் முக்கியத்துவம் குறித்த பிரக்ஞையும் கொண்டவர். இந்த பிரதான குணங்கள் அவரது பல்வேறு நடவடிக்கைகளில், சொற்களில், முடிவுகளில் வெளிப்படும். அவரது உதிரியான சில குணங்களையும் அறிவேன். ஒரு குறிப்பிட்ட சூழலில் இதற்கெல்லாம் நேர்மாறான ஒரு அணுகுமுறையை அவர் எடுக்கலாம், தொனியை வெளிப்படுத்தலாம், அது அவராகாது. இதே போல இன்னும் பத்து கட்டுரைகள் எழுதினாலும் அவர் பாஸிஸ்ட் ஆகப் போவதில்லை. பாஸிஸ்டுகள் கட்டுரை எழுதுவோர் அல்ல, பாஸிஸ்டுகள் பாஸிஸத்தன்மை கொண்ட இயக்கங்களை கட்டியெழுப்பி உருவாகும் ஆளுமைகள். ஆகையால் நான் அவரை பாஸிஸ்ட் என்று சொன்னதாக அவர் சொன்னது அவர் மொழியில் விளையாட்டாகச் சொல்வதானால் ஒரு ‘பச்சைப் பொய்’. சிலநேரங்களில் நாம் வாக்கியங்களில் வரும் சில சொற்களை கற்பனையில் பெருக்கி ஒரு சித்திரத்தை எழுப்புவோம். அது உண்மையல்ல. அதனாலே இவ்விளக்கம்: அவரே நினைத்தாலும் பாஸிஸ்ட் ஆக முடியாது. பாஸிஸம் தனிமனிதத் தன்மையல்ல.
அடுத்து, நான் ஏன் என் நேற்றைய கட்டுரையின் துவக்கத்திலும் முடிவிலும் கடும் விமர்சனத்தின் மத்தியில் மனுஷ்ய புத்திரனைப் பாராட்டுகிறேன், ஏன் அவரிடத்து என் அன்பைத் தெரிவிக்கிறேன், அதன் அவசியமென்ன என்று சில நண்பர்கள் நேற்று என்னிடம் கேட்டார்கள். கருத்தும் தனிமனிதரும் ஒன்றல்ல, கருத்தும் தனிமனிதச் செயல்பாடும் அத்தனிமனிதரும் கூட ஒன்றல்ல என்று நான் நம்புகிறேன். நமது வெளிப்பாடுகள் வெளியில் இருந்து வருவன, அவற்றை நாம் பிரதிபலிக்கிறோம், அதைத்தாண்டி நம்மால் ஒன்றுமே சொல்லவோ பேசவோ முடிவதில்லை. உள்ளுக்குள் நாம் நமது உள்வெளி மனிதர்களுடன் உரையாடுகையில் ஓரளவுக்கு நமது நம்பிக்கைகள், விழுமியங்களுடன் இணக்கமாக இருக்கிறோம், அதுவுமே அவர்களையும் சூழலையும் நாம் தீர்மானிப்பதால்தான். சூழல் மாறும்போது மனிதர்கள் மாறுவதாக தோற்றம் ஏற்படும், அது வெறும் தோற்றமே, அவர்கள் சூழலைப் பிரதிபலிப்பார்கள், உள்ளுக்குள் இன்னொருவராக இருப்பார்கள். அங்கு நாம் சென்றால் தமக்கு இணக்கமான அச்சூழலையும் அதன் உணர்வுகள், எண்ணங்களையும் பிரதிபலிப்பார்கள். பொதுவாழ்க்கையில் நமது உள்வாழ்க்கையும் சிலநேரங்களில் வெளிச்சூழலாக மாறும். சிலநேரங்களில் இரு வாழ்க்கைகளிலும் இருவராக மக்கள் இருப்பர்.
இதை நான் மனுஷ்ய புத்திரனிடம் மட்டுமல்ல, வேறு சில எழுத்தாள நண்பர்களிடமும் கண்டிருக்கிறேன். அவர்கள் முரண்படுகிறார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, அதுவே நம்மால் இயன்றது. அதனாலே கருத்தை எதிர்ப்பது, மிகக்கடுமையாக, மிக மூர்க்கமாக எதிர்ப்பது, ஆனால் தனிமனிதரை விரோதியாக பாவிக்காமல் இருப்பது உத்தமம். நான் என்னதான் மனுஷ்ய புத்திரனை எதிர்த்து எழுதினாலும் அவர் மீதுள்ள என் நேசம் துளிகூட மாறுவதில்லை.
அதென்ன நேசமென்று இரு நண்பர் கேட்டார்கள்: அவர் எனக்கு பொருளியல் ரீதியாக என்ன செய்திருக்கிறார்? எப்போதும் எனக்காக இருந்திருக்கிறாரா என்றும் கேட்டார் அந்நண்பர்கள். நானும் அவருக்கு எதுவும் பொருளாகக் கொடுத்ததோ அவருடன் நெருக்கடியின்போது இருந்ததோ இல்லையே என்றேன். அதெல்லாம் அவசியமில்லை என நினைக்கிறேன்.
சரி, அதென்ன நேசம்? அதன் பொருளென்ன? சிலர் நம்மீது செலுத்தும் தாக்கம் நேரடியாக திட்டமிட்டதாக இருக்காது. கண்ணுக்கே தெரியாமல் அது நமக்குள் வேலை செய்யும், நம்மை மேலான மனிதராக்கும். அவர் மீதுள்ள என் பிரியம் எனக்குள் நான் உணரும் அவரது தாக்கத்தில் இருந்து வருகிறது. என் தலைமைப் பண்பில் அவரது நிழல் விழுவதை உணர்ந்திருக்கிறேன். அவரை நுணுக்கமாக கவனித்து வாதம் செய்வதைக் கற்றிருக்கிறேன். இன்னும் வார்த்தைகளால் சொல்ல முடியாத எத்தனையோ விசயங்கள் உள்ளன; நாம் ஒரு கடைக்குச் சென்று பிடித்த விசயங்களை அவ்வப்போது பொறுக்கி வந்து நமக்கான உலகை மேம்படுத்துவதைப் போல நண்பர்கள் நமக்குள் சிறுதுணுக்குகளாக, நிழல்களாக, சலனங்களாக வருகிறார்கள்; இதை இன்னொருவருக்கு நியாயப்படுத்த, விளக்க முடியாது. நட்பென்பது கொடுக்கல் வாங்கல்ல, ஒத்துப் போவதல்ல, அது கண்ணுக்குப் புலனாகாத விதத்தில் பரஸ்பரம் மகிழ்ச்சியாக்குவது, நிரப்புவது என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார். நான் அந்தளவுக்கு அவருக்கு நட்புக்கரம் நீட்டியதில்லை, சிறந்த நண்பராக இருந்ததில்லை, ஆனால் அவர் இருந்திருக்கிறார்.
நான் அவரது பத்திரிகையில் எழுதியது கூட பொருட்டில்லை, நான் எப்படியோ எங்கெங்கோ எழுதி உள்ளே வந்திருப்பேன் என இப்போது தோன்றுகிறது. ஆனால் அவரது ஆளுமையே என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இதுவே அவர் மீதான என் மட்டற்ற நேசத்தின் காரணம். அதை விளக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது. எனக்கு அவரிடம் எவ்வளவு கோபம் வந்தாலும், விமர்சனம் தோன்றினாலும், வெறுப்பு வந்தாலும் நெருப்பின் மையம் போல இந்த நேசம் இருந்துகொண்டே இருக்கும். இதை அர்ப்பணிப்புணர்வு, வழிபாட்டு மனநிலை என்றும் கூற மாட்டேன். அதற்கான பித்து நிலை என் இயல்பில் இல்லை. இதை ஒருவித நட்பு என்பேன்.
இது மன்னிப்புக் கடிதமோ, காதல் கடிதமோ அல்ல. என் நிலைப்பாட்டை என் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என நினைத்தேன். நான் எதையும் மறைத்து வைப்பதில்லை. என் நெஞ்சில் உள்ளது சொற்களில் அப்படியே பிரதிபலிக்கும்.
சுருக்கமாக, அவரது சொற்களின் தொனி தவறானது, அவரது கருத்துக்களுடன் முரண்படுகிறேன். என் தார்மீக நிலையில் இருந்து தற்காலிக எதிர்ப்பும் விமர்சனமும். அதைத்தாண்டி அவரை வெறுக்க நான் மிகக்கடுமையாக முயல வேண்டும். அதற்கு எனக்கு சக்தியில்லை. எனக்கு தனிமனித வெறுப்பில்லை, கோபமில்லை எப்போதுமே. பெரிய மலைச்சிகரங்கள் எப்போதும் இருந்துகொண்டிருப்பதைப் போல இந்த பிரச்சினைகள் தீர்ந்து மேகங்கள் கலைந்தபின்னரும் நாம் வெளிப்படுவோம், நீடிப்போம்தானே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.