எனக்கு கடுமையான விமர்சனங்களில் நம்பிக்கையில்லை. சொல்லப்போனால் எனக்கு இலக்கிய மதிப்பீடல், தரவரிசை, வெற்றி தோல்வியிலும் நம்பிக்கையில்லை. இன்னும் சொல்லப்போனால் என் கண் முன்னால் புத்தகங்களே உள்ளன, எழுத்தாளர்கள் இல்லை. ஒரு பிரதியின் போக்குகளை, அதில் தோன்றும் சிக்கல்களை அலசலாம். அதிலும் நம்மால் புறவயமாக சில தொழில்நுட்ப உள்ளோட்டங்களை மட்டுமே அடையாளம் காண முடியும். வாசிப்பில் விரியும் படைப்பானது தோன்றி விகசிக்கும் மானுடப் பிரக்ஞை. புத்தகம் என்பது எழுதப்பட்டதோ, வாசிக்கப்படுவதோ அல்ல என்று நினைக்கிறேன். அதனாலே அது உடலுறவுக்கு நெருக்கமான அனுபவம். அது நம்மை இன்மைக்கு வெகு நெருக்கமாகக் கொண்டு போகிறது. எழுதி முடிக்கையில் மட்டுமல்ல எழுதும்போது கூட ஒரு படைப்பாளி மரணித்துவிடுவது இதனாலே. நான் இவ்விசயத்தில் விதிவிலக்கானவன் என நினைக்கிறேன்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்