முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்தின் Bazballஐ முறியடிக்கும் வியூகம்

 



இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பாணி 50 ஓவர் ஆட்டத்துக்கு உரியது. நான் மட்டையாட்டத்தைச் சொல்லவில்லை. வியூகத்தைச் சொல்கிறேன்.
தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது ஓவர் போட்டியை வெல்ல சிறந்த வழி இரண்டாவதாக மட்டையாடுவதுதான். ஸ்டோக்ஸும் அதனால்தான் பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகிறார். ஆடுதளம் மிகத் தட்டையாக இருக்கும். ஆனாலும் அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் மெனெக்கெடப் போவதில்லை. இன்றைய மட்டையாளர்கள் எப்படி ஆடினாலும் ஒன்றரை - இரண்டு நாட்களுக்கு மேல் ஆடப் போவதில்லை. அதனால் ஸ்டோக்ஸ் அவர்களது ரன் ரேட்டை மட்டுமே கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களைக் கேட்கிறார். இப்போது நிகழ்ந்து வரும் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் (ஹெடிங்லி) இந்தியா முதலில் மட்டையாடி நானூற்று சொச்சம் ரன்களை அடித்தாலும் அவர்களது ரன்ரேட் 4தான். ஆனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடியபோது 4.5 ரன்ரேட்டில் ஆடி அந்த ஸ்கோருக்கு நெருங்கி வந்தார்கள். அடுத்து இந்தியா மட்டையாடியபோது ஸ்டோக்ஸ் இந்தியாவின் ரன் ரேட்டைக் குறைக்கவே பிரயத்தனப்பட்டார், விக்கெட் எடுக்க அல்ல. குறைநீளத்தில், காலுக்கு வெளியே வைடாக வீசுவது, எதிர்மறையான களத்தடுப்பை அமைப்பது, மட்டையாளர்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பது என. இந்தியாவின் சராசரி ரன்ரேட் இரண்டாவது இன்னிங்ஸில் 3.5 ஆக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து 4.5 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி முன்னூற்று சொச்சம் இலக்கை சுலபத்தில் அடைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்மைக் காலங்களில் இங்கிலாந்தில் ஆடுதளமானது 5வது நாள்தான் மட்டையாட்டத்துக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் டியூக்ஸ் பந்தும், ஹெவி ரோலரும் மட்டையாட்டத்தை லட்டு சாப்பிடுவதைப் போலாக்குகிறது. அதனால் ஸ்டோக்ஸின் இலக்கு கடைசி நாள் மட்டையாடுவதும் 90 ஓவர்களுக்குள் அடிக்கிற மாதிரியான இலக்கைப் பெறுவதும்தான். அதற்காகத்தான் அவர் எதிரணியின் ரன் ரேட்டைக் குறைக்க மட்டும் போராடுகிறார், விக்கெட்டுகளை எடுக்க அல்ல. ஏனென்றால் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 4.5 ரன் ரேட்டில் ஆடியிருந்தால் கடைசி நாள் இலக்கு 450ஐத் தாண்டி இருக்கும். ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்திருக்கும். முதல் 20 ஓவர்கள் பும்ரா நன்றாக வீசி ரன் ரேட்டை 6க்கு கொண்டு வந்தால் அது சேஸிங்கைச் சிக்கலாக்கும். இப்படி ஸ்டோக்ஸ் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்கும்விதமே வித்தியாசமானது. அவரிடம் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினாலும் எடுபடாது. முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைந்தால் மட்டுமே ஸ்டோக்ஸ் இந்த அணுகுமுறையைக் கைவிடுவார்.

ஸ்டோக்ஸை ("பேஸ்பாலை") முறியடிக்க முதலில் தட்டையான ஆடுதளத்தில் டாஸ் ஜெயித்தால் இங்கிலாந்தை மட்டையாட வைக்க வேண்டும். அவர்களுடைய ரன் ரேட்டைக் குறைத்து நமது பந்து வீச்சின் ஓவர் ரேட்டையும் குறைக்க வேண்டும். எதிர்மறையான உத்திகளைக் கையாள வேண்டும். அல்லது நாம் முதல் நாள் மட்டையாட நேர்ந்தாலும் ரன் அடிப்பதைவிட அதிக நேரம் மட்டையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 2.5 நாட்களையாவது தின்று விட வேண்டும். எனில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு மட்டையாட அரை நாள்தான் கிடைக்கும். இது அவர்களைக் கடுமையாக வெறுப்பேற்றும் என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்து சிக்கிக் கொள்வார்கள். அதே போல அவர்களுடைய வேகவீச்சாளர்கள் காயம்பட வாய்ப்பு அதிகமாகும். பந்து வீசி ஜெயிக்கவே வாய்ப்பில்லாத ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை இங்கிலாந்து கியூரேட்டர்களும் பந்து தயாரிப்பாளர்களும் ஏற்படுத்தும்போது எதிர்மறை கிரிக்கெட்டின் வழியாக மட்டுமே அதைச் சமாளிக்க முடியும். இதையே இன்று கில் செய்ய முயன்றார். அதிகப் பந்துகளை ஆட முயன்றார். ஒரே பிரச்சினை ஜெய்ஸ்வாலும் பண்டும் இந்த வியூகத்துக்கு ஏற்ப ஆடாமல் அதிக ஷாட்களை ஆட முயன்றார்கள். ஜெய்ஸ்வால் 250 பந்துகளில் சதம் அடிக்க முயன்றிருக்க வேண்டும். எனில் அவரும் கில்லுமாக தலா 300 பந்துகளை ஆடியிருந்தால், இன்னும் சிலர் தலா 100 பந்துகளை எடுத்திருந்தால் ஒரே இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் பேஸ்பால் வியூகத்தை நாசமாக்க முடியும் (ஆனால் அவர்கள் வேகமாக ஆடி ஆட்டமிழந்தார்கள்). முதல் இன்னிங்ஸில் எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பதல்ல எத்தனை நாட்கள் ஆடுகிறோம் என்பதை ஸ்டோஸுக்கு ஆப்படிக்க உதவும். இதை இரண்டு போட்டிகளில் செய்தால் இங்கிலாந்து வேறு வழியின்றி தன் ஆடுதளங்களை மாற்றும் நிலை வரும்.

இதைத்தான் அஷ்வினும் தன் யுடியூப் சேனலில் வலியுறுத்துகிறார். முதல் டெஸ்டில் இந்தியா இதைப் புரிந்துகொள்ளாமல் நான்காவது நாளே பந்துவீச விரும்பி கடைசி ஐந்து விக்கெட்டுகளை வேகமாக அடிக்கும் நோக்கில் தியாகம் செய்தது. ஐந்தாவது நாள் உணவு இடைவெளி வரை ஆடிவிட்டு இங்கிலாந்துக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் தட்டையான ஆடுதளத்தில் 350-400 என்று இலக்கை அதிகப்படுத்துவார்கள். அதாவது ரன் ரேட்டை உயர்த்துவார்கள். இங்கிலாந்தில் இதைச் செய்ய சிறந்த மார்க்கம் இங்கிலாந்துக்கு மட்டையாடக் கிடைக்கும் பந்துகளைக் குறைப்பதுதான். இது தடுப்பாட்டம் அல்ல, இங்கிலாந்தில் இதுதான் புத்திசாலித்தனமான ஆட்டம்.

இரண்டாவது டெஸ்டில் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா 450 அடிக்கிறதா என்பதல்ல நாளை மாலை வரையில் அல்லது நாளைக்கு அடுத்த நாள் காலை வரைக்கும் கில், ஜடேஜா, சுந்தரால் ஆட முடியுமா என்பதே இந்தியாவின் எழுச்சிக்கான அளவுகோல். நாளை மதியத்துடன் ஆல் அவுட் ஆனால், அவர்கள் அந்த ஸ்கோரை 100 ஓவர்களில் அடித்துவிட்டு நான்காவது நாள் மாலைக்குள் இந்தியாவை ஆல் அவுட் பண்ணப் பார்ப்பார்கள். இப்போட்டியில் 5வது நாள் இங்கிலாந்து தமக்கு அளிக்கப்படும் எந்த இலக்கையும் சுலபத்தில் விரட்டி அடைந்துவிடும். ரன்கள் அல்ல, நேரமே இப்போட்டியைத் தீர்மானிக்கும் காரணி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.