முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமல் தவற விட்ட வாய்ப்பு

 


விஜய் என்னதான் ஒரு கோமாளித் தலைவர் என்றாலும் அவர் தன் கட்சியை ஆரம்பித்தது முதலே வைத்த 'பிட்ச்' எனக்குப் பிடித்திருந்தது. (அவருக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர்கள் விளம்பர நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.) ஏரியல், சர்ப் எக்ஸல் விளம்பரங்களில் கறைதான் 'ஒரே ஒரு எதிரி'. விஜய்க்கு ஸ்டாலினே ஒரே எதிரி. இன்னும் சொல்லப்போனால் அவர் திமுக என்றுகூட கூட முயலவில்லை. தொடர்ச்சியாக ஸ்டாலின் சார் என்றே பேசிப்பேசி தன்னை அவருக்குச் சமமாக பாவித்துக் கொண்டார். என்னதான் அவர் பாஜகவை விமர்சிக்காதது சிலருக்குப் பிரச்சினையாகத் தெரிந்தாலும் அதுவும் ஒரு நல்ல உத்திதான் எனத் தோன்றுகிறது - இது மாநிலத் தேர்தல். இங்கு பாஜகவைத் தாக்கிப் பேசினால் அதற்குத்தான் திமுக இருக்கிறதே என்று மக்கள் யோசிப்பார்கள். திமுக பாஜகவுக்குப் பணிந்து விட்டார்கள் (ஒருவேளை நம்புவார்கள்), நானே பாஜகவின் ஒரே எதிரி என்றால் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். தொடர்ந்து ஊழலை முன்னிலைப்படுத்தியது, அதுவும் ஸ்டாலின் ஊழல் செய்கிறார் என்று அதை ஹைலைட் செய்தது, அதிகமாக வரி வாங்குவதாக, அவரது ஆட்சியினால் விலைவாசி அதிகரித்துவிட்டது என்றது மக்களிடம் நேரடியாகப் போய்ச் சேரும் நோக்கில்தான். எனக்கு அவரது இந்தப் பாணி ஜெயலலிதாவின் பிரச்சார பாணியை நினைவுபடுத்தியது. கிட்டத்தட்ட ஜெயலலிதா இருந்தால் பேசுவதைதான் விஜய்யும் பேசுகிறார். விஜய்க்காக செலவு செய்யும் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட எல்லா சேனல்களையும் வளைத்துப் போட்டுவிட்டார்கள். ஏன் ஆங்கிலச் சேனல்களுக்கும் காசு கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இத்தனைக்கும் ஒரு கொந்தளிக்க வைக்கும் பிரச்சினை (76-இல் கலைஞர் மீதான 'விஞ்ஞானபூர்வ ஊழல்' குற்றச்சாட்டு, ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம், தலைவர்களின் அகந்தையான நடத்தை) என ஒன்றுமே இல்லை. ஆனாலும் அப்படி இப்படிப் பேசி ஒரு பிரச்சாரப் போரை நடத்தி முடித்துவிட்டார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது கமல் ஏன் இதை கடந்த தேர்தலில் செய்யவில்லை என்பதே. கமல் தன் தேர்தல் பிரச்சாரம் முழுக்கவே உண்மையில் யாரை எதிர்க்கிறார் என்பதே தெளிவாக இருக்கவில்லை. யாரையும் பேரைச் சொல்லிக் குறிப்பிட்டு இலக்காக்காமல் கொள்கை ரீதியான தூய்மைவாத பிம்பத்தை உருவாக்கி அரசியல் செய்ய முயன்றார். அந்த 'பிட்ச்' தவறாகிப் போயிற்று. இன்று விஜய்க்கு அமைந்ததை விட மிகச்சிறந்த வாய்ப்புகள் அன்று கமலுக்கு இருந்தது. ஆளுங்கட்சி தடுமாறியது. ஜெயலலிதா சந்தேகத்துக்குரிய முறையில் மரணமடைந்திருந்தார். ஒன்றிய அரசு அதிமுக மீதேறி சவாரி செய்தது. ஸ்டாலின் தன்னை நிரூபித்திருக்கவில்லை. அவர் தன் தொகுதியில் வென்றிருக்கவும் முடியும், பாஜகவுக்கும் சீமானுக்கும் போன வாக்குகளை ஹைஜேக் பண்ணி கூடுதல் சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கவும் முடியும். ஆனால் விஜய்க்கு இருப்பதைப் போன்ற தெளிவான இலக்கு அவருக்கு இருக்கவில்லை. அவர் அத்தேர்தலை ஒரு தற்காலிகப் புரோஜெக்டாகப் பார்த்தார் என நினைக்கிறேன். திமுக ஜெயித்ததும் படம் நடிக்கப் போனார். திமுகவிடம் கட்சியை ஒப்படைத்து எம்.பி சீட் பெற்று அங்கும் உடன்பிறப்பாகவே பேசினார். இவ்வளவு செய்துவிட்ட பின்னர் இத்தேர்தலில் அவர் எப்படி கட்சிக்கு தொகுதிகள் கேட்டுப் பெற முடியும்? கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தற்கு சிறந்த சமகால உதாரணமாக 'மையம்' மாறியது.
கமலை அப்படி திமுக வளர்த்து விடுமா என்ன? அமுக்கி விடுவார்கள். அதுதான் நடந்தது. நான் ஆரம்பத்தில் விஜய்யும் தேர்தலுக்குப் பின் உதய்யின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பன்ணுவார், திமுகவிடம் சேர்ந்து அவர்களுக்காகப் பிரச்சாரம் பண்ணுவார் என்று நினைத்தேன். ஆனால் இதற்கு மேல் அவர் அதையெல்லாம் செய்ய மாட்டார் எனத் தோன்றுகிறது. அவரது எதிர்காலத்தைக் கணிக்க இயலவில்லை என்றாலும் அவர் தனியாக நின்று இப்படியான கோமாளித்தனங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார் எனத் தோன்றுகிறது. அடுத்து வரும் ஆட்சியையும் இப்படியே அவர் விமர்சித்து நகைச்சுவை பண்ணிக் கொண்டிருந்தால் அவர் தன்னைத் தக்க வைப்பார்.
இந்தக் கூத்துக்களின் நடுவே கமலை நினைத்தால்தான் பாவமாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...