முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வயநாடு பயணம்



 

கடந்த சனி, ஞாயிறு கேரளாவில் வயநாட்டுக்கு பைக் பயணம் மேற்கொண்டேன். என் நண்பரின் நண்பர் வழியாக அங்குதான் எழுத்தாளர் லைலாவைச் சந்தித்தேன். அதற்கு அடுத்த நாள் வயநாட்டில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவிற்கு அழைத்தார்கள். ஒரு மலையாள இலக்கியக் கூட்டம் எப்படி நடக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினால் சென்றேன். ஆனால் போனதும் அப்படியே அழைத்து மேடையில் அமர வைத்துவிட்டார்கள். 122 கவிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு அது. பெரும்பாலும் பெண் கவிகளால் அரங்கு நிரம்பியிருந்தது. இத்தனை பேர்கள் எழுதும் ஆர்வத்தில் இணைந்திருக்கிறார்களே என எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என்னை வாழ்த்துரை பேச அழைத்தார்கள். அண்மையில் மலையாள இலக்கியத்தில் வெகுஜன நாவல்களுக்கு பெரிய சந்தை தோன்றியுள்ளது. இவ்வருடம் சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்காரை மலையாளத்துக்காகப் பெற்ற அகில் தர்மஜன் அத்தகைய ஒரு சுவாரஸ்ய எழுத்தாளர் மட்டுமே. அவரது ராம் c/o ஆனந்தி எனும் நாவல் ஒரு கோடி ரூபாய் மதிப்புரிமைத் தொகையை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. இந்த விசயங்கள் அங்குள்ள இலக்கியவாதிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை கவனித்தேன். நான் அன்று கூட்டத்தில் இதைக் குறித்து ஒன்றைச் சொன்னேன் - எழுத்தாளர்கள் பிரபலமாக முயலக் கூடாது. பெருந்திரளை நோக்கி நாம் செல்லச்செல்ல நம் எழுத்தின் தரம் வாகனச் சக்கரத்தில் நசுக்கப்பட்ட எலியைப் போல ஆகும். சமூகவலைதளப் பிரசித்தம், சினிமா புகழ் கூட நம்மையே அறியாமல் நம்மை மேம்போக்கான ரசனைக்காக எழுத வைக்கும். இது நம் உபமனத்தில் நம்மையே அறியாமல் நிகழும் ஒன்று. புகழ் வெளிச்சம் கிடைக்காமல் இருப்பதே நம்மை உள்ளார்ந்த வெளிச்சத்தில் வைக்கும். புகழ் வெளிச்சம் நம்மை இருளில் மூழ்கடிக்கும். வியாபாரத்துக்காக மட்டும் எழுதுவோருக்கு இதெல்லாம் பொருட்டல்ல, நல்ல படைப்பாளிகளுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

அடுத்து நவீன மலையாள இலக்கியம் தோன்றி விரைவிலேயே முதலே அது வெகுமக்கள் சமூகத்தின் அறிவுச் சின்னமாக, கலாச்சார அடையாளமாக மாறிப் போனது (முற்போக்கு இயக்கங்களுக்கு அதில் முக்கிய பங்கிருந்தது). வாசிப்பதும், இலக்கிய பரிச்சயம் கொண்டிருப்பதும் மாநிலத்தின் பெருமையாக மாறியது. ஆனால் இதன் எதிர்மறைப் பயன் அவர்களுடைய இலக்கியம் நடுநிலை இலக்கியமாக மாறியது, தீவிரமான எழுது அங்கு அருகிவிட்டது என்பது. இப்போது அதன் இன்னொரு தீவிர எதிர்நிலையை எட்டுகிறார்கள் - இலக்கியமும் வெகுஜன எழுத்தும் ஒன்றாகிறது. இன்று சமூகவலைதளங்கள் வழியாகத் தம்மை அடையாளப்படுத்தி வாசகர் பரப்பை உருவாக்கிய எழுத்தாளர்களே அங்கு கவனம் பெறுகிறார்கள். மொழிபெயர்ப்பு வழியாகவும் ஒலிநூல்கள் வழியாகவும் நான் அறிந்த சமகால மலையாளப் புனைவுகள் குறித்த சித்திரம் இதுவே. சிறந்த இலக்கியம் மிகச்சிறிய புள்ளியை நோக்கி நகர்ந்துவிட்டது. ஆனால் இதிலும் ஒருவித அனுகூலம் உள்ளது - வெகுன படைப்பு × தீவிர இலக்கியம் எனும் எதிர்மை நல்ல இலக்கியம் தோன்றி வழிவகுக்கும். சிறு குழுவுக்காக எழுதுவது, பரிசோதனை முயற்சிகள் பண்ணுவது வலுக்கும்.
தொடர்ந்து எழுதுவதும், அதனால் தமக்குப் பணமும் புகழும் கிடைக்குமா எனக் கவலைப்படாமல் இருப்பதும் முக்கியம் என்றேன். உறவுகள், குடும்பம், வேலை, கேளிக்கை ஆகியவற்றால் கிடைக்கும் எதுவும் நிலைக்காது, உங்கள் குடும்பம், பிள்ளைகள் கூட நாளை இருக்க மாட்டார்கள் (இதைச் சொன்னதும் முன்வரிசையில் இருந்த பெண்கள் சிரித்தார்கள்), ஆனால் உங்கள் எழுத்து என்றும் உங்களுடன் இருக்கும். உங்கள் அஞ்சலிக் குறிப்பில் நீங்கள் ஒரு படைப்பாளி என வந்தால் நீங்கள் அதைவிடப் பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறப் போவதில்லை. இலக்கியம் உங்களை காலத்தைக் கடந்து வாழ வைக்கும் என்றேன்.
நான் பேசி முடித்து வந்தபின்னர் அது மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்ததாக இளம் படைப்பாளிகள் வந்து என்னிடம் கூறி தற்படம் எடுத்துக் கொண்டனர். ஒரு இளம் பெண் கவி என்னருகே அமர்ந்து தன் கவிதையைப் படித்துக் காண்பித்தார். சும்மா சுற்றலாம் எனச் சென்ற வயநாடு பயணம் என்றும் என் இப்படி நினைவில் ஜொலிக்கும் சித்திரமாக மாறியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.