முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் சட்டம் ஏன் திருமணம் மீறிய உறவைக் குற்றமாகப் பாவிப்பதில்லை?



உலகம் முழுக்கவே மக்கள் எந்த விழுமியத்தையும் முழுமையாக நம்புவதோ கடைபிடிப்பதோ இல்லை. பாலியல் ஒழுக்கமும் அப்படியானது. பாதிக்கு மேல் திருமணங்களைக் காப்பாற்றுவதே திருமணத்தை மீறிய பாலுறவுகள்தாம். எதாவது ஒரு கட்டத்தில் மீறாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
ஏனென்று கேட்போம். மனிதன் மட்டுமல்ல எந்த விலங்கும் பாலியல் ஒழுக்கத்தைத் தம் இயல்பாகக் கொண்டவர்கள் அல்லர். அதாவது பாலியல் ஒழுக்கம் இயற்கை நியதி அல்ல. அது குடும்பத்தை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் - "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூலில் ஏங்கல்ஸ் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட உருவாக்கப்பட்டது என்கிறார். நிலம் என் உரிமை என்பதை நிலைநாட்ட அது நிரந்தரமாக எனதாக இருக்க வேண்டும், அதற்கு எனக்கு என்று ஒரு குழந்தை வேண்டும், அதற்கு என்னிடம் மட்டுமே பாலுறவு கொள்ளும் மனைவி வேண்டும் என இந்தத் தர்க்கம் போகிறது. விவசாயச் சமூகத்தில் இதற்கான தேவை இருந்தது (ஆனால் அன்றும் இந்த ஒப்பந்தத்தை எல்லாரும் மீறி இருப்பார்கள். அதனால் தான் தே.பையா எனும் வசைச்சொல் எல்லார் நாவிலும் உள்ளது. இது ஒரு நிலவுடைமைச் சமூகப் பதற்றம்தானே ஒழிய ஆணாதிக்க மனநிலை அல்ல.) இன்று இந்த ஒப்பந்தத்தால் சொத்து சார்ந்த பயனில்லை - சொத்தைச் சேர்ப்பது மிகவும் கடினமாக இன்று உள்ளது. பணமும் பணவீக்கத்தால் சீக்கிரம் விரயமாகி விடும். சமூக மதிப்பு ஒன்றுதான் இன்று பாதுகாக்கப்பட வேண்டியது என நினைக்கிறோம்.

கூடுதலாக மற்றொன்றும் உள்ளது - நமது காதலரோ காதலியோ இணையரோ நம்முடன் மட்டுமே பாலுறவு கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் ஒரு பாதுகாப்பு உள்ளது; அது உறவை நீடிக்க சில நேரங்களில் உதவுகிறது; நோய்த்தொற்றில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. மனம் திடீர் திடீரென அலைபாயக் கூடியது, ஒரு அற்ப உறவுக்காக நாம் ஒரு சிறந்த உறவைத் தொலைக்க சில நேரங்களில் துணிச்சலைக் காட்டுவோம். பாலுறவு விரைவில் இதை நோக்கி நம்மைத் தள்ளக் கூடும். இன்னொரு பக்கம் ஒருவர் மனம் மாறும்போது அதற்கு இன்னொருவர் உடன்படவில்லை எனில் அவரிடம் இருந்து விடுதலை பெறவும், சொத்தையும் பணத்தையும் களவாடவும் வன்முறையைப் பயன்படுத்துவார்கள், கொலையும் செய்வார்கள். முதிர்ச்சி உள்ளோரும் நாணயமானவர்களும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு திருமணத்தை மீறிய உறவுகளில் ஈடுபட்டால் ஒருவேளை சிக்கல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எப்படியும் பிரதான உறவு சாரம் இழக்கவே செய்யும். ஆகையால்தான் நாம் திருமணம் செய்கிறோமோ இல்லையோ குறைந்தபட்ச ஒழுக்கத்தை அதனுள் செயல்படுத்துகிறோம், ஏதோ ஒரு மெல்லிய ஒப்பந்த்தத்தைப் பின்பற்றுகிறோம்.

இதனிடையே எந்த நீடித்த உறவும் தன் நிறத்தை இழந்து வெளுத்துப் போகிறது. அலுப்பு ஏற்படுகிறது. என்னதான் தெரப்பி எடுத்துக் கொண்டாலும் சரி செய்ய முடியாது. விலகி விடலாம் என்றால் குழந்தை, உறவுகள் என ஏகப்பட்ட கால்விலங்குகள். ஆண்களுக்குக் கூடுதலாக வக்கீல் செலவு, ஜீவனாம்சம், ஒன் டைம் செட்டில்மெண்ட், குழந்தையைப் பறிப்பது என ஜட்டி வரைக்கும் உருவி விட்டு விடுவார்கள். இது நிம்மதியாக விவாகரத்து செய்ய முடியாமல் அவர்களைத் தடுத்து வைக்கிறது. இதனாலே இன்று பெண்களே அதிகமாக உலகம் முழுக்க விவாகரத்தை நாடுகிறார்கள். காரணம் கேட்டால் கணவனுக்கு ஆண்மை இல்லை, அவன் வேறு பெண்களை நாடுகிறான் எனப் பொய் சொல்வார்கள். நிஜக்காரணம் அலுப்பும் கசப்பும்தான். நம் சமூகம் திருமண உறவையும் விவாகரத்தையும் லகுவாக்கி விவாகரத்தைப் பாலினப் பாகுபாடற்றதாக்கவரை (gender neutral) இது தொடரும்.

நாம் இன்று மெல்ல மெல்ல இதைக் குறித்து குற்றவுணர்வில் இருந்து கூட மீண்டு வருகிறோம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள். பொதுவெளியில் ஒப்புக் கொள்ள மட்டும் முடியாதவிதம் ஒருவித கண்காணிப்பு நிலவுகிறது. பாலியல் கண்காணிப்பு ஒருவித அதிகாரத்தை நமக்கு வழங்குகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்துகிறோம். ஆகையால் ஒருவிதமாக கலந்து கட்டி வாழ்கிறோம்.

நாம் ஏன் செலிபிரிட்டிகளின் ஒழுக்கம் விசயத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்றால் அவர்களை ஒழுங்குபடுத்த நமக்கு அது ஒரு உளவியல் வாய்ப்பை அளிக்கிறது என்பதால்தான். அதே நேரத்தில் இதே அக்கறையை யாராவது நம்மிடத்தே காட்டினால் பயந்து போவோம்? கேட்டால் செலிபிரிட்டுக்கு அந்தரங்கம் இல்லை, அரசியல் தலைவருக்கு அந்தரங்கம் இல்லை என்பார்கள். இங்கு எல்லாருக்கும் அந்தரங்கம் உண்டு - விஜய்க்கும், உதயநிதிக்கும், மோடிக்கும் கூட உண்டு; அவர்கள் பொதுவெளியில் இருப்பது ஒரு பணியை ஆற்ற. அவர்களைக் கண்காணிக்க, மதிப்பிட நமக்கு உரிமையில்லை.

பாலியல் ஒழுங்கீனம் வேறு, பாலியல் குற்றம் (பலாத்காரம், கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது, கொல்வது) வேறு எனும் தெளிவு கூட நமக்கு இல்லை.

சட்டம் பொதுவாக சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் நடைமுறை நிலையைக் கருத்திற்கொண்டே உருவாகும். திருமணத்தை மீறிய உறவு ஒரு குற்றமில்லை என்று சட்டம் ஏன் சொல்கிறது என்று நீங்கள் ஏன் இதுவரை ஒருமுறை கூட கேட்டதில்லை. நான் இதுவரை எங்குமே இதை யாரும் கேள்வி கேட்டுப் பார்த்ததில்லை. ஏனென்றால் இது குற்றமானால் திருமணம் செய்தவர்களில் பாதிக்கு மேலானவர்கள் எப்போதாவது சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். (இந்தப் பாதிக்கு மேல் என நான் சொல்வது கூட படிப்பவர்களின் மனநிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்பதற்குத்தான்.) ஆகையால் சட்டம் நீங்கள் கல்யாணப் பந்தத்துக்குள் இருந்தபடி 'தவறு' செய்யுங்கள், ஆனால் உங்கள் இணையரிடம் ஒரு நல்லுறவில், புரிதலில் இருந்துகொண்டு செய்யுங்கள் என்கிறது. உங்கள் பிறழ்வு அவர்களைத் தொந்தரவு செய்தால் அவர்கள் அதைக் காரணம் காட்டி அவர்கள் உங்களை விவாகரத்துச் செய்யலாம் என்கிறது.

சுருக்கிச் சொல்வதானால், 'திருமணத்துக்குள் ஒழுக்க மீறல் உங்களுக்குச் சிரமமாக இருந்தால் மட்டுமே விவாகரத்துக் கோருங்கள்' என்கிறது நீதிமன்றம், அது தன்னளவில் தவறில்லை, இயல்பானது என்கிறது. இப்போது நடிகர் விஜய் விசயத்துக்கு வருவோம் - அவர் ஒரு நட்சத்திர நடிகர் என்பதால் பல பெண்களின் அணுக்கம் அவருக்குச் சுலபத்தில் கிடைத்திருக்கும் என சிலருக்கு அவரிடம் பொறாமை இருக்கலாம். ஆனால் எந்தப் பணமோ அதிகாரமோ இல்லாதவர்களுக்கு கூட பல்வேறு உறவுகள் அமைவதைப் பார்க்கிறோம். ஆகையால் இது பொருட்படுத்தத்தக்கது அல்ல. திருமணத்தை மீறி எத்தனைப் பெண்களுடன் உறவு வைப்பதும் அவரது விருப்பம், உரிமை, அது சட்டப்படி குற்றமும் அல்ல, நடைமுறையில் நிகழாததும் அல்ல.

நம் விஜய் வெளிநாட்டுக் காருக்கு இறக்குமதி வரி செலுத்தாமலே அதற்காக பல வருடங்கள் நீதிமன்றம் சென்றவர். ஆகையால் அவர் தன் பாதிச் சொத்தை தன் மனைவிக்குக் கொடுக்க மனமில்லாமல் நீதிமன்றத்தில் இழுத்தடித்திருப்பார். அவரைப் போன்ற பணக்காரர்களுக்கு இது சுலபம். இழுத்தடித்தால் அமெரிக்கா வாழ் மனைவி வெறுத்துப் போய் பேரத்தில் ஒன் டைம் செட்டில்மெண்ட் குறையும் என வக்கீல் சொல்லியிருப்பார். அப்போதுதான் சங்கீதா தரப்பு தேர்தல் சமயம் என்பதால் அழுத்தம் போடுவதற்காக நீதிமன்ற ஆவணங்களை வெளியே விட்டிருப்பார்கள். இதில் திமுகவுக்கும் ஏதோ ஒரு பங்கிருக்க வேண்டும் - ஏனென்றால் திமுக ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் நேரடியாகவே சங்கீதாவை ஆதரிப்பதைப் பார்த்தால் இது தேர்தல் பரப்புரையின் பகுதியோ எனத் தோன்றுகிறது. விஜய் ஆரரவுப் பெண் வாக்காளர்களைக் கசப்படைய வைக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். எனக்கு இந்த அரசியல் நரேட்டிவ் செட்டிங்கில் ஆர்வம் இல்லை.

நான் வலியுறுத்துவது ஒன்றைத்தான் - இந்தப் பிறழ்வை ஒரு பெரிய குற்றமாகப் பாவித்துச் சாடுவது நமது பாலியல் சுதந்திரத்தை எதிர்காலத்தில் பாதிக்கும். நாம் ஏற்கனவே மோசமான கண்காணிப்புச் சமூகமாக மாறி வருகிறோம். எதிர்காலத்தில் யார் எந்த சமூகத்து, மதத்து ஆளுடன் பிறழ்வுறவில், காதலுறவில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒன்றிய, மாநில அரசுகள் கண்காணிக்கும் நிலை வரும் (அது இன்று மிக மிக சுலபமானது). விஜய்-சங்கீதா விவாகரத்து விசயத்தில் இப்போது நாம் காட்டும் கண்காணிப்பு ஆர்வம் நாளை நம் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதகமாகும். அவர்கள் அன்று ஒரு மிகு-பாலியல் ஒழுக்க அரசால், கட்சியினரால், இயக்கங்களால் வேட்டையாடப்படுவார்கள். மேலும் இன்று விஜய்யை நோக்கி நீளும் கரம் விரைவில் உதயநிதி, மாநில அரசிலுள்ள அதிகாரிகள், அமைச்சர்கள், ஒன்றிய அரசு அமைச்சர்கள் மீதும் நீளும்.

இது ஒரு செயற்கையான நியதி, விழுமியம் என்பதைப் புரிந்துகொண்டு நாம் நம் மனப்பிறழ்வைக் கைவிட வேண்டும். சதா நேரமும் பாலியல் ஒழுக்கம் பற்றிக் கவலைப்படுவோருக்கு நிச்சயமாக தெரப்பி அவசியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...