முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்கிலிஷின் தத்துவப் பிரச்சினை


தங்கிலிஷ் பயன்பாடு குறித்த நீயா நானா விவாதத்தைப் பார்த்தேன். நல்ல விவாதம் - தங்கிலிஷில் எழுதப்படுவதால் தமிழ் லிபியின் புழக்கம் குறைவதாகவும் அழிவதாகவோ கருதும் முன்பு நாம் இருபதாண்டுகளுக்கு முன்பு நாம் அதிகமாக இந்த லிபியைப் பரவலாகப் பயன்படுத்தியதாகக் கூற வேண்டும். அது உண்மையா? இல்லை. முதலில், 90கள் வரைக்கும் தினசரி நாம் தமிழில் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகமாக எழுதிக் கொண்டிருந்தோமா? இல்லை. நாம் (வெகுமக்கள்) உச்சபட்சமாக எழுத்து மொழியைப் பயன்படுத்தியது கடிதங்களின்போதே. ஏனெனில் மொழியின் ஜீவநாடி பேச்சிலே உள்ளது. மக்கள் தமிழில் பேசுவதைக் குறைக்கும்போதே நாம் அஞ்ச வேண்டும். எழுதுவதைக் குறைக்கும்போதல்ல.

அடுத்து, கடந்த இருபதாண்டுகளில்தாம் நாம் அதிகமாக 'எழுதத்' தொடங்கியுள்ளோம். திறன்பேசியும் சமூகவலைதளமும் நம்மை இன்று மிக அதிகமாக எழுத வைக்கின்றன. தமிழில் பரவலாக எல்லாரும் எழுதுவதில்லை. சில ஆயிரம் பேர்களே எழுதுகிறோம். சில லட்சம் பேர்கள் படிக்கிறோம். 1-2%தாம். ஆகப் பரவலாக தமிழில் வாசிக்கவோ எழுதவோ நம்மால் முடியாமல் போவதே நெருக்கடி. நான் கவனித்தவரையில் அடுத்தடுத்த தலைமுறைகள் ஆங்கிலத்தில்கூட சரிவர பேசவோ எழுதவோ தெரியாதவர்களே. பள்ளிக்கூடங்கள், காட்சி ஊடகம், அரசியல் கட்சிகள் என எல்லாருமே அதற்குக் காரணம்.

தங்லிலிஷ் ஏன் உறுத்துகிறது எனில் அதிகமாக மக்கள் முதன்முறையாக தமிழில் எழுதும்போது எழுத்து மொழி - தொழில்நுட்ப வடிவம் - தமிழில் இல்லையென்பது உறுத்துகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல கன்னடத்துக்கும் இந்திக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிதான். முதலில், அரசு பண்பாட்டுக் கல்விக்கும், மொழிக்கும் முதன்மை அளித்து அதிக நிதியளிக்க வேண்டும். அதிகமான தமிழ்ச் சொற்களை தமிழர்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும். சொல்வளம் பெருகினால் ஒழிய சரளமாகத் தமிழில் பேச இயலாது. அதற்கு வாசிக்கவும் எழுதவும் வேண்டும். அடுத்து எழுதவும் நிறைய பேர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு பள்ளிக் கல்வித்துறைப் பொறுப்பேற்க வேண்டும். நிதி தான் இதற்கெல்லாம் அடிப்படை. தொழில்நுட்பத்திலும் கட்டுமானப் பணிகளிலும் நாம் செய்யும் நிதி முதலீட்டில் 0.5% கூட மொழியிலோ பண்பாட்டிலோ செய்வதில்லை. அப்போது மக்களும் சிமிண்டையும் களிமண்ணையும் போலத்தான் மாறுவார்கள்.

தமிழ் ஊடகங்களிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாட்டை அரசை சட்டரீதியாகக் கொண்டு வரவேண்டும்.

அதேநேரத்தில் தமிழைப் பண்பாட்டு மொழியாகக் கருதி அதைப் பாதுகாப்பது இனிமேல் எடுபடாது. அதாவது தூய தமிழ்வாதம் இனிமேல் பொருளற்றுப் போகும். ஏனெனில் சாராம்சமான பண்பாடு என ஒன்று இனிமேல் சாத்தியமில்லை. இது பின்நவீன யுகம். ராஜகோபால் குறிப்பிட்ட கொரியன் சினிமா, பாப் பண்பாட்டுத் தாக்கம் வெறுக்கத்தக்கது அல்ல. பல்வேறு மொழிகளின், பண்பாடுகளின் அடையாளங்களின் கலப்பின் ஊடாகவே இனிமேல் நமது தன்னிலையை நாம் உணர முடியும். சாராம்சமான பண்பாட்டில் தங்காமல் வெளியேறுவதே சமகால அரசியல். அதைத் தமிழ்தேசிய அணுகுமுறையால் எதிர்க்க இயலாது. தன்னில் இருந்து வெளியேறுவதே இன்றைய மனநிலையாக இருக்கையில் மனிதர்கள் தாமாக இல்லாமல் இருப்பதையே விரும்புகிறார்கள். இதுவே அடிப்படையான பிரச்சினை - தமிழைக் கற்றுத் துல்லியமாகத் தூய்மையாகப் பேசுவதும் எழுதுவதும் தற்சுருங்கலாக அவர்களுக்குப் படுகிறது. இது தவறல்ல. இது பின்னமைப்பியல் மனநிலை.

உதாரணமாக, உங்களிடம் ஒரு ஜட்டி உள்ளது. அதைத் தினமும் துவைத்துப் போட்டு அணியலாம். ஆனால் இன்றைய மக்கள் ஐம்பது ஜட்டிகளை வாங்கி ஒரு நாள் கொரிய ஜட்டி, இன்னொரு நாள் சீன ஜட்டி, அமெரிக்க, இங்கிலாந்து, ஜப்பானிய ஜட்டிகள், ஒருநாள் கோமணம் என அணிய முடியுமெனில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். மொழியும் மக்களுக்கு இதுதான். அவர்களிடம் ஒற்றை மொழியைக் கொடுத்து அதை மட்டுமே சாராம்சமாக பயன்படுத்தச் சொன்னால் அது கடுமையான நடைமுறையாக, தட்டையான ஒன்றாக அவர்களுக்குத் தோன்றும். தமிழை பல்வேறு மொழிகளைப் போன்றே ஒழுங்காக அடிப்படையைக் கற்றுத் தெரிந்து பயன்படுத்துவதே இனி சரியானதான இருக்கும். மகுடேஸ்வரன்களின் காலம் முடிந்துவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.